பைடன் – ட்ரம்ப் ஓர் ஒப்பீடும் அமெரிக்கத் தேசியவாதமும்

0
8
Article Top Ad

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் ட்ரம்பின் வெற்றி, அமெரிக்க வெளியுறவுக் கொள்கை, குறிப்பாக ஆசியா குறித்த உலகளாவிய விவாதங்களை மீண்டும் தூண்டியுள்ளது. புவிசார் அரசியல் சூழ்நிலைகள் மற்றும் பொருளாதார முன்னேற்றச் செயற்பாடுகள் ஆகியவற்றால் குறிக்கப்பட்ட ஒரு பிராந்தியமாக, ஆசியப் பிராந்தியம் அமெரிக்க மூலோபாயத்திற்கு மையமாக உள்ளது.

ட்ரம்பின் வெற்றியின் பின்னரான சூழலில் அமெரிக்க – சீன போட்டி, வட கொரியாவின் அணுசக்தி திறன்கள் ஆகியவற்றை எதிர்கொள்ளும் பக்குவத்தை மேற்படுத்த வேண்டிய அவசியத்தையும், ஜப்பான் – இந்தியா போன்ற நட்பு நாடுகளுடன் வலுவான கூட்டாண்மைகளை வலுப்படுத்த வேண்டிய பின்னணிகளையும் வடிவமைத்திருக்கிறது.

அதேநேரம் அமெரிக்க கொள்கைகளில் மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என்ற கவலைகளையும் அதிகரித்துள்ளன. இருப்பினும், ட்ரம்பின் பேச்சுத் தொனி மற்றும் தந்திரோபாயங்கள் அவரது முன்னைய ஆட்சியின் வடிவத்தில் இருந்து வேறுபடலாம்.

ஜோ பைடனின் ஆட்சியின்போது ஆசியாவில் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் அடிப்படைத் திசையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டதாகக் கூற இடமில்லை.

இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை பேண வேண்டியதன் அவசியத்தை அமெரிக்கக் கொள்கை வகுப்பாளர்களும் அமெரிக்கத் தீர்மானம் எடுப்போரும் வகுத்த வியூகங்களை ஜோ பைடன் ஏற்றுக் கொண்ட காரண – காரிய அடிப்படையில் டொனால் ட்ரம்ப் செயற்படுவார் என்று சொல்லக்கூடிய ஏது நிலைமை உண்டு.

ஏனெனில் இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மைக்கான கட்டமைப்பை ட்ரம்ப் தனது 2016 – 2020 ஆட்சிக் காலத்தில் வகுத்திருந்தார்.

அமெரிக்காவின் இரு பெரும் கட்சிகளான குடியரசுக்கட்சியும் ஜனநாயக் கட்சியும் ஆசியாவை அமெரிக்க மூலோபாய நலன்களுக்கு மையமாகக் கருதுகின்றன. இது அமெரிக்கத் தேசிய பாதுகாப்பு மற்றும் அமெரிக்க வெளியுறவுக் கொள்கை நிறுவனங்களுக்குள் வேரூன்றிய ஒரு முன்னோக்கு நிலைதான்.

இப் பின்னணியில்தான் டொனால்ட் ட்ரம்பின் தேர்தல் பிரசார சொல்லாட்சிகள் மற்றும் கொள்கை அறிக்கைகள் பகிரப்பட்ட மூலோபாய இலக்குகளுக்கான தெளிவான அர்ப்பணிப்பை பிரதிபலித்திருந்தன. இது அமெரிக்கத் தேசியக் குறிக்கோள்களின் நீட்சியாகும்.

இந்த அடிப்படையில் ட்ரம்பின் புதிய நிர்வாகம் அவற்றை மிகவும் உறுதியான அணுகுமுறையுடன், குறிப்பாக வர்த்தகம் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளில் பின்பற்றும் சாத்தியங்கள் கண்கூடு.

ஜனாதிபதி தேர்தல் பிரசாரம் முழுவதும், ட்ரம்ப் சீனாவிற்கு எதிரான வலுவான நிலைப்பாட்டை மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார், இது தனது முதல் பதவிக் காலத்தில் அவர் எடுத்த கடுமையான அணுகுமுறையின் நீட்சியைப் பிரதிபலித்திருந்தது.

ட்ரம்ப் தனது உரைகளில், சீனாவை அமெரிக்காவின் முதன்மை எதிரியாக வடிவமைத்தார், பீஜிங்கை ‘நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள்“ ‘அறிவுசார் சொத்து திருட்டு’ என்று குற்றம் சாட்டினார்,

ஜனநாயகக் கட்சியும் குடியரசுக் கட்சியும் சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கை அமெரிக்கப் பொருளாதாரம் மற்றும் மூலோபாய நலன்களுக்கு ஒரு முக்கியமான அச்சுறுத்தலாகக் கருதுவதால், ட்ரம்பின் உறுதியான மொழி, இரு கட்சிப் பிரிவுகளிலும் குரல் கொடுக்கப்பட்ட உணர்வுகளைப் பிரதிபலிக்கிறது.

ஜோ பைடன் நிர்வாகம் இந்தோ – பசுபிக் ஈடுபாட்டிற்கான ஒரு விரிவான கட்டமைப்பை வகுத்தது, பிராந்தியத்தில் உள்ள நாடுகளுடன் கூட்டணிகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தியது. இந்த அணுகுமுறை ஜப்பான், அஸ்திரேலியா மற்றும் இந்தியாவுடனான நாற்கர பாதுகாப்பு உரையாடல் போன்ற முன்முயற்சிகளை வகுத்திருந்தது.

அத்துடன் தென் கொரியா மற்றும் ஜப்பானுக்கான பாதுகாப்பு உறுதிப்பாட்டை வலுப்படுத்துவதையும் உள்ளடக்கியிருந்தது.

கூட்டுப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பிராந்திய பொருளாதார கூட்டாண்மை மூலம் சீனாவின் பொருளாதார மற்றும் இராணுவ விரிவாக்கத்தை எதிர்கொள்வதை நோக்கமாகக் கொண்டு, ஆசியான் எனப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பை ஒரு முக்கியமான பங்காளியாக வலுப்படுத்தவும் ஜோ பைடன் நடவடிக்கை எடுத்திருந்தார்.

ஆனால் இக் கூட்டணிகளை ட்ரம்ப் சிதைப்பார் என்று நம்புவதை விடவும், மேலும் புதுப்பிக்கத்தக்க வலுடன் ட்ரம்பின் புதிய நிர்வாகம் இயக்கும் என்று எதிர்பார்க்கலாம். அதாவது ட்ரம்ப், ஒருதலைப்பட்ச வாதத்தை நோக்கிய தனது விருப்பத்தை மீறி, பிராந்தியத்தில் அதிகார சமநிலையை அடைவதில் அத்தகைய கூட்டணிகளின் மூலோபாய மதிப்பை அங்கீகரிக்க முற்படலாம்.

கூடுதலாக, அமெரிக்கா சீனாவிலிருந்து பொருளாதார ‘துண்டிப்பு’ நோக்கி நகர்கிறது, இது ட்ரம்ப் 2016 – 2020 ஆட்சிக் காலத்தில் வாதிட்ட ஒரு கொள்கை. அதற்கு மெருகூட்டி ஜோ பைடன் நிர்வாகம் அமெரிக்க உற்பத்தி மற்றும் அமெரிக்கத் தொழில் நுட்பம் ஆகியவற்றுக்கான அறிவியல் சட்டங்களை வகுத்துமிருந்தது.

ஆக, அமெரிக்கப் பொருளாதாரபொறிமுறைகளை பாதுகாப்பதற்கான ஒரு பெரிய, இருதரப்பு இலக்குடன் பைடன் – ட்ரம்ப் ஆகிய இருவரும் இணைந்திருந்தனர் என்ற முடிவுக்கு வரலாம்.

அரசியல் – இராணுவ வியூகங்களிலும் ட்ரம்ப் அமெரிக்கத் தேசியக் கட்டுப்பாட்டுப்பாட்டை மீறுவார் என்று சொல்வதற்கில்லை. இருந்தாலும் அமெரிக்க உலக அதிகாரம் புதிய திசையில், ஆனால் ட்ரம்பின் முழு விருப்பத்துக்கும் உட்படாது மாற்றுத் தன்மையுடன் வெளிக் கிளம்பலாம்.

ட்ரம்பின் முன் எச்சரிக்கையற்ற போக்கை கொள்கை வகுப்பாளர்கள் கன கச்சிதமாகவும் பயன்படுத்தலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here