அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவு ஒட்டுமொத்த உலகையும் எவ்வாறு மாற்றும்?

0
37
Article Top Ad

 

உலகமே அதிகமாக உற்றுநோக்கிக் கொண்டிருக்கும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் (நவம்பர் 5 ) இன்னமும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் பெறுபேறுகள் உலகில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தப் போகின்றது என்ற அவதானிப்புக்கள் வெளியாகியுள்ளன.

யுக்ரேன் ஜனாதிபதி வொலோதிமிர் ஸெலன்ஸ்கிக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, கடந்தாண்டு பிப்ரவரி மாதம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், கீயவ் நகருக்கு சென்றபோது, வான்வழித் தாக்குதல் எச்சரிக்கைக்கான சைரன் ஒலித்தது. ‘இதற்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் வலுவாக ஒன்றை உணர்ந்தேன்’ என அவர் பின்னர் நினைவுகூர்ந்தார். ‘அமெரிக்கா உலகிற்கு கலங்கரை விளக்கமாக திகழ்கிறது’ என்று அவர் கூறிக்கொண்டார்.

கலங்கரை விளக்கம் என தனக்குத் தானே கூறிக்கொள்ளும் அந்நாட்டில் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க அமெரிக்கர்கள் தயாராகி வருகின்றனர். அந்நாட்டின் தலைமைப் பொறுப்புக்கு யார் வரவுள்ளார் என்பதை உலகமே காண காத்துக்கொண்டிருக்கிறது. ‘இந்த நிச்சயமற்ற காலக்கட்டத்தில், அமெரிக்கா பின்வாங்காது என்பதில் தெளிவாக இருக்கிறது’ என்று பைடனின் நிலைப்பாட்டை உறுதியாக பின்பற்றும் கமலா ஹாரிஸ் ஜனாதிபதி ஆவாரா? அல்லது ‘உலகமயம் அல்ல அமெரிக்கவாதத்திற்கே முன்னுரிமை’ (Americanism, not globalism) எனும் தன் நம்பிக்கையுடன் டொனால்ட் டிரம்ப் வெல்வாரா?

சர்வதேச அளவிலான செல்வாக்கில் அமெரிக்காவின் மதிப்பு கேள்விக்குறியாகியுள்ள சூழலில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். பிரதேச அளவில் அதிகாரம் செலுத்தும் சக்திகள்இ தத்தமது வழியில் சென்றுகொண்டிருக்கின்றன. எதேச்சதிகார ஆட்சிகள் தங்களுடைய சொந்த கூட்டணிகளை உருவாக்குகின்றன. காஸா, யுக்ரேன் மற்றும் மற்ற பகுதிகளில் நடக்கும் பேரழிவுகரமான போர்கள் அமெரிக்காவின் பங்கு குறித்து அந்நாட்டிற்கு தர்மசங்கடமான கேள்விகளை எழுப்புகின்றன.

ஆனால், அமெரிக்காவின் பொருளாதாரம் மற்றும் ராணுவ பலம் மட்டுமல்லாமல், பல்வேறு சர்வதேச கூட்டணிகளில் வகிக்கும் குறிப்பிடத்தகுந்த பங்கும் அந்நாட்டை முக்கியமானதாக ஆக்குகிறது. இந்த தேர்தலால் உலகளவில் ஏற்படப் போகும் விளைவுகள் பற்றி, அதுகுறித்து அறிந்த நோக்கர்களிடம் நான் கருத்துகளை பெற்றேன்.

“இந்த எச்சரிக்கைகளை என்னால் குறைத்து மதிப்பிட முடியாது,” என்கிறார், நேட்டோ அமைப்பின் முன்னாள் துணை பொதுச் செயலாளர் ரோஸ் கோட்டேமோயெல்லர். “நேட்டோவிலிருந்து வெளியேறிவிடுவோம் என்ற டிரம்பின் அச்சுறுத்தல் அனைவருடைய காதுகளிலும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது, ஐரோப்பாவின் கொடுங்கனவாக அவர் இருக்கிறார்.” என்று அவர் கூறுகிறார்.

அமெரிக்கா பாதுகாப்புக்காக செலவிடும் மொத்த தொகையில் மூன்றில் இரண்டு பங்கு நேட்டோவின் மற்ற 31 உறுப்பினர் நாடுகளுக்கானது. நேட்டோவிற்கு அப்பால், சீனா மற்றும் ரஷ்யா உட்பட 10 நாடுகளையும் சேர்த்து அமெரிக்கா தனது ராணுவத்திற்காக அதிக செலவு செய்கிறது.

தாங்கள் செலவிடுவதற்கான இலக்கை, அதாவது தங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2% எனும் இலக்கை அடைவதற்கு நேட்டோவின் மற்ற உறுப்பினர் நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்க தான் கடினமான யுக்திகளை கையாளப் போவதாக டிரம்ப் கூறுகிறார். இந்த இலக்கை 23 உறுப்பினர் நாடுகள்தான் அடைந்துள்ளன. எனினும் அவர் இத்தகைய அதிர்ச்சிகரமான கருத்துகளை கூறிவருகிறார்.

கமலா ஹாரிஸ் வென்றால், “நேட்டோ அமெரிக்காவின் கவனிப்பில் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை” என்கிறார் ரோஸ் கோட்டேமோயெல்லர். “யுக்ரேனில் வெற்றி பெற நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் தொடர்ந்து பணியாற்ற அவர் தயாராக இருப்பார். ஆனால், ஐரோப்பாவின் செலவினங்களை அதிகரிக்க அவர் தொடர்ந்து அழுத்தம் கொடுப்பார்.” என்று அவர் கூறுகிறார்.

ஆனால், வெள்ளை மாளிகையில் இருக்கும் ஹாரிஸ் நிர்வாகத்தினர் செனட் மற்றும் பிரதிநிதிகள் அவையுடன் இணைந்து பணியாற்ற வேண்டியிருக்கும். ஏனெனில், இந்த இரண்டு அவைகளும் விரைவில் குடியரசு கட்சியினரின் கட்டுப்பாட்டுக்குள் செல்லும் வாய்ப்பு அதிகம். அக்கட்சி ஜனநாயக கட்சியை போல் அல்லாமல் வெளிநாட்டு போர்களை ஆதரிப்பது குறைவாக இருக்கும். பெரியளவிலான உதவிகளுக்கு ஒப்புதல் அளிப்பதில் அமெரிக்க சட்டமியற்றுபவர்கள் தயக்கம் காட்டுவதால், அடுத்த அதிபராக யார் வந்தாலும், இந்த போரிலிருந்து வெளியேறுவதற்கான வழியை கண்டறிவதற்கான அழுத்தம் யுக்ரேனுக்கு அதிகரிக்கும் என்ற கருத்தும் நிலவுகிறது,” என்கிறார் ரோஸ் கோட்டேமோயெல்லர்.

சமாதான தூதரா?

அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி  பனிப்போருக்குப் பின்னர் பெரும் அதிகார மோதலின் மிகப்பெரிய ஆபத்தை எதிர்கொள்ளும் உலகில் பணியாற்ற வேண்டும்.

‘அமைதி மற்றும் பாதுகாப்பு போன்ற விவகாரங்களில் மிகப்பெரும் விளைவுகளை ஏற்படுத்தவல்ல சர்வதேச நாடாக அமெரிக்கா நீடிக்கிறது’ என சர்வதேச நெருக்கடி குழு ( International Crisis Group) எனும் நிறுவனத்தின் தலைவரும் தலைமை செயல் அதிகாரியுமான கம்ஃபோர்ட் எரோ என்னிடம் தெரிவித்தார். ‘ஆனால், மோதல்களை தணிப்பதற்கு உதவுவதற்கான அதன் அதிகாரம் குறைந்துவிட்டது’ என்ற எச்சரிக்கையையும் அவர் விடுக்கிறார்.

போர்களை முடிவுக்குக் கொண்டு வருவது கடினமாகி வருகிறது. ‘மத்தியஸ்தம் செய்ய வல்ல சக்திகள் அதிகரித்துவருவதாலும் அதிகார போட்டி தீவிரமடைந்துள்ளதாலும், பேரழிவுகரமான மோதல்கள் தீர்க்க முடியாதவையாக உள்ளனஇ’ என்றுதான் எரோ இச்சூழல் குறித்து விவரிக்கிறார். யுக்ரேன் போர் பல அதிகார மையங்களை ஈர்க்கின்றன. அதேநேரத்தில் சூடானில் நடைபெறும் மோதல்களில் பிரதேச அளவிலான எதிரிகள் ஒருவருக்கொருவர் எதிராக நிற்கின்றனர். இவற்றில் பலவும் அமைதியை விட போரையே அதிகம் விரும்புகின்றன.

அமெரிக்கா தன் தார்மீக மேன்மையை இழந்துவருவதாக எரோ குறிப்பிடுகிறார். ‘யுக்ரேனில் ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்கு ஒரு நிலைப்பாட்டையும் காஸாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு வேறொரு நிலைப்பாட்டையும் எடுப்பதை சர்வதேச நாடுகள் கவனித்து வருகின்றன. சூடானில் போர் காரணமாக மோசமான அட்டூழியங்கள் ஏற்பட்டன ஆனால் அது இரண்டாம் நிலைப் பிரச்னையாக பார்க்கப்படுகிறது.’ என்கிறார் அவர்.

எரோ கூறுகையில் ‘கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவது தற்போதைய நிர்வாகம் தொடர்வதையே குறிக்கும்’ என்கிறார். ‘டிரம்ப் வெற்றி பெற்றால் காஸா மற்றும் மற்ற பகுதிகளில் இஸ்ரேலுக்கு மேலும் சுதந்திரத்தை வழங்கும். மேலும் அவர் யுக்ரேன் ஒப்பந்தம் தொடர்பாக ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சிக்கலாம்.’ என்றார்.

‘தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கு இஸ்ரேலுக்கு உரிமை இருக்கிறது’ என இஸ்ரேலுக்கு ஆதரவான பைடனின் உறுதிப்பாட்டையே மீண்டும் மீண்டும் எதிரொலிக்கிறார் ஹாரிஸ். ஆனால் ‘அப்பாவி பாலத்தீன மக்களை கொல்வது நிறுத்தப்பட வேண்டும்’ எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

‘அமைதிக்கு திரும்பவும் மக்களை கொல்வதை நிறுத்துவதற்குமான நேரம் இது’ என டிரம்பும் கூறியுள்ளார். ‘ஆனால் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் ‘நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்யுங்கள்’ என அவர் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தான் சமாதான தூதராக இருப்பதாக டொனால்ட் டிரம்ப் பெருமை கொள்கிறார். ‘மத்திய கிழக்கில் விரைவில் நான் அமைதியை நிலைநாட்டுவேன்இ’ என சௌதி அரேபியாவின் அல் அரேபியா தொலைக்காட்சிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில் உறுதியளித்தார்.

2020 ஆபிரகாம் ஒப்பந்தத்தை விரிவுபடுத்த அவர் உறுதியளித்துள்ளார். இந்த இருதரப்பு ஒப்பந்தங்கள் இஸ்ரேல் மற்றும் சில அரபு நாடுகளுடனான உறவை இயல்பு நிலைக்குக் கொண்டுவந்துள்ளன. ஆனால்இ அவை பாலத்தீனர்களை புறக்கணித்ததாகவும் அதன் விளைவாக முன்னெப்போதும் இல்லாத வகையிலான மோதலுக்கு வழிவகுத்ததாகவும் பரவலாக பார்க்கப்படுகிறது.

யுக்ரேனை பொருத்தவரையில் விளாடிமிர் புதின் போன்ற பலம் வாய்ந்த தலைவர் மீதான அபிமானத்தை டிரம்ப் எப்போதும் மறைத்ததில்லை. அமெரிக்காவின் குறிப்பிடத்தக்க ராணுவ மற்றும் நிதியுதவியுடன் யுக்ரேனில் போரை முடிவுக்குக் கொண்டு வர விரும்புவதாக அவர் தெளிவுபடுத்தியுள்ளார். ‘இதை நான் செய்துமுடிப்பேன், நாம் செய்து முடிப்போம்’ என சமீபத்திய கூட்டமொன்றில் அவர் தெரிவித்தார்.

அதற்கு முரணாக ஹாரிஸ் கூறுகையில் ‘யுக்ரேனுடன் துணைநிற்பதை நான் பெருமையாக கருதுகிறேன். யுக்ரேனுடன் தொடர்ந்து உடன் நிற்பேன். போரில் யுக்ரேன் வெற்றி பெறுவதை உறுதி செய்வதற்காக நான் பணியாற்றுவேன்’ என்றார்.

யார் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டாலும் நிலைமை இன்னும் மோசமாகக் கூடும் எனஇ எரோ வருந்துகிறார்.

சீனாவுடனான வர்த்தகம்

‘பல தசாப்தங்களுக்கு உலக பொருளாதாரத்தில் மிகப்பெரும் அதிர்ச்சியாக இருக்கும்.’

– இறக்குமதி செய்யப்படும் சீன பொருட்கள் மீது 60 சதவிகிதம் வரி விதிப்பதற்கான டிரம்பின் முன்மொழிவு குறித்த சீனாவின் முன்னணி வரலாற்று அறிஞர் ரானா மிட்டரின் கருத்து இதுதான்.

‘அமெரிக்காவுக்கு முன்னுரிமை’ (‘America First’) எனும் டிரம்பின் அணுகுமுறையில் சீனா மற்றும் மற்ற வணிக கூட்டாளி நாடுகள் மீது அதிகப்படியான வரி விதிப்பது என்ற அவரது உறுதியான நிலைப்பாடு ஆபத்தான ஒன்றாகும். ஆனால் சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் தனக்கு தனிப்பட்ட முறையில் வலுவான தொடர்பு இருப்பதாக அவர் கருதுவதை டிரம்ப் பாராட்டவும் செய்கிறார். அவர் வால் ஸ்ட்ரீட் இதழின் ஆசிரியர் குழுவிடம்இ தைவானை முற்றுகையிடுவதை நோக்கி சீனா நகர்ந்தால்இ தான் ராணுவ சக்தியைப் பயன்படுத்த வேண்டியதில்லை எனவும் ஏனெனில் சீனத் தலைவர் ‘என்னை மதிக்கிறார்இ மேலும் நான் கணிக்க முடியாத நபர் (Crazy) என்று அவருக்குத் தெரியும்.’ என்றார்.

ஆனால்இ ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சிகளின் முன்னணி தலைவர்கள் ஆக்ரோஷத்துடன் உள்ளனர். மிக முக்கியமான சக்தியாக அமெரிக்கா இருப்பதை சீனா மறைக்க முயற்சிப்பதாக இரு கட்சிகளும் கருதுகின்றன.

ஆனால் ஹார்வர்டு கென்னடி பள்ளியில் அமெரிக்க-ஆசிய உறவுகள் குறித்த எஸ்டி லீ அமர்வின் தலைவரான பிரிட்டிஷ் வரலாற்று அறிஞரான மிட்டர் சில வித்தியாசங்களை பார்க்கிறார். ‘இருநாட்டு உறவை கமலா ஹாரிஸ் தற்போதைய நிலையுடன் ஒரே நேரான விதத்தில் எடுத்துச் செல்லலாம்’ என்கிறார் அவர். டிரம்ப் வெற்றி பெற்றால், இன்னும் ‘அதிக நெகிழ்வுத்தன்மையுடன் இருக்கும்.’ உதாரணமாக, தைவானில் அமெரிக்காவிலிருந்து வெகு தொலைவில் உள்ள ஒரு தீவின் பாதுகாப்புக்காக டிரம்ப் நிற்பாரா என்பது பற்றிய தெளிவற்ற தன்மையை மிட்டர் சுட்டிக்காட்டுகிறார்.

கமலா ஹாரிஸ் மற்றும் டிரம்ப் இருவரும் கடுமையாகவே நடந்துகொள்வார்கள் என சீன தலைவர்கள் நம்புகின்றனர். நாட்டின் அதிகார அமைப்பினரின் சிறு குழு, ‘தெரிந்த எதிரியே மேலானது’ என்ற கூற்றின்படி, ஹாரிஸையே ஆதரிப்பதாக மிட்டர் கருதுகிறார். இது சாத்தியமில்லை என்று தோன்றினாலும், கணிசமான சிறுகுழுவினர் டிரம்பை ஒரு தொழிலதிபராகக் கருதுகின்றனர், இதனால் அவருடைய கணிக்க முடியாத தன்மை சீனாவுடன் பெரும் ஒப்பந்தத்திற்கு வழிவகுக்கலாம் என அவர்கள் கருதுகின்றனர்.

காலநிலை நெருக்கடி

‘காலநிலை மற்றும் இயற்கைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக, அமெரிக்க தேர்தல் அதன் குடிமக்களுக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த உலகத்திற்கும் விளைவுகளை ஏற்படுத்தும்’ என நெல்சன் மண்டேலாவால் நிறுவப்பட்ட உலக தலைவர்களின் குழுவான எல்டர்ஸ் அமைப்பின் தலைவரும் ஐநா மனித உரிமைகள் முன்னாள் உயர் ஆணையரும் அயர்லாந்தின் முன்னாள் அதிபருமான மேரி ராபின்சன் கூறுகிறார்.

‘காலநிலை மாற்றத்தின் மோசமான விளைவுகள் மற்றும் மில்டன் போன்ற அழிவுகரமான சூறாவளிகள் ஏற்படுவதைத் தவிர்க்க ஒவ்வொரு விஷயமும் முக்கியமானதாக உள்ளது’ என்கிறார் அவர்.

எவ்வாறாயினும் மில்டன் மற்றும் ஹெலன் சூறாவளிகள் தாக்கிய போது, காலநிலை அவசரநிலையை நிவர்த்தி செய்வதற்கான சுற்றுச்சூழல் திட்டங்கள் மற்றும் கொள்கைகளை டிரம்ப் ‘எல்லா காலத்திற்குமான மிகப்பெரிய மோசடிகளில் ஒன்று’ என்று கூறினார். அவர் தனது முதல் பதவிக்காலத்தில் செய்தது போல் 2015 பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் இருந்து விலகுவார் என பலர் எதிர்பார்க்கின்றனர்.

ஆனால், ராபின்சனின் கூற்றுப்படி, தற்போது ஏற்பட்டுள்ள இதன் தீவிரத்தைத் தடுக்கும் சக்தியற்றவர் டிரம்ப் என நம்புகிறார். ‘பசுமை மானியங்களில் பில்லியன்கணக்கான டாலர்கள் செலவிடுவதை அவர் திரும்பப் பெற முடியாது. அமெரிக்காவில் ஆற்றல் வளங்கள் தொடர்பான மாற்றங்களை நிறுத்த முடியாது. மேலும் அவர்இ காலநிலை இயக்கத்தை தடுத்து நிறுத்தும் சக்தியற்றவர்.’

தன்னுடைய தனிப்பட்ட நிலைப்பாட்டை இன்னும் வெளிப்படுத்தாத கமலா ஹாரிஸ், ‘தலைமைத்துவத்தை நிரூபிப்பது, முந்தைய ஆண்டுகளின் வேகத்தைத் தக்கவைப்பது மற்றும் அதிகமான பசுங்குடில் வாயுக்களை வெளியிடும் நாடுகளும் அதை பின்பற்றுவதை துரிதப்படுத்த ஊக்குவிக்க வேண்டும்’ என வலியுறுத்துகிறார் அவர்.

மனிதநேய தலைமை

‘அமெரிக்காவின் ராணுவ மற்றும் பொருளாதார பலத்தைப் பொருத்து மட்டுமல்லாமல் உலகளவில் சாத்தியமான தார்மீக அதிகாரத்துடனான அதன் ஒப்பிட முடியாத செல்வாக்கை பொருத்து தேர்தல் முடிவுகள் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கும்’ என நெருக்கடிகள் தொடர்பான மூத்த மத்தியஸ்தர் மார்ட்டின் கிரிஃபித்ஸ் கூறுகிறார். இவர் சமீப காலம் வரை மனிதநேய விவகாரங்கள் மற்றும் அவசர நிவாரண ஒருங்கிணைப்புக்கான ஐநா அமைப்பின் (மூன்றாம் நிலை) (Under Secretary General) பொதுச் செயலாளராக இருந்தார்.

ஹாரிஸ் வெற்றி பெற்றால் இதில் நம்பிக்கை ஏற்படலாம் என அவர் கருதுகிறார். ‘ஹாரிஸின் வெற்றி நம்பிக்கையை குறிக்கும்’ என அவர் என்னிடம் கூறினார். அதற்கு மாறாகஇ ‘டிரம்ப் மீண்டும் வெற்றி பெற்றால் தனிமைப்படுத்துதல் மற்றும் ஒருதலைபட்சமான செயல்பாடு நிலவும். சர்வதேச அளவில் நிலையற்ற தன்மை மற்றும் விரக்தி ஆழமாகும்’ என்றார் அவர்.

ஐநா என வரும் போது அதற்கு நிதி ரீதியாக ஆதரவளிக்கும் ஒரே பெரிய நாடாக அமெரிக்கா இருக்கிறது. 2022-ஆம் ஆண்டில் சாதனை அளவாக 18.1 பில்லியன் டாலர்களை வழங்கியது.

ஆனால்இ டிரம்ப் முன்பு ஆட்சியில் இருந்த போது பல்வேறு ஐநா முகமைகளுக்கான நிதி வழங்குவதை நிறுத்தினார். உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேற காரணமானார். அந்த இடைவெளியை டிரம்ப் நினைத்தது போன்று மற்ற நாடுகள் நிரப்ப முனைந்தன.

மனிதநேயத்தை விரும்பும் சர்வதேச சமூகத்தினரிடையே விரக்தி ஆழமாகியிருப்பதாக மார்ட்டின் கிரிஃபித்ஸ் சுட்டிக்காட்டுகிறார். மத்திய கிழக்கில் மோசமாகி வரும் சூழலுக்கு பைடன் நிர்வாகத்தின் ‘தயக்கத்தைக்’ குற்றம்சாட்டுகிறார் அவர். இஸ்ரேலிய மக்கள் மீது அக்டோபர் 7 அன்று ஹமாஸ் நடத்திய படுகொலை தாக்குதலுக்கு சர்வதேச மனிதாபிமான முகமைகளின் தலைவர்கள் தொடர்ந்து கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றன. ஆனால் காஸா மற்றும் லெபனானில் மக்களின் பாதிப்புகளை முடிவுக்குக் கொண்டு வரவும் அவை தொடர்ச்சியாக அமெரிக்காவுக்கு அழைப்பு விடுக்கின்றன.

காஸாவுக்குள் அதிகமான உதவிகள் சென்றடைவதில் உள்ள தடைகளை அகற்றுவதில் பைடன் மற்றும் அமெரிக்க அரசின் உயர் அதிகாரிகள் மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தினர். ஆனால், உதவிகளும் அதற்கான வலியுறுத்தலும் போதவில்லை என விமர்சகர்கள் கூறுகின்றனர்.

‘உண்மையான தலைமை என்பது மனிதாபிமான நெருக்கடிகளை அசைக்க முடியாத தார்மீக தெளிவுடன் நிவர்த்தி செய்வதன் மூலமும், மனித உயிரின் பாதுகாப்பை அமெரிக்க ராஜதந்திரத்தின் அடித்தளமாக மாற்றுவதன் மூலமும், உலக அரங்கில் செயல்படுவதன் மூலமும் தான் உருவாகும்’ என்று கிரிஃபித்ஸ் விவரிக்கிறார்.

ஆனால் அவர் இன்னும் அமெரிக்கா ஒரு தவிர்க்க முடியாத சக்தி என்று நம்புகிறார். ‘உலகளாவிய மோதல்கள் மற்றும் நிச்சயமற்ற ஒரு நேரத்தில் பொறுப்பான கொள்கை ரீதியான தலைமைத்துவத்தின் சவாலுக்கு ஏற்ப அமெரிக்கா உயர வேண்டும் என்று உலகம் எதிர்பார்க்கிறது.’ என்று அவர் கூறுகிறார்.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

Courtesy : BBC News Room