“ஜனாதிபதி அநுரவின் அணுகுமுறையிலும் செயற்பாட்டிலும் நல்லதொரு மாற்றம் தெரிகின்றது. எனினும், அதனைப் பொறுத்திருந்துதான் நாங்கள் பார்க்கவேண்டும்.”
– இவ்வாறு முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
வவுனியாவுக்கு இன்று விஜயம் செய்த ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, காத்தார்சின்னக்குளம் பகுதியில் கட்சியின் தேர்தல் அலுவலகம் ஒன்றைத் திறந்து வைத்தார். அதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்தப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
“தேசிய நல்லிணக்கம் ஊடாகவே எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். புதிய நாடாளுமன்றத்தில் கூடிய ஆசனங்களைப் பெறுவதன் மூலம் ஆட்சி அமைப்பவர்களுடன் நாங்களும் பங்குகொள்வதன் ஊடாக மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற எமது அரசியல் இலக்கை அடைவதற்காக அந்தத் திசையை நோக்கிப் பயணிக்கலாம் என்ற வகையில் பத்து மாவட்டங்களில் இம்முறை போட்டியிடுகின்றோம்.
இதனூடாக நான்கு அல்லது ஐந்து ஆசனங்களைப் பெறுவது எமது இலக்காக உள்ளது. இதுவரை நான் எட்டு ஜனாதிபதிகளைச் சந்தித்துள்ளேன். ஆனால், ஜனாதிபதி அநுர என்னைவிட வயதில் இளைமையானவர். அவரது அணுகுமுறையிலும் செயற்பாட்டிலும் நல்லதொரு மாற்றம் தெரிகின்றது. எனினும், அதனைப் பொறுத்திருந்துதான் நாங்கள் பார்க்கவேண்டும்.
நாம் வடக்கு – கிழக்கு தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமை பிரச்சினையைப் பிரதானமாக முன்வைத்துள்ளோம்.
இந்தத் தேர்தலில் எமது கட்சி அதிக ஆசனங்களைப் பெறுவதற்கான வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்திருந்தார். சில வேளை இந்தச் சந்திப்பு பலருக்குப் புளியைக் கரைத்திருக்கலாம். நாங்கள் இரு தரப்புமே ஆயுதப் போராட்டத்தின் பின்னர் நாடாளுமன்றம் சென்றவர்கள். அந்தவகையில் ஒரு புரிந்துணர்வு இரு தரப்புக்கும் உள்ளது. அவர்களது ஆட்சியில் கலந்துகொள்ளப் போகின்றோமா என்ற விடயத்தைத் தேர்தலின் பின்னரே தீர்மானிக்க முடியும்.
இதேவேளை, எல்பிட்டியவில் தேசிய மக்கள் சக்தி 15 ஆசனங்களும், எதிர்த்தரப்புக்கள் 15 ஆசனங்களையும் பெற்றுள்ளது. தேசிய மக்கள் சக்தியினர் நாடாளுமன்றத்திலும் பெரும்பான்மை எடுப்பதாகச் சொல்கின்றார்கள். அதனைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஜனாதிபதித் தேர்தலிலும் கணிப்புகள் எல்லாம் பிழைத்து விட்டது. எனவே, பொறுத்திருப்போம்.” – என்றார்.