வடக்கில் அரச நிர்வாகச் செயற்பாடுகளுக்குள் ஜே.வி.பியின் தலையீடுகள் அதிகரிப்பு!

0
4
Article Top Ad
வடக்கில் அரச நிர்வாகச் செயற்பாடுகளுக்குள் ஜே.வி.பி. கட்சியினரின் தலையீடுகள் அதிகரிக்கின்றன என்று பரவலான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பிற்பாடு வடக்கு மாகாணத்தின் அரச நிர்வாகச் செயற்பாடுகளில் ஜே.வி.பி. கட்சியினரின் தலையீடுகள் அதிகரித்துக் காணப்படுகின்றன என்று பலர் தங்களுடைய குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

குறிப்பாக வடக்கு மாகாண ஆளுநராக நா.வேதநாயகன் தனது பொறுப்புக்களை ஏற்றகையோடு வடக்கு மாகாண ஆளுநருக்கும் அரச உயர் அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடலில் ஒன்று ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இதில் ஜே.வி.பியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சந்திரசேகரம் உட்பட கட்சியின் உறுப்பினர்கள் அந்தச் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தமை பலத்தை சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தன.

அதன் பின்னர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க யாழ். பல்கலைக்கழகத்துக்கும் விஜயம் செய்யவுள்ளார் என்ற செய்தியை ஜே.வி.பி. கட்சியினரே நேரடியாகச்  சென்று பல்கலைக்கழக நிர்வாகத்திடம் தெரிவித்திருக்கின்றனர். அரச பல்கலைக்கழகம் ஒன்றுக்குள் ஜனாதிபதியின் வரவை உறுதிப்படுத்த வேண்டியது ஜனாதிபதி செயலகத்தினரா? அல்லது அவர் சார்ந்த கட்சியினரா? என்ற ஒரு கேள்வியை விரிவுரையாளர் பலரும் முன்வைத்திருக்கின்றனர்.

இந்நிலையில், பனை அபிவிருத்திச் சபையினுடைய தலைவர் தெரிவிலும் ஜே.வி.பியின் தலையீடு காணப்படுகின்றது என்று சுரேஷ் பிரேமச்சந்திரனும் குற்றம் சுமத்தியுள்ளார். அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பனை அபிவிருத்திச் சபையின் தலைவராக இரு வாரங்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்டிருந்த இ.செல்வினை மாற்றுவதற்கு ஜே.வி.பியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சந்திரசேகரன் தலைமையில் முயற்சிகள் இடம்பெறுகின்றன என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், பனை அபிவிருத்திச் சபையின் புதிய தலைவராக வி.சகாதேவன் இன்று புதன்கிழமை கடமைகளைப்  பொறுப்பேற்கவுள்ளார்.

இவ்வாறு அரச நிர்வாக சேவைக்குள் ஜே.வி.பியின் தலைமையிலான  தேசிய மக்கள் சக்தியின் தலையீடு அதிகரித்துக்  காணப்படுகின்றது என்றும், ஊழலை ஒழிப்பதாகக் கூறிக்கொண்டு ஆட்சிப்பீடம் ஏறிய அநுரகுமார திஸாநாயக்க, அரச நிர்வாகத்துக்குள் கட்சி முக்கியஸ்தர்கள் தலையிடுவதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றார் என்ற கேள்வியைப் பலரும் எழுப்பி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here