கனடாவின் காலிஸ்தான் அமைப்பின் தலைவர் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியிருந்தார். இது இரு நாடுகளுக்கும் இடையில் விரிசலை ஏற்படுத்தியது.
அதன் விளைவாக சில வாரங்களுக்கு முன்பு கனடாவின் ப்ராம்ப்டன் நகரிலுள்ள இந்துக் கோவிலை சேதப்படுத்தி பக்தர்களையும் தாக்கிய சம்பவம் இடம்பெற்றது.
இந்தியாவை பழிவாங்கும் எண்ணத்துடன் நடத்தப்பட்ட இச் சம்பவத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
அதன்படி, பாதுகாப்பு தொடர்பில் இந்திய தூதரகம் தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளது.
ப்ராம்ப்டனில் உள்ள திரிவேணி கோவிலில் நடக்கவிருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
எதிர்வரும் 17 ஆம் திகதி இந்திய துணைத் தூதரகத்தால் ப்ராம்ப்டன் திரிவேணி கோவிலில் திட்டமிடப்பட்ட வாழ்க்கைச் சான்றிதழ் நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வன்முறைச் சம்பவங்கள் நடப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக பொலிஸார் மற்றும் உளவுத்துறை தெரிவித்ததையடுத்து இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் அனைவரிடமும் நாம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம்.
கனடாவில் அமைந்துள்ள இந்துக் கோவிலுக்கு வரும் கனேடியர்கள் பாதுகாப்பற்றவர்களாக உணர்வது மிகவும் வருத்தமளிக்கிறது.
பொது மக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கிலேயே இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் எதிர்வரும் 16, 17 ஆகிய திகதிகளில் இந்திய தூதரக அதிகாரிகளை குறி வைத்து இந்து கோவில்களில் தாக்குதல் நடத்துவோம் என காலிஸ்தான் அமைப்பின் தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னுன் தனக்கு மிரட்டல் விடுத்ததாக கனடாவின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன் ஆர்யா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.