அறுகம்பேவில் உள்ள சுற்றுலா ஹோட்டல்களை இலக்குவைத்து தாக்குதல் நடத்தப்படலாம் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் கடந்த 24ஆம் திகதி அறிவித்திருந்த நிலையில், இந்த தாக்குதல் குறித்த புலனாய்வுத் தகவலை இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு அமைப்பின்னரே முதலில் கண்டறிந்து அமெரிக்க புலனாய்வுத் துறையான எப்.பி.ஐ க்கு தெரியப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அறுகம்பேவில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளை இலக்குவைத்து தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால் அங்கு எவரும் செல்ல வேண்டாம் என கடந்த 24ஆம் திகதி இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங், இலங்கையில் உள்ள அமெரிக்க பிரஜைகளுக்கு அறிவுறுத்தியிருந்தார்.
இந்த அறிவிப்பை தொடர்ந்து சில தாக்குதல் திட்டங்கள் தொடர்பிலான தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை பொலிஸார் அறிவித்ததுடன், இஸ்ரேலிய பிரஜைகளை இலக்கு வைத்தே இவ்வாறான தாக்குதல்களுக்கு திட்டமிட்டிருப்பதாகவும் பொலிஸார் கூறினார்.
இந்த நிலையில், தாக்குதல் திட்டம் தொடர்பில் இஸ்ரேலின் புலனாய்வு சேவையான மொசாட் அமைப்பே முதலில் கண்டறிந்துள்ள குறித்த தகவலை அமெரிக்க புலனாய்வு துறைக்கு வழங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2019ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் இந்தியாவின் உளவுத்துறையான ‘ரா‘ தகவல்களை முதலில் வழங்கியிருந்தது. ரா அமைப்பே அறுகம்பே தாக்குதல் தொடர்பான தகவல்களை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
என்றாலும், ரா இந்த தாக்குதல் பற்றிய தகவலை வெளியிடவில்லை என்பதுடன், இஸ்ரேலின் உளவுத்துறையான ‘மொசாட்’ மூலம் அமெரிக்காவுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் கடுமையான மோதல்கள் ஏற்பட்டுள்ள சூழலில் உலகின் முதல்தர உளவுத்துறையான இஸ்ரேலின் மொசாட் உளவுத்துறைக்கு ஒரு பெரிய பொறுப்பை ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா தலைவர்களை கொல்வதற்கான உளவுத் தகவல்களை இஸ்ரேலுக்கு துல்லியமாக மொசாட் வழங்க வேண்டும் என்பதே அந்தப் பொறுப்பு. மொசாட்டின் உளவு தகவல்களின் பிரகாரம்தான் காசா, லெபனான், ஈரான், சிரியா இலக்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மொசாட் அமைப்பினால் கண்டுபிடிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுகளில் ஒன்று, இஸ்ரேலியன் தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக இஸ்ரேலுக்கு வெளியே வாழும் இஸ்ரேலியர்களை குறிவைத்து தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்த ஹெஸ்புல்லா அமைப்பு திட்டமிட்டுள்ளமை தொடர்பிலானது.
மத்திய கிழக்கு போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கும் அமெரிக்கா உட்பட ஐரோப்பியர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தும் திட்டம் இருப்பதாக மொசாட் உளவுத்துறை தெரிவித்துள்ளது.
அவ்வாறான தாக்குதல்களை மிக இலகுவாக மேற்கொள்ளக்கூடிய நாடாக இலங்கையை அடையாளப்படுத்தியுள்ள ஹிஸ்புல்லா அமைப்பு, இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் நடமாடும் அறுகம்பை, எல்ல, வெலிகம உட்பட பல பிரதேசங்களில் இவ்வாறான தாக்குதல்கள் நடத்தப்பட திட்டமிட்டிருந்தாகவும் கண்டறிந்துள்ளனர்.
இந்த தகவலை கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர், மொசாட் அமெரிக்க உளவுத்துறையான எப்.பி.ஐ தெரிவித்துள்ளதாகவும் அதன் பின்னர் எப்.பி.ஐ என் ஊடாக இலங்கையின் புலனாய்வுத் துறைக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.