இலங்கையின் 17ஆவது நாடாளுமன்றத் தேர்தல் இன்று (14) நடைபெற்று வருகிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று (14) காலை 7 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.
இந்தமுறை நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சை குழுக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் அடங்கலாக 690 குழுக்கள் போட்டியிடுகின்றன.
இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் மொத்தம் 8, 361 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
அவர்களில் 5,006 வேட்பாளர்கள் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள்.
இந்தமுறை வாக்களிப்பதற்காக ஒரு கோடியே 7, 140, 354 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
பொதுத் தேர்தல் வாக்கெடுப்பு பணிகள் நாடளாவிய ரீதியில் 13, 421 வாக்கெடுப்பு நிலையங்களில் இடம்பெற்று வருகின்றது.
225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றில் 196 உறுப்பினர்கள் வாக்கெடுப்பினூடாக தெரிவு செய்யப்படுவார்கள்.
அத்துடன் 2024 வாக்காளர் பட்டியலுக்கு அமைய, சில மாவட்டங்களில் தெரிவு செய்யப்படவுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை மாறுபட்டுள்ளது.
இதற்கமைய, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் தலா ஒரு உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன் யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் தெரிவு செய்யப்படவுள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கை ஒன்றால் குறைவடைந்துள்ளது.
இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 18 உறுப்பினர்கள் நாடாளுமன்றுக்கு தெரிவு செய்யப்படவுள்ளனர்.
அத்துடன் கம்பஹா மாவட்டத்தில் 19 உறுப்பினர்கள் நாடாளுமன்றுக்கு தெரிவு செய்யப்படவுள்ளனர்.
அதேநேரம் களுத்துறை மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றுக்கு தெரிவு செய்யப்படவுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளது.
எனினும் யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்படவுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 6ஆக குறைவடைந்துள்ளது. இதேவேளை இதுவரை நடைபெற்ற 16 நாடாளுமன்றத் தேர்தல்களின் படி,
இலங்கையின் முதலாவது பொதுத் தேர்தல் 1947ஆம் ஆண்டு ஓகஸ்ட் 23 முதல் செப்டம்பர் 20ஆம் திகதி வரை 19 நாட்கள் நடைபெற்றது.
இது நாட்டின் வரலாற்றிலேயே நீண்ட தேர்தலாகும்.
அப்பொழுது இலங்கை இங்கிலாந்து ஆட்சியில் இருந்தது.
9 அரசியல் கட்சிகளின் சார்பாக 179 பேரும், 182 சுயேட்சை வேட்பாளர்களுமாக மொத்தம் 361 பேர் போட்டியிட்டனர்.
இந்தத் தேர்தலின் போது முதல் முறையாக வாக்காளர்கள் தங்கள் விருப்பமான வேட்பாளர்களுக்கு, விருப்பு வாக்குகளை செலுத்தலாம் என்ற புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக 98 வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு, அதில் 42 பேர் வெற்றி பெற்றனர்.
1947ஆம் ஆண்டு தேர்தலில் ஏனை கட்சிகளான, லங்கா சமசமாஜக் கட்சி 10 இடங்கள், போல்ஷெவிக்-லெனினியக் கட்சி 5 இடங்கள், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் 7 இடங்கள், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி 3 இடங்கள், இலங்கை இந்தியக் காங்கிரஸ் 6 இடங்கள் மற்றும் தொழிற் கட்சி 1 இடத்தை பெற்றது.
மொத்தம் 21 சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
1948ஆம் ஆண்டு பெப்ரவரி 4ஆம் திகதி அன்று இலங்கை சுதந்திரம் பெற்றபோது, ஐக்கிய தேசியக் கட்சி முதல் அரசாங்கத்தை அமைத்து டி.எஸ். சேனநாயக்க முதலாவது பிரதமரானார்.
இதன் பின்னர் முதல் நாடாளுமன்ற அமர்வு 1947ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி அன்று நடைபெற்றது.
இதேவேளை இலங்கையின் 2ஆவது நாடாளுமன்றத் தேர்தல் 1952ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் திகதி முதல் மே 30ஆம் திகதி வரை நடைபெற்றது.
இலங்கை நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபைக்கு 95 உறுப்பினர்களைத் தெரிவு செய்யவதற்கு இத்தேர்தல் நடத்தப்பட்டது.
இலங்கையின் மலையகத் தமிழரின் குடியுரிமை பறிக்கப்பட்டமையினால் அவர்களின் ஒரேயொரு அரசியல் கட்சியான இலங்கை இந்தியக் காங்கிரஸ் இத்தேர்தலில் போட்டியிட முடியவில்லை.
லங்கா சமசமாஜக் கட்சியினர் இத்தேர்தலில் 9 இடங்களையே பெற்றுத் தோல்வியுற்றனர்.
ஐக்கிய தேசியக் கட்சி பெரும்பான்மையிடங்களை அதாவது 54 இடங்களை கைப்பற்றியது.
அடுத்து, இலங்கையின் 3ஆவது நாடாளுமன்றத் தேர்தல் 1956ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி முதல் ஏப்ரல் 10ஆம் திகதி வரை நடைபெற்றது.
இலங்கை நாடாளுமன்றத்திற்கு 95 உறுப்பினர்களைத் தெரிவு செய்யவதற்காக இந்தத் தேர்தல் நடத்தப்பட்டது.
நீண்ட காலமாக இலங்கையை ஆண்ட ஐக்கிய தேசியக் கட்சிக்கு இத்தேர்தல் ஒரு பெரும் சவாலாகக் காணப்பட்டது.
முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா ஆளும் கட்சியில் இருந்து பிரிந்து இலங்கை சுதந்திரக் கட்சியைத் தோற்றுவித்தார்.
இந்த தேர்தலில் மகாஜன எக்சத் பெரமுன கட்சி 51 இடங்களைக் கைப்பற்றது.
எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவின் கூட்டணி அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்ததுடன், பண்டாரநாயக்கா பிரதமர் ஆனார்.
1956 ஏப்ரல் 12 இல் பண்டாரநாயக்காவின் அமைச்சரவை பதவியேற்றது.
இதேவேளை இலங்கையின் 4ஆவது நாடாளுமன்றத் தேர்தல் 1960ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் திகதி நடைபெற்றது.
இலங்கை நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபைக்கு 151 உறுப்பினர்களைத் தெரிவு செய்யவதற்காக இத்தேர்தல் நடத்தப்பட்டது.
1960ஆம் ஆண்டளவில், இலங்கையின் ஆளும் மகாஜன எக்சத் பெரமுன கூட்டணி பிளவடையும் நிலையில் இருந்தது.
இந்த தேர்தலின் போது டட்லி சேனநாயக்கா தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றியது.
ஆனாலும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் நிலையான ஆட்சியை அமைக்க முடியவில்லை.
எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி பெற்றதை அடுத்து நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதையடுத்து இலங்கையின் 5ஆவது நாடாளுமன்றத் தேர்தல் 1960ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் திகதி நடைபெற்றது.
இலங்கை நாடாளுமன்றத்திற்கு 151 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக இத்தேர்தல் நடத்தப்பட்டது.
மார்ச் 1960ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் எந்தக் கட்சியும், அறுதிப் பெரும்பான்மை பலத்தைப் பெறாமையால் அதே ஆண்டில் இரண்டாம் தடவையாகத் தேர்தல் நடத்தப்பட்டது.
இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைவர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா படுகொலை செய்யப்பட்ட பின்னர் அக்கட்சி பிளவடைந்திருந்தது.
ஆனாலும் அவரது மனைவி சிறிமாவோ பண்டாரநாயக்கா கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் ஓரளவிற்கு கட்சி தனது செல்வாக்கைத் தக்க வைத்துக் கொண்டது.
இதன்படி, இலங்கை சுதந்திரக் கட்சி 75 இடங்களைக் கைப்பற்றி பெரும்பான்மைப் பலத்தைப் பெற்று ஆட்சியைப் பிடித்தது.
திருமதி பண்டாரநாயக்கா இலங்கைப் பிரதமரானார்.
பின்னர் இலங்கையின் 6ஆவது நாடாளுமன்றத் தேர்தல் 1965ஆம் ஆண்டு மார்ச் 22 இல் நடைபெற்றது.
151 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக இத்தேர்தல் நடத்தப்பட்டது.
1964ஆம் ஆண்டு டிசம்பரில் லேக்ஹவுஸ் பத்திரிகைகள் தேசியமயமாக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆளும் இலங்கை சுதந்திரக் கட்சியில் இருந்து சில உறுப்பினர்கள் வெளியேறியதை அடுத்து சிறிமாவோ பண்டாரநாயக்காவின் அரசாங்கம் நாடாளுமன்றத்தில் பலம் இழந்தது.
இதனையடுத்து எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் செல்வாக்கு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது.
இந்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி 68 இடங்களைக் கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையைப் பெறவில்லை.
ஆனாலும், இலங்கைத் தமிழரசுக் கட்சியினரின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்தார்.
இதனையடுத்து இலங்கையின் 7ஆது நாடாளுமன்றத் தேர்தல் 1970ஆம் ஆண்டு மே 27ஆம் திகதி நடைபெற்றது.
புதிய நாடாளுமன்றத்திற்கு 151 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய இத்தேர்தல் நடத்தப்பட்டது.
இந்த தேர்தலில் ஐக்கிய முன்னணி பெரும் வெற்றி பெற்றது.
மொத்தம் 151 இடங்களில் ஐக்கிய முன்னணி 116 இடங்களைக் கைப்பற்றியது.
தமிழ் பேசும் பகுதிகளில் இலங்கைத் தமிழரசுக் கட்சியும், அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றன.
தமிழ் காங்கிரஸ் கட்சியின் மூன்று உறுப்பினர்களும் பின்னர் ஐக்கிய முன்னணியில் இணைந்தனர்.
சோல்பரி அரசியலமைப்பின் கீழ் இடம்பெற்ற தேர்தல்களில் 1970 தேர்தல்களே கடைசித் தேர்தல்களாகும்.
பின்னர் மீண்டும் இலங்கையின் 8ஆவது நாடாளுமன்றத் தேர்தல் 1977ஆம் ஆண்டு ஜூலை 21ஆம் திகதி நடைபெற்றது.
இலங்கை நாடாளுமன்றத்திற்கு 168 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய இத்தேர்தல் நடத்தப்பட்டது.
பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான இடதுசாரிக் கூட்டணி அரசாங்கம் தனது ஆட்சிக்காலத்தில் முன்னெப்போதும் இல்லாது மக்களிடையே செல்வாக்கை இழந்திருந்தது.
இலங்கையின் வரலாற்றிலேயே முதற் தடவையாக ஐக்கிய தேசியக் கட்சி மூன்றில் இரண்டுக்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது.
அதேவேளையில், இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில், முதற் தடவையாக தமிழர் கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணி இரண்டாவது அதிகப்படியான இடங்களைக் கைப்பற்றி நடாளுமன்றத்தில் அதிகாரபூர்வ எதிர்க்கட்சியாக வந்தது.
1972 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் கீழ் நடத்தப்பட்ட ஒரேயொரு பொதுத் தேர்தல் இதுவேயாகும்.
இவ்வாறிருக்க இலங்கையின் 9ஆ வது நாடாளுமன்றத் தேர்தல் 1989ஆம் ஆண்டு பெப்ரவரி 15ஆம் திகதி நடைபெற்றது.
இலங்கை நாடாளுமன்றத்திற்காக 225 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய இத்தேர்தல் நடத்தப்பட்டது.
1983 ஆம் ஆண்டில் நடத்தப்பட வேண்டிய தேர்தல் 1982 தேசிய வாக்கெடுப்பு மூலம் இரத்துச் செய்யப்பட்டது.
இந்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி 125 இடங்களைப் பெற்றிருந்தது. அடுத்து 10ஆவது நாடாளுமன்றத் தேர்தல் 1994ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 16ஆம் திகதி நடைபெற்றது.
225 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய இத்தேர்தல் நடத்தப்பட்டது.
இந்த தேர்தலின் போது 17 ஆண்டுகால ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி முடிவுக்கு வந்தது.
முன்னைய ஆட்சியாளர்களான ஜே. ஆர். ஜெயவர்தன, ஆர். பிரேமதாசா ஆகியோரின் ஆட்சியில் இலங்கையின் மக்களாட்சி பெரிதும் வீழ்ச்சியைக் கண்டது.
இந்த தேர்தலின் போது மக்கள் கூட்டணி 105 இடங்களைக் கைப்பற்றியிருந்ததுடன், ஆட்சி அமைக்கத் தேவையான 113 இடங்களைக் கைப்பற்ற முடியவில்லை, ஆனாலும் சில சிறிய கட்சிகளுடன் இணைந்து ஆட்சியை அமைத்தது.
அடுத்து 2000ஆண்டு இலங்கையின் 11ஆவது நாடாளுமன்றத்திற்கு 225 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக ஒக்டோபர் 8ஆம் திகதி தேர்தல் இடம்பெற்றது.
அப்போது ஜனாதிபதியாக இருந்து சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க 10ஆவது நாடாளுமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலுக்கான அறிவித்தலை விடுத்தார்.
இந்த தேர்தலில் சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் ஆளும் கூட்டணி வெற்றியைத் தக்க வைத்துக் கொண்டது.
ஆனாலும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் 2001 இல் மீண்டும் தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் மக்கள் கூட்டணி அரசாங்கத்திலிருந்து சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலகியதை அடுத்து மக்கள் கூட்டணி அரசாங்கம் பெரும்பான்மையை இழந்தது.
ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மக்கள் விடுதலை முன்னணியைக் கூட்டணியில் சேர்வதற்கு முயன்றார்.
இதனை விரும்பாத 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியுடன் இணைந்தனர்.
அரசிற்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முயன்றன.
இதனைத் தவிர்க்கும் முகமாக சந்திரிக்கா பண்டாரநாயக்கா அரசாங்கத்தை கலைத்து புதிய தேர்தலுக்கான திகதியை அறிவித்தார்.
இந்த தேர்தல் காலத்தில் மொத்தம் 1,300 தேர்தல் வன்முறை முறைப்பாடுகள் பதிவாகியிருந்ததுடன்,தேர்தல் வன்முறைகளில் 60 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த தேர்தலில் சந்திரிக்கா குமாரதுங்கவின் ஆளும் மக்கள் கூட்டணி தேர்தலில் தோல்வியடைந்தது.
எதிர்க்கட்சிக் கூட்டணி ஐக்கிய தேசிய முன்னணி வெற்றி பெற்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமரானார்.
அடுத்து இலங்கையின் 13ஆவது நாடாளுமன்றத் தேர்தல் 2004, ஏப்ரல் 4 இல் இடம்பெற்றது.
12ஆவது நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெற்று மூன்றாண்டுகளுக்குள் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அதனைக் கலைத்து புதிய தேர்தலுக்கான அறிவித்தலை விடுத்தார்.
225 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி 82 இடங்களை மட்டும் கைப்பற்றி தேர்தலில் தோல்வியடைந்திருந்தது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 105 இடங்களை வென்றது.
அறுதிப் பெரும்பான்மைக்கு 8 இடங்கள் போதாமல் இருந்தும் அக்கட்சி ஆட்சியமைத்தது.
இதன்போதே மகிந்த ராசபக்ச பிரதமரானார்.
2010ஆம் ஆண்டு 14ஆவது நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி இடம்பெற்றது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி இத்தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்று வெற்றியீட்டியது.
நாடாளுமன்றத்துக்கான மொத்தம் 225 இடங்களில் அக்கட்சிக்கு 144 இடங்கள் கிடைத்தன.
இது 2004 தேர்தலிலும் பார்க்க 39 இடங்கள் கூடுதல் ஆகும். மீண்டும் 2015ஆம் ஆண்டு இலங்கையின் 15ஆவது நாடாளுமன்றத் தேர்தல் ஓகஸ்ட் 17ஆம் திகதி நடைபெற்றது.
ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி 106 இடங்களைக் கைப்பற்றியது.
ஆனாலும் அறுதிப் பெரும்பான்மையைப் பெறவில்லை.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 95 இடங்களையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 16 இடங்களையும் கைப்பற்றின.
மீதியான எட்டு இடங்களையும் மக்கள் விடுதலை முன்னணி (6), சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (1) ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (1) ஆகியன கைப்பற்றின.
இலங்கை சுதந்திரக் கட்சியின் மத்திய குழு ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து இரண்டு ஆண்டுகளுக்கு தேசிய அரசு அமைக்க ஒப்புக் கொண்டது.
ரணில் விக்கிரமசிங்க 2015ஆம் ஆண்டு ஓகஸ்ட் 21 அன்று இலங்கையின் 22வது பிரதமராகப் பொறுப்பேற்றார்.
இறுதியாக 2020ஆம் ஆண்டு இலங்கையின் 16ஆவது நாடாளுமன்றத் தேர்தல் ஓகஸ்ட் 5ஆம் திகதி நடைபெற்றது.
16,263,885 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றனர். இவர்களில் 31.95% பேர் இளம் வாக்காளர்கள் ஆவர்.
ஆளும் இலங்கை பொதுசன முன்னணி 145 இடங்களைக் கைப்பற்றி மிகப் பெரும்பான்மையைக் கைப்பற்றி வெற்றி பெற்றது.
எதிர்க்கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தி 54 இடங்களையும், தேசிய மக்கள் சக்தி 3 இடங்களையும் கைப்பற்றின.
முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி வரலாற்றில் மிகப்பெரும் தோல்வியைக் கண்டது.
இது ஒரேயொரு இடத்தை மட்டுமே கைப்பற்றியது. நாட்டில் பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக தேர்தல்கள் இரண்டு தடவைகள் பிற்போடப்பட்டு, இறுதியில் 2020 ஓகஸ்ட் 5ஆம் திகதி நடத்தப்பட்டது.
இத்தேர்தலில் 75% மக்கள் வாக்களிப்பில் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் 17ஆவது நாடாளுமன்ற தேர்தல் தற்போது இடம்பெற்று வருகின்றது.