அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மைக் வால்ட்ஸை நியமிக்க ட்ரம்ப் முடிவு

0
17
Article Top Ad

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மைக் வால்ட்ஸை நியமிக்க டொனால்டு ட்ரம்ப் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ட்ரம்ப்பின் விசுவாசியான மைக் வால்ட்ஸ் தீவிர சீன விமர்சகர் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் வரலாற்று வெற்றி பெற்றார். அவர் ஜனவரி 6ம் திகதி அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக் கொள்கிறார். இந்நிலையில் புதிய அரசில் முக்கிய பதவியில் சிலரை நியமிக்க ட்ரம்ப் முடிவு செய்து வருகிறார்.

முன்னதாக, வெள்ளை மாளிகையின் முதல் பெண் தலைமை அதிகாரியாக சூசி வைல்ஸை அவர் நியமித்தது சர்வதேச கவனத்தைப் பெற்றது. 67 வயதான சூசி வைல்ஸ், அமெரிக்க அரசியல் ஆலோசகராக கடந்த 1979-ல் தனது பணியை தொடங்கியவர். 1980-ல் நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் ரொனால்ட் ரீகன் உடன் இணைந்து பணியாற்றிய பெருமை கொண்டவர். தொடர்ந்து அரசியல் ஆலோசகராக பல்வேறு பணிகளை அவர் கவனித்து வந்தார்.

நடந்து முடிந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளரான ட்ரம்ப்பின் தேர்தல் பிரச்சாரம் மற்றும் பரப்புரை சார்ந்த வியூகம் அமைக்கும் பணியை சூசி வைல்ஸ் நிர்வகித்தார். இந்நிலையில் தான் வெள்ளை மாளிகையின் முதல் பெண் தலைமை அதிகாரியாக சூசி வைல்ஸை ட்ரம்ப் நியமித்தார்.

யார் இந்த மைக் வால்ட்ஸ்? அந்த வரிசையில் தற்போது, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மைக் வால்ட்ஸை நியமிக்க டொனால்டு ட்ரம்ப் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மைக் வால்ட்ஸ் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி. அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமான பென்டகனில் ஆப்கானிஸ்தானுக்கான பாதுகாப்பு கொள்கை ஆலோசகராக பணியாற்றியுள்ளார். ட்ரம்பின் தீவிர ஆதரவாளர்.

மேலும் இவர் தீவிர சீன விமர்சகர் என்பது கவனிக்கத்தக்கது. அறிவுசார் சொத்துரிமை திருட்டு, நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் மற்றும் அமெரிக்க விநியோகச் சங்கிலி பாதிப்புகளை சுரண்டுதல் போன்ற சீனாவின் பொருளாதார நடைமுறைகளை மைக் வால்ட்ஸ் விமர்சித்துள்ளார். சீன உற்பத்தி மீது அமெரிக்கா சார்ந்திருப்பதைக் குறைக்கும் மற்றும் அமெரிக்க தொழில்நுட்பத்தைப் பாதுகாக்கும் கொள்கைகளுக்காக அவர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.