களைகட்டப்போகும் பொதுத் தேர்தல் இரண்டு வாரங்களுக்கு தீவிர பிரச்சாரம்

0
16
Article Top Ad

பொதுத் தேர்தல் எதிர்வரும் 14ஆம் திகதி இடம்பெற உள்ள நிலையில், இன்றுமுதல் இரண்டு வாரங்கள் பிரதான மற்றும் ஏனைய அரசியல் கட்சிகளும், சுயேச்சைக் குழுக்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளன.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு கடந்த 30ஆம் திகதி ஆரம்பமானது. இன்று முதலாம் திகதி மற்றும் 4ஆம் திகதியும் தபால் மூல வாக்களிப்பு இடம்பெற உள்ளது. இந்த தினங்களில் வாக்களிக்க முடியாதவர்கள் எதிர்வரும் 7ஆம் 8ஆம் திகதிகளில் வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.

இந்த நிலையில், கடந்த ஜனாதிபதித் தேர்தலை போன்று தேர்தல் பிரச்சாரங்கள் பொதுத் தேர்தலில் இன்னமும் சூடுபிடிக்கவில்லை. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி மாத்திரமே மாவட்டம் தோறும் பிரமாண்ட பொதுக் கூட்டங்களை நடத்தி வருகிறது.

ஏனைய கட்சிகள் சிறிய சிறிய கூட்டங்களையே நடத்தி வருகின்றன. என்றாலும், ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான தரப்பினர் இன்று முதல் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு பிரமாண்ட கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இந்தக் கூட்டங்களில் ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்திக்கு எதிரான கடும் கருத்தியல் போரை தொடுக்கவும் இக்கட்சிகள் தீர்மானித்துள்ளன.

ரணில் விக்ரமசிங்க கடந்த வாரம் முதல் ஆளுங்கட்சியை கடுமையாக விமர்சித்து வருவதுடன், கடும் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து வருகிறார்.

குறிப்பாக அரச ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பில் தமது அரசாங்கம் பல எடுத்திருந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென அழுத்தமான கருத்துகளையும் முன்வைத்து வருகிறார். அதேபோன்று முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் தேசிய மக்கள் சக்தி மீது விமர்சனங்களை முன்வைக்க ஆரம்பித்துள்ளார்.

இந்த நிலையில், இந்த வாரம் முதல் ஏனைய கட்சிகளும் தீவிர பிரச்சாரக் கூட்டங்களை நடத்த உள்ளதால் தேர்தல் களம் சூடுபிடிக்கும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.