இந்தியாவை சொந்தமண்ணில் முதன்முறையாக “Whitewash” செய்த நியுஸிலாந்து ! சாதித்தது எப்படி?

0
58
Article Top Ad

இந்திய அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்று நியூசிலாந்து அணி புதிய வரலாறு படைத்தது.

இலங்கை அணிக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் என்ற கணக்கில் கடந்த செப்டெம்பர் மாதத்தில் படுதோல்வியைத் தழுவிய நியுஸிலாந்து அணி சுமார் ஒரு மாத காலத்தில் மிகவும் சவால் மிகுந்த இந்திய சுற்றுப்பயணத்தில் இந்திய அணிக்கெதிராக விளையாடிய மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றியீட்டி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

இதன் மூலம் இந்திய மண்ணில் வைத்து மூன்று போட்டிகளையோ அதற்கு மேலான போட்டிகளையோ உள்ளடக்கிய டெஸ்ற் தொடரில் அனைத்துப்போட்டிகளையும் வென்ற அணி என்ற சாதனையை நியுஸிலாந்து நிலைநாட்டியுள்ளது

இதுபோன்ற வரலாற்று வெற்றியை நியூசிலாந்து அணியினர் இந்திய மண்ணில் இறங்கியபோது நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள்.

புனே டெஸ்ட் போட்டியைப் போன்று இந்த ஆட்டமும் 3 நாட்களில் முடிந்துள்ளது. மும்பை வான்ஹடே மைதானத்தில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 25 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது நியூசிலாந்து அணி. 147 ரன்கள் இலக்கைத் துரத்திய இந்திய அணி 29.1 ஓவர்களில் 121 ரன்களுக்கு ஆட்டமிழந்து 25 ரன்களில் தோல்வி அடைந்தது.

இந்திய அணி 106 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றியின் விளிம்பில்தான் இருந்தது. ஆனால் கடைசி 4 விக்கெட்டுகளை 15 ரன்களுக்குள் இழந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த டெஸ்ட் தொடரின் ஆட்டநாயகனாக இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 11 விக்கெட்டுகளை வீழ்த்திய அஜாஸ் படேல் மற்றும் தொடர் நாயகனாக நியூசிலாந்து துடுப்பாட்டவீரர் வில் யங்(244 ரன்கள்) தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்திய அணி 147 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கியது. இதில் ரிஷப் பந்த்(64) ஒருவர் மட்டுமே அரைசதம் அடித்தார். ரோஹித் சர்மா(11)இ வாஷிங்டன் சுந்தர்(12) ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்கத்தில் ரன் சேர்த்தனர். மற்ற துடுப்பாட்டவீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களிலேயே ஆட்டமிழந்தனர்.

இதில் குறிப்பாக சீனியர் துடுப்பாட்டவீரர்கள் எனக் கூறப்படும் ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரும் 3 டெஸ்ட் போட்டிகளிலும் பெரிதாக எந்த ரன்னும் சேர்க்கவில்லை. கடைசி டெஸ்டில் இருவருமே சொதப்பலாக பேட் செய்து சொற்ப ரன்களையே சேர்த்தனர்.

டி20 போட்டியில்கூட 200 ரன்களை எளிதாக சேஸ் செய்து சாதனை படைத்த இந்திய அணி, 3 நாட்கள் வரை,240 ஓவர்கள் வரை மீதம் இருந்தும் 147 ரன்களை சேஸ் முடியாமல்இ 29.1 ஓவர்களில் சுருண்டுள்ளது. நியூசிலாந்து அணி நேற்றைய 2வது நாள் ஆட்டநேர முடிவில் 2வது இன்னிங்ஸில் 43.3 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்து 143 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

இன்று காலை ஆட்டம் தொடங்கியவுடன் அஜாஸ் படேல் 8 ரன்களில் ஆட்டமிழக்கவே நியூசிலாந்து அணி 2வது இன்னிங்ஸில் 45.5 ஓவர்களில் 174 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து 147 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற இலக்கு இந்திய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

ஆடுகளம் 3வது நாளில் இருந்து சுழற்பந்துவீச்சுக்குச் சாதகமாக இருக்கும் நாட்கள் செல்லச் செல்ல சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சொர்க்கபுரியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டது. இதனால் தொடக்கத்திலேயே நியூசிலாந்து அணி அஜாஸ் படேல் கிளென் பிலிப்ஸ் ஆகியோருக்கு பந்துவீச வாய்ப்பளித்தது.

ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால் ஜோடி 147 ரன்கள் வெற்றி இலக்கை விரைவாக அடையும் நோக்கில் களமிறங்கினர். ஆனால் கேப்டன் ரோஹித் சர்மா(11) இந்த முறையும் விரைவாக விக்கெட்டை பறிகொடுத்துஇ ஹென்றி பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி 3வது ஓவரிலேயே வெளியேறினார்.

அடுத்து களமிறங்கிய கில் ஒரு ரன்னில் அஜாஸ் படேல் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். 4வது விக்கெட்டுக்கு வந்த விராட் கோலி(1) இந்த முறையும் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தார். அஜாஸ் படேல் பந்துவீச்சில் மிட்ஷெலிடம் கேட்ச் கொடுத்து கோலி விக்கெட்டை பறிகொடுத்தார்.

கிளென் பிலிப்ஸ் பந்துவீ்ச்சில் கால்காப்பில் வாங்கி ஜெய்ஸ்வால் (5) ரன்னில் பெவிலியன் திரும்பினார். சர்ஃபிராஸ் கான் ஒரு ரன்னில் அஜாஸ் படேல் பந்துவீச்சில் ரச்சினிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். சொந்த மண்ணில் சர்ஃபிராஸ் கான் இரு இன்னிங்ஸிலும் மோசமான பேட்டிங்கை பதிவு செய்தார். 8 ஓவர்களுக்குள் இந்திய அணி 29 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் பிடியில் சிக்கியது.

இந்திய பேட்டர்களின் பதற்றத்தையும் கவனமாக துடுப்பாடவேண்டும் என்ற நோக்கத்தையும் நியூசிலாந்து சுழற்பந்துவீச்சாளர்கள் நன்கு பயன்படுத்தி, ஸ்டெம்ப் டூ ஸ்டெம்ப் மட்டுமே வீசினர். கரணம் தப்பினால் மரணம் என்ற ரீதியில் ஒரு பந்தைத் தவறாக ஆடினாலும் விக்கெட் வீழ்ந்துவிடும் என்ற ரீதியில் இந்திய பேட்டர்கள் பதற்றமாக டிஃபென்ட்ஸ் செய்து விக்கெட்டை இழந்தனர்.

ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா கூட்டணி மட்டும் ஓரளவுக்கு நிலைத்து ஆடி 41 ரன்கள் சேர்த்தது. இதுதான் அதிகபட்ச பார்ட்னர்ஷிப். முதல் இன்னிங்ஸில் ஆடியதைப் போன்று அதிரடியாக பேட் செய்த ரிஷப் பந்த், ஒரு சிக்ஸர் 7 பவுண்டரிகள் உள்பட 48 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

ரிஷப் பந்த் களத்தில் இருந்தவரை இந்திய அணி வெற்றி பெற்றுவிடும் என்று ரசிகர்கள் நம்பினர். ஆனால் ரிஷப் பந்த் 64 ரன்கள் சேர்த்த நிலையில் அஜாஸ் படேல் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் பிளென்டலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ரிஷப் பந்த் ஆட்டமிழந்த பின் இந்திய துடுப்பாட்டவீரர்கள் அடுத்த 15 ரன்களுக்குள் மீதமிருந்த 4 விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தனர்.

டெஸ்ட் தொடரை இழந்த பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில் ‘டெஸ்ட் தொடரையும் போட்டியையும் இழந்தது சாதாரணமான விஷயமில்லை. இதை ஜீரணிக்க முடியாது. நாங்கள் எங்களின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இந்தத் தொடர் முழுவதும் நியூசிலாந்து அணி சிறப்பாக ஆடினர்’ என்று கூறினார்.

தாங்கள் ஏராளமான தவறுகளைச் செய்துவிட்டதாகக் கூறிய ரோஹித் சர்மா ‘முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் முதல் இன்னிங்ஸ்களில் போதுமான ரன்கள் குவிக்கவில்லை. இந்த ஆட்டத்தில் 28 ரன்கள்தான் முன்னிலை பெற்றோம். எளிதான இலக்குதான் அதைக்கூட அடைய முடியவில்லை. அணியாக நாங்கள் தோற்றுவிட்டோம்’ என்றார்.

மேலும் ‘எங்களுக்கு இது உண்மையில் துர்அதிர்ஷ்டமான டெஸ்ட் தொடராக அமைந்தது. ஒரு கேப்டனாக நான் சிறப்பாகச் செயல்படவில்லை. ஓர் அணியாக நாங்கள் தோல்வி அடைந்துவிட்டோம்’ எனத் தெரிவித்தார்.