முன்னாள் ஜனாதிபதிகளின் அடிப்படை பாதுகாப்புச் செலவுகளுக்காக வருடாந்தம் 93 கோடியே 30 இலட்சத்து 35 ஆயிரத்து 966 ரூபாயை (93,30,35,966) பொலிஸார் செலவிடுவதாக முன்னாள் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த அடிப்படைப் பாதுகாப்புச் செலவுகள் உட்பட அதிகாரிகளுக்காக செலவிடப்படும் மின்சாரம், நீர், போக்குவரத்து மற்றும் தங்குமிடச் செலவுகளுடன் சேர்த்து, அந்தத் தொகை 1100 மில்லியன் ரூபாவாக அதாவது 110 கோடி ரூபாயாக அதரிகரிப்பதாக அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சந்திரிகா பண்டாரநாயக்க – முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவுக்கு மட்டும் பொலிஸாரின் வருடாந்த பாதுகாப்புச் செலவு மாத்திரம் 9 கோடியே 88 இலட்சத்து 71 ஆயிரத்து 866 ரூபாய் 34 சதம் ஆகும்.
அவருக்காக இரண்டு ஜீப்கள், 05 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு கார் என மொத்தம் 08 வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமல்லாமல், 500 லிட்டர் டீசல் மற்றும் 495 லிட்டர் பெட்ரோலுக்கு, தற்போது சந்தை விலையின்படி 2 இலட்சத்து 95 ஆயிரத்து 445 ரூபாயை மாதாந்திர செலவாக அரசாங்கம் செலுத்துகிறது. அவருக்காக 57 பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மகிந்த ராஜபக்ச – முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பாதுகாப்பதற்காக பொலிஸாருக்கு வருடாந்த பாதுகாப்புச் செலவு 32 கோடியே 65 இலட்சத்து 82 ஆயிரத்து 819 ரூபாய் 92 சதம் ஆகும்.
மகிந்த ராஜபக்சவுக்கு 05 ஜீப்கள், 04 மோட்டார் சைக்கிள்கள், 02 முச்சக்கரவண்டிகள், 02 பேருந்துகள், 01 கார், 01 வான், 03 டபுள் கெப்கள் உட்பட 18 அரச வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அவற்றிற்கு மாதந்தோறும் 1770 லிட்டர் டீசல், 829 லிட்டர் பெட்ரோல், 200 லிட்டர் சூப்பர் டீசல் ஒதுக்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு மாதாந்த எரிபொருள் கட்டணம் 8 இலட்சத்து 22 ஆயிரத்து 529 ரூபாய் ஆகும். அவருக்காக 187 பொலிஸ் அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
கோட்டாபய ராஜபக்ச – முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு 3 கோடியே 91 இலட்சத்து 41 ஆயிரத்து 488 ரூபாயை பொலிஸ் பாதுகாப்பு பிரிவு செலவளித்துள்ளது.
அவருக்கு ஒரு ஜீப் வண்டி , இரண்டு மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட மூன்று வாகனங்களுக்கு 400 லிட்டர் டீசல் மற்றும் 200 லிட்டர் பெட்ரோலுக்கான மாதாந்திர செலவு ஒரு இலட்சத்து 83 ஆயிரத்து 175 ரூபாய் ஆகும் . அவரது பாதுகாப்புக்காக 22 பொலிஸ் அதிகாரிகள் குவிக்கப்பட்டுள்ளனர்.
ரணில் – முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு அடுத்தபடியாக, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இலங்கை பொலிஸார் அதிகளவு தொகையை செலவிடுகின்றனர்.
அவருக்கு இரண்டு ஜீப் வண்டிகளும் அதற்காக 510 லிட்டர் டீசலும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாதாந்திர எரிபொருள் செலவு ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 330 ரூபாய் ஆகும். அவருக்காக 151 பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஆறு முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக பொலிஸார் சுமார் 1100 மில்லியன் ரூபாவை செலவிடும் அதே சந்தர்ப்பத்தில் ஒரு இலட்சம் பொலிஸ் உத்தியோகத்தர்களின் சுகாதாரத்திற்காக பொலிஸார் 1500 மில்லியன் ரூபாவையே செலவிடுவதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ஆயுதப்படையினர் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக மேற்கொள்ளும் செலவுகள் இதில் அடங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.