அறுகம்பேவுக்கான பயண எச்சரிக்கை: மீள பெறுமாறு அமெரிக்காவிடம் அரசாங்கம் கோரிக்கை

0
15
Article Top Ad

அறுகம்பே பகுதிக்கு செல்வதை மறு அறிவித்தல் வரை தவிர்க்குமாறு அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள பயண ஆலோசனையை திரும்பப் பெறுமாறு வெளிவிவகார அமைச்சு கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பான கோரிக்கையை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் விடுத்துள்ளார்.

கடந்த ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி அறுகம்பே பிரதேசம் உள்ளிட்ட நாட்டிலுள்ள சுற்றுலாத் தலங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் இலங்கையில் உள்ள அமெரிக்க பிரஜைகள் மறு அறிவித்தல் வரை அறுகம்பேக்கு பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது.

இது தொடர்பான அறிவிப்புக்குப் பின்னர் பல ஐரோப்பிய நாடுகள் தங்கள் குடிமக்களை இந்தப் பகுதிகளுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறும், பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்துமாறும் கேட்டுக் கொண்டன.

இது தொடர்பான புலனாய்வு தகவல் கிடைத்தது முதல் அறுகம்பே பகுதி உட்பட நாட்டின் சுற்றுலாத் தளங்களில் பாதுகாப்பை பலப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்திருந்தாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் கூறியிருந்தார்.

இந்த விவகாரத்துடன் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துய்யகொண்டா, அறுகம்பே பிரதேசத்திற்கு விஜயம் செய்திருந்த போது அப்பகுதியின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக கூறியிருந்தார்.

இந்த காரணிகளை அடிப்படையாக கொண்டு அமரிக்க தூதரகம் வழங்கியுள்ள பயண ஆலோசனையை மீள பெற வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், அமெரிக்க தூதரகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.