சமஷ்டியே தீர்வு எனக் கூறும் தமிழரசு இருக்கும்போது நிழல் கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டிய தேவை எதுவுமில்லை

0
13
Article Top Ad

“அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியினர் கூட சமஷ்டியே தீர்வு என ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆகவே, சமஷ்டியே தீர்வு எனக் கூறி வந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியான அசல் நாங்கள் இருக்கும்போது நிழல்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டிய தேவையில்லை.”

– இவ்வாறு யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ் . ஊடக அமையத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“மாற்றத்துக்கான தேர்தல் எனச் சொல்லப்படுகின்றது. மாற்றத்தின் ஆரம்பம் என ஜனாதிபதித் தேர்தலைச் சொல்கின்றனர். ஒருவகையில் அது சரிதான். காலம் காலமாக இரண்டு கட்சிகள்தான் மாறி மாறி ஆட்சி செய்த காலத்தில் இருந்து, தற்போது பாரிய மாற்றமாக மூன்றாவது தரப்பு ஆட்சியைப் பிடித்துள்ளது.

அவர்கள் ஆட்சியைப் பிடிக்க ஒரு தடவை அல்ல இரண்டு தடவைகள் ஆயுதம் ஏந்திப் போராடியவர்கள். ஊழல் கேடான அரசியலில் இருந்து மாற்றம் வேண்டும் என மக்கள் விரும்பினார்கள். அதனால்தான் 69 இலட்சம் மக்களின் வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாக இருந்த வரை நாட்டை விட்டுத் துரத்தினர்

அப்படிச் செய்தும் மக்கள் எதிபார்த்த மாற்றம் வராததால் இரண்டரை வருடங்கள் காத்திருந்து, தேர்தல் ஊடாக மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளனர்.

மாற்றம் வேண்டும் என மக்கள் விரும்பினார்கள். அவர்கள் முன் தேசிய மக்கள் சக்தியினர் மட்டுமே இருந்தனர். அதனால் மக்கள் அவர்களுக்கு வாக்களித்தனர்.

ஆனால், தமிழ் மக்கள் வாழ்க்கையில் அரசியலில் 75 வருடங்களுக்கு மேலாக நாங்கள் மாற்றத்தைத் தேடுகின்றோம். அதற்காகப் பல வழிகளில் போராடி, பல உயிர்களை  இழந்துள்ளோம்.

எங்களுடைய மக்கள் 75 வருட காலமாக நியாயமான அரசியல் மாற்றத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். தமிழ் மக்கள் விரும்பிய இந்த அரசியல் மாற்றத்துக்குத் தெற்கு மக்கள் பங்குதாரர்களாக வரவில்லை.

ஜனாதிபதித் தேர்தல் முடிவின் வரைபடத்தில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் கிடைத்த வாக்குகளில் பெரிய வித்தியாசம் இல்லை என்பது தெளிவாகத்  தெரியும். அதாவது  சிங்கவர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளைத்த தவிர ஏனைய பகுதியில் அநுரவுக்கு வாக்குகள் கிடைக்கவில்லை.

வடக்கு, கிழக்கு மக்கள் 75 வருட காலமாக ஒரே நிலைப்பாட்டில்தான் உள்ளனர். அதிகாரங்கள் சரியாகப் பகிர்ந்து அளிக்க வேண்டும் என்ற  நிலைப்பாட்டில் வடக்கு, கிழக்கு மக்கள் உள்ளனர்.

சமஷ்டி கட்டமைப்பாக அது மாற வேண்டும். அந்த நிலைப்பாட்டை நாங்கள் முன்கொண்டு செல்ல நாடாளுமன்றத்துக்கு மிகப் பெரும் பலத்துடன் செல்ல வேண்டும்.

சமஷ்டி என்ற எண்ணத்தையே இழிவாகப் பேசி அதனைப் பழித்து உரைத்துக்கொண்டிருந்த அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கூட சமஷ்டிதான் தீர்வு என ஏற்றுக்கொண்டுள்ளனர்

எனவே, நாம் முன்வைத்த சமஷ்டி தீர்வையே அனைத்து தமிழ் கட்சிகளும் இன்றைக்கு ஏற்றுக்கொண்டுள்ளனர்.

எனவே, அசல் நாங்கள் இருக்கும்போது நிழலுக்கு வாக்களிக்க வேண்டிய தேவையில்லை.” – என்றார்.