தமிழீழ விடுதலைப் புலிகளின் சித்தாந்தங்கள் இலங்கையில் தோற்கடிக்கப்பட்டிருந்தாலும் அவை உலகில் இன்னமும் உயிர்ப்புடனே இருக்கின்றன. உலகில் மிகவும் கொடூரமான பயங்கரவாத அமைப்பாக இருந்த இவர்களை தோற்கடித்த தலைவர் என்பதாலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு அதிமுக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்பு அவசியமாக உள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வலியுறுத்தியுள்ளது.
மஹிந்த ராஜபக்சவின் உயிருக்கு சிறிய ஆபத்தேனும் ஏற்பட்டால் அதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் அவரது அரசாங்கமுமே பொறுப்புக்கூற வேண்டும் எனவும் பொதுஜன பெரமுன எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்ஜீவ எதிரமான்ன இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
முன்னாள் ஜனாதிபதி என்பதற்காக மாத்திரமல்ல மஹிந்த ராஜபக்சவுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர் யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவந்த தலைவர். யுத்தத்தை ஒழித்த தலைவருக்கு கிடைக்க வேண்டிய பாதுகாப்புதான் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த உலகத்தில் இயங்கிய மிகவும் தீவிரமான ஒரு பயங்கரவாத அமைப்பையே மஹிந்த ராஜபக்ச தோற்கடித்திருந்தார். உலகில் மிகவும் கொடூரமான பயங்கரவாத அமைப்பாக விடுதலைப் புலிகளை கூறியது இலங்கை இராணுவம் அல்ல. அமெரிக்காவின் எப்.பி.ஐ புலனாய்வுத் துறைதான் இதனைக் கூறியிருந்தது.
நடுகடலில் தாற்கொலை தாக்குதல்களை நடத்துபவர்கள் உலகில் வேறு எந்தவொரு பயங்கரவாத அமைப்பிலும் இருந்திருக்கவில்லை. சிறுவர் போராளிகள் ஊடாக கொரில்லா தாக்குதல்களை நடத்தும் செயல்பாடுகள் வேறு பயங்கரவாத அமைப்புகளிடம் இருக்கவில்லை.
கடல், வான் மற்றும் தரை வழியில் கொடூரமான தாக்குதல்களை நடத்திய பயங்கரவாத அமைப்பான விடுதலைப் புலிகளை தோற்கடித்தவரே மஹிந்த ராஜபக்ச. உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் பிரதமரை படுகொலை செய்ததும் புலிகள்தான். இலங்கையின் ஜனாதிபதி ஒருவரை நடுவீதியில் குண்டுவைத்து கொன்றனர். சந்திரிகா மீது தாக்குதல் நடத்தினர்.
தமிழீழ விடுதலைப்பு வடக்கு, கிழக்கிலும் இந்த நாட்டிலும் தோற்கடிக்கப்பட்டாலும் அவர்களது சித்தாந்தம் உலகில் தோற்கடிக்கப்படவில்லை. ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகள் ஏன் விடுதலைப் புலிகளை தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவித்து வருகின்றனர். அமெரிக்கா, இந்தியா, பிரித்தானியா, மலேசியா போன்ற நாடுகள் ஏன் புலிகளை தடை செய்யப்பட்ட அமைப்பாக தொடர்ந்து அறிவித்து வருகின்றன.
அவர்களது தலையில் ஏதாவது பிரச்சினை உள்ளதா?. அவர்களின் சித்தாந்தங்கள் இன்னமும் உயிர்ப்புடன் இருப்பதாலேயே தடை செய்யப்பட்ட அமைப்பாக புலிகளை அறிவிக்கின்றனர். அதன் காரணமாகவே மஹிந்த ராஜபக்சவுக்கு பாதுகாப்பு அவசியமாக உள்ளது.
பாதுகாப்பு குறைப்பதற்கு தர்க்க ரீதியான மற்றும் விஞ்ஞான ரீதியான ஆய்வுகள் அவசியம். சமகால அரசாங்கம் மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பை குறைக்க இத்தகைய ஆய்வுகளை மேற்கொண்டதா?. மஹிந்த ராஜபக்சவின் உயிருக்கு சிறிய ஆபாத்தேனும் ஏற்பட்டால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் அவரது அரசாங்கமும்தான் பொறுப்புக்கூற வேண்டும்.” என்றார்.