Article Top Ad
9 ஆவது பாராளுமன்றத்தில் 28 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகித்தனர். 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் மக்களின் அங்கீகாரத்துடன் 25 உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்கு தெரிவாகினர், தேசியப்பட்டியல் ஊடாகவும் மூவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைத்து, தொலைபேசி சின்னத்தின்கீழ் தமிழ் முற்போக்கு கூட்டணி போட்டியிட்டது. ஆறு பேர் சபைக்கு தெரிவாகினார்கள். இவர்களில் வேலுகுமார் மற்றும் அரவிந்தகுமார் ஆகியோர் கூட்டணியிலிருந்து விலகி, கடந்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்தனர்.
ஏனைய நால்வரும் இம்முறை தொலைபேசி சின்னத்திலேயே போட்டியிடுகின்றனர். வேலுகுமார் சிலிண்டர் கூட்டணியிலும் அரவிந்தகுமார் தனித்தும் களமிறங்கியுள்ளனர்.
2020 பொதுத்தேர்தலில் இதொகா, மொட்டு கூட்டணியில் களமிறங்கியது. ஜீவன் தொண்டமான், மருதபாண்டி ராமேஸ்வரன் ஆகியோர் வெற்றிபெற்றனர். அறகலய காலத்தில் மொட்டு ஆட்சிக்கான ஆதரவை இதொகா விலக்கிக்கொண்டது. ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவான பின்னர் அவருடன் இணைந்து செயற்பட்டது.
இம்முறையும் ஜீவனும், ரமேசும் நுவரெலியாவில் யானை சின்னத்தில் போட்டியிடுகின்றனர். அவர்களுடன் சக்திவேலுகும் களமிறங்கியுள்ளார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு தேசியபட்டியல் உட்பட இரு ஆசனங்கள் கிடைக்கப்பெற்றன. பாராளுமன்றம் வந்த கஜேந்திரகுமார் மற்றும் கஜேந்திரன் ஆகியோர் இம்முறையும் போட்டியிடுகின்றனர்.
2020 பொதுத்தேர்தலில் யாழ். மற்றும் வன்னியில் ஈபிடிபிக்கு இரு ஆசனங்கள் கிடைக்கப்பெற்றன. இம்முறை தேர்தலிலும் ஈபிடிபி தனித்து சொந்த சின்னத்தில் களமிறங்கியுள்ளது. கொழும்பிலும் அக்கட்சி வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
தமிழ் மக்கள் தேசிய முன்னணிசார்பில் விக்கேஸ்வரன் வெற்றிபெற்றார். இம்முறை அவர் போட்டியிடவில்லை. புதிய அணி களமிறங்கியுள்ளது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சார்பில் பிள்ளையான் வெற்றிபெற்றார். இம்முறையும் அவர் தனித்து போட்டியிடுகின்றார்.
சுதந்திரக்கட்சி சார்பில் 2020 தேர்தலில் அங்கஜன் வெற்றிபெற்றார்.
யாழ்.மாவட்டத்தில் இம்முறை தபால்பெட்டி சின்னத்தில் அவர் போட்டியிடுகின்றார்.
ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் பதுளை மாவட்டத்தில் இருந்து வடிவேல் சுரேஸ் 2020 இல் பாராளுமன்றம் வந்தார். பின்னர் அவர் கட்சி மாறினார். இம்முறை புதிய கட்சியில் போட்டியிடுகின்றார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மொட்டு சின்னத்தில் போட்டியிட்ட வியாழேந்திரன் வெற்றிபெற்றார். இம்முறை அவரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. அவர் தனது ஆதரவை சங்கு கூட்டணிக்கு வெளிப்படுத்தியுள்ளார்.
சுரேன் ராகவனுக்கு மொட்டு கட்சி தேசிய பட்டியல் ஊடாக இடமளித்தது. இம்முறை அவர் சிலிண்டர் கூட்டணி தேசிய பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
அதேவேளை 8 ஆவது பாராளுமன்றத்திலும் 28 தமிழ் எம்.பிக்கள் அங்கம் வகித்தனர். இம்முறை?
2015 மற்றும் 2020 பொதுத்தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தியில் இருந்து தமிழ் எம்.பிக்கள் தெரிவாகவில்லை. இம்முறை பல தமிழ் வேட்பாளர்களை தேசிய மக்கள் சக்தி களமிறக்கியுள்ளது.