பொதுத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், 70ஆயிரம் பொலிஸார் உட்பட 90ஆயிரம் பேர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்ட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் விளக்கமளிக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று செவ்வாய்க்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு மேலும் கருத்து வெளியிட்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர்,
160 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு மொத்தம் 13,383 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் சுமார் 64,000 பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
இதற்கு அப்பால் 3,200 பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளும் கடமையில் ஈடுபடுவர். அண்ணளவாக 70ஆயிரம் பொலிஸார் வரை பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட உள்ளனர்.
இதற்கு மேலதிகமாக 12,227 சிவில் பாதுகாப்பு பணியாளர்களும் நேரடியாக தேர்தல் கடமையில் ஈடுபடவுள்ளனர். சில முக்கிய இடங்களின் பாதுகாப்புக்காக 11,000 இராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
ஏதேனும் தேவை ஏற்பட்டால் மேலும் இராணுவ அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர். பொலிஸார், முப்படையினர் அடங்களாக மொத்தமாக 90ஆயிரம் வரையான படை வீரர்கள் தேர்தல் பாதுகாப்புக்காக நாடு முழுவதும் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
தேர்தல் நடைபெறும் நாளிலும் அதற்குப் பின்னரும் பொலிஸ் அதிகாரிகளை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இம்முறை தேர்தல் பிரச்சாரங்கள் சுமூகமாக இடம்பெற்றுள்ளதை அவதானிக்க முடிகிறது. பெறுபேறுகள் வெளியாகி ஒருவாரகாலத்துக்கு சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.” என்றார்.