(புகழ்பெற்ற அமெரிக்க செய்தி நிறுவனமான CNNனின் Projection எதிர்வுகூறலுக்கு அமைவாக இந்த செய்தி எழுதப்பட்டுள்ளது. ஜனநாயகக்கட்சிக்கு ஆதரவான ஊடகம் என பரவலான கருத்துக்கள் உள்ளநிலையில் ட்ரம்ப்பின் முன்னிலை பற்றிய அதன் தகவல் சுட்டிக்காட்டத்தக்கது.)
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பெறுபேறுகள் தொடர்ந்தும் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில் இதுவரை வெளியிடப்பட்ட பெறுபேறுகளுக்கும் கணிப்புகளுக்கும் அமைவாக தேர்தல் வெற்றியைப் பிரகடனப்படுத்த மிகவும் அவசியமான 270 தேர்தல் மன்றக்கல்லூரி Electoral College Votes வாக்குகளில் 266ஐ தனதாக்கி குடியரசுக்கட்சியின் வேட்பாளரும் முன்னாள் ஜனாதிபதியுமான Donald Trump முன்னணியில் திகழ்கின்றார்.
மற்றைய பிரதான கட்சியான ஜனநாயக கட்சியின் சார்பாக போட்டியிடும் துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ் 188 தேர்தல் மன்றக்கல்லூரி வாக்குகளைப் பெற்றுள்ளார்.
வெற்றி பெறுவது உறுதி என்ற நிலையில் ட்ரம்ப் புளோரிடாவிலுள்ள தனது தனது தலைமை தேர்தல் பணியகத்தில் இருந்து ஆதரவாளர்களுக்கு இன்னமும் சில நிமிடங்களில் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தேர்தலில் குடியரசுக்கட்சி வேட்பாளர் ட்ரம்ப் வெற்றியின் விளிம்பில் முன்னணியில் திகழ்வது மட்டுமன்றி அவரது கட்சி அமெரிக்க செனட் சபை மற்றும் காங்கிரஸ் பிரதிநிதிகள் சபை இரண்டையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
உலகின் மிகப்பலம்வாய்ந்த அதிகார பீடமாக வர்ணிக்கப்படுவது அமெரிக்க ஜனாதிபதிப் பதவி. உலகம் முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்க ஜனாதிபதித்தேர்தல் வாக்களிப்பு செவ்வாய்க்கிழமை நிறைவுபெற்று பெறுபேறுகளும் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
அமெரிக்காவில் 50 மாநிலங்கள் இருந்தாலும் அரிசோனா, ஜோர்ஜியா, மிச்சிகன், நெவாடா, நோர்த் கரோலினா, பென்சில்வேனியா, விஸ்கான்சின் ஆகியவை அணி மாறும் மாநிலங்கள் (Swing States) என்று அழைக்கப்படுகின்றன. இந்த 7 மாநிலங்களின் மக்கள், ஒருமுறை குடியரசு கட்சிக்கும் மறுமுறை ஜனநாயக கட்சிக்கும் மாறி மாறி வாக்களிக்கின்றனர்.
2016ம் ஆண்டில் இந்த 7 மாநிலங்களில் 6 மாநிலங்கள் டொனால்ட் டரம்பிற்கு ஆதரவாக வாக்களித்த அதேவேளை 2020ம் ஆண்டு தேர்தலில் 6 மாநிலங்களை ஜோ பைடன் தனதாக்கி ஜனாதிபதி பதவியைக் கைப்பற்றியிருந்தார். இந்த 7 மாநிலங்கள் தவிர மீதமுள்ள 43 மாநிலங்களும் ஜனநாயகக்கட்சிக்கு வாக்களிக்குமா இல்லை குடியரசுக்கட்சிக்கு வாக்களிக்குமா என்பது கடைசி நேரத்தில் தீர்மானிக்கப்படுவதில்லை மாறாக அது ஏற்கனவே இரண்டில் ஒரு கட்சிக்கு சார்பானவை முடிவுசெய்யப்பட்டுவிட்டன.
இம்முறை தேர்தலில் இந்த 7 மாநிலங்களில் பென்சில்வேனியா ,ஜோர்ஜியா மற்றும் நோர்த் கரோலினாவில் ட்ரம்ப் வெற்றிபெற்றுள்ளதுடன் ஏனைய நான்கு மாநிலங்களிலும்முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
https://globetamil.substack.com/p/a61