பிரபல தமிழ் அரசியல்வாதிகள் இம்முறை தேர்தலில் தோல்வி

0
7
Article Top Ad

இலங்கையின் பத்தாவது நாடாளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தங்களுடைய ஆசனங்களை இழந்துள்ளனர்.

இதன்படி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தோல்வியடைந்துள்ளார்.

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கொழும்பு மாவட்டத்தில் தோல்வியடைந்துள்ளார்.

புளொட் கட்சியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தோல்வியடைந்துள்ளார்.

அத்துடன் கடந்த 2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அதிகப்படியான வாக்குகளைப் பெற்ற அங்கஜன் இராமநாதன் இம்முறை தோல்வியடைந்துள்ளார்.

கடந்த முறை தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியிருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் இம்முறை தேர்தலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தோல்வியடைந்தார்.

ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமான முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இம்முறை பொதுத் தேர்தலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தோல்வியுற்றதுடன், அவர் முதன்முறையாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகத் தவறியுள்ளார்.

வன்னி மாவட்டத்தில் கடந்த தடவை ஈ.பி.டி.பி. சார்பாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவான குலசிங்கம் திலீபன் இம்முறை தேர்தலில் தோல்வியடைந்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சார்பாகக் கடந்த தடவை நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகி இராஜாங்க அமைச்சுப் பதவி வகித்த பிள்ளையான் என அறியப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் இம்முறை தேர்தலில் தோல்வியடைந்த்துள்ளார்.

அத்துடன் தமிழரசுக் கட்சியில் போட்டியிட்டுக் கடந்த முறை நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகி இம்முறை ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் மட்டக்களப்பில் போட்டியிட்ட கோவிந்தம் கருணாகரன் தோல்வியடைந்துள்ளார்.

பதுளை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் கடந்த முறை பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அருணாச்சலம் அரவிந்தகுமார் மற்றும் வடிவேல் சுரேஷ் ஆகியோர் இம்முறை தேர்தலில் தோல்வியடைந்துள்ளனர்.

கண்டி மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் கடந்த முறை பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.வேலுகுமார் இம்முறை காஸ் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here