காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஜனாதிபதிக்கு சவால்

0
3
Article Top Ad

தென்னிலங்கையில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தமது அன்புக்குரியவர்களை நினைவுகூருவதற்காக ஒதுக்கப்பட்ட தினத்தில், புதிய ஜனாதிபதிக்கு காணாமற்போனோர் குடும்ப ஒன்றியம் சவால் ஒன்றை விடுத்துள்ளது.

தமது உறவினர்களை நினைவு கூர வருமாறு விடுத்த கோரிக்கையை புறக்கணித்த ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவிடம், மக்கள் விடுதலை முன்னணியின் முன்னோடிகளின் மரணம் தொடர்பில் விசாரணை நடத்தி உண்மையை வெளிப்படுத்த வேண்டுமென, காணாமற்போனோரின் குடும்ப ஒன்றியத்தின் தலைவரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான பிரிட்டோ பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

“சகோதரர் ரோஹன விஜேவீரவின் மரணம் தொடர்பில் நியாயமான விசாரணையை நடத்தி என்ன நடந்தது என்பது பற்றிய உண்மையை வெளிப்படுத்துமாறு நான் அனுர குமாரவுக்கு சவால் விடுகின்றேன். ஏனென்றால் என்ன நடந்தது என்பது நம் அனைவருக்கும் தெரியும்.
ஆனால் எங்கும் அதுத் தொடர்பில் பேச்சு இல்லை. அப்படியானால் இது ஒரு சவால்.”

தென்னிலங்கையில் காணாமல் போனவர்களில் பெரும்பாலானோர் அனுர குமார திஸாநாயக்க தலைமையிலான ஜே.வி.பி உறுப்பினர்களாகவும் அவர்களின் நண்பர்களாகவும் கருதப்படுகின்றனர்.

இலங்கையில் காணாமல் போனவர்களை நினைவு கூரும் வகையில் சீதுவ-ரத்தொலுவையில் அமைந்துள்ள நினைவு சின்னத்தில், காணாமற்போனோரின் குடும்ப ஒன்றியத்தின் தலைவரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான பிரிட்டோ பெர்னாண்டோவின் ஏற்பாட்டில், தெற்கில் உள்ள சிங்கள தாய்மார்கள் 2024ஆம் ஆண்டு ஒக்டோபர் 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை 34ஆவது தடவையாக தமது அன்புக்குரியவர்களை நினைவு கூர்ந்தனர்.

“மாற்றத்தை ஏற்போம் – போராட்டத்தை கைவிட மாட்டோம்! காணாமல் ஆக்கப்பட்டோரின் 34வது வருடாந்த நினைவேந்தல்” என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நினைவேந்தல் நிகழ்விற்கு காணாமல் போனவர்களின் குடும்பங்கள் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்திருந்த போதிலும், அவர் அதில் கலந்துகொள்ளவில்லை.

காணாமற்போனோர் விடயத்தில் தற்போதைய அரசாங்கத்திற்கு அதிக பொறுப்பு இருப்பதாக இங்கு உரையாற்றிய பிரிட்டோ பெர்னாண்டோ, குறைந்தபட்சம் ஜனாதிபதி இந்த நினைவேந்தலுக்கான செய்தியையேனும் அனுப்பவில்லை என வருத்தம் வெளியிட்டார்.

மக்கள் விடுதலை முன்னணியின் முன்னணி தொழிற்சங்கத் தலைவரும் தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினருமான மஹிந்த ஜயசிங்க இந்த நினைவேந்தலில் கலந்து கொண்ட போதிலும், ஜனாதிபதியின் பிரதிநிதியாக அவர் பங்கேற்கவில்லை என பிரிட்டோ பெர்னாண்டோ அறிவித்தார்.

“இறுதியாக நான் சொன்னேன், உங்களால் வரமுடியவில்லையென்றால், ஒரு சிறிய செய்தியை அனுப்புங்கள், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என, ஒரு செயலாளரை அல்லது எவரையாவது அனுப்புங்கள் என சொன்னேன். சகோதரர் மஹிந்த வந்ததில் மகிழ்ச்சி, ஆனால் அவருக்கு உரையாற்ற வாய்ப்பு கொடுக்க முடியாது. அவர் ஜனாதிபதியிடமிருந்து ஒரு செய்தியையேனும் கொண்டு வரவில்லை” என பிரிட்டோ பெர்னாண்டோ கூறினார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தனது சக தென்னிலங்கை சிங்கள மக்களை நினைவுகூருவதற்கு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க வருகைத்தராமையால் “சிறிது ஏமாற்றம்” அடைந்த பிரிட்டோ பெர்னாண்டோ, தென்னிலங்கை அம்மாக்களை மிகுந்த நம்பிக்கையுடன் முன்னோக்கிச் செல்ல பலப்படுத்தியதோடு ஜனாதிபதி வருகைத்தந்திருந்தால் இன்னும் மூன்று தசாப்தங்களுக்கு போராட்டத்தை தொடர பலமாக அமைந்திருக்கும் எனவும் தெரிவித்தார்.

“நான் இன்னும் நினைக்கின்றேன், இந்த அம்மாகள் இன்னும் நினைக்கின்றார்கள் அனுர வந்திருந்தால் நல்லதல்லவா? ஒரு நிமிடம், ஒரே நிமிடம் வந்து, தாய்மாரே, தந்தைமாரே, நான் இதனை கைவிடபோவது இல்லை என சொல்லியிருந்தால் அது எங்களுக்கு தைரியத்தை கொடுத்திருக்கும். நாங்கள் 30 ஆண்டுகளாக இதனை (போராட்டத்தை) பிடித்துக் கொண்டிருக்கும் நாம், இன்னும் 30 ஆண்டுகளுக்கு எங்களுக்கு இதனை பிடித்துக்கொண்டிருக்கும் தைரியம் கிடைத்திருக்கும்.”

இந்த நினைவேந்தல் நிகழ்வில் காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டதாக கொழும்பில் இருந்து ரத்தொலுவைக்குச் சென்று அறிக்கையிட்ட தலைநகரின் ஊடகவியலாளர்கள் தெரிவித்தனர்.

புகைப்படங்கள் – ரொசான் சதுரங்க

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here