ஜனாதிபதி தேர்தலுடன் ஒப்பிடும் போது இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் பொதுச் சொத்துக்கள் துஷ்பிரயோகம் மிகக் குறைந்த அளவிலேயே காணப்பட்டதாக ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் (TISL) இன் இலங்கைக்கான பொதுச் சொத்து துஷ்பிரயோகத்திற்கு எதிரான திட்டத்தின் தேசிய இணைப்பாளர் சட்டத்தரணி துஷானி கந்தில்பான தெரிவித்துள்ளார்.
அதன்படி, நாட்டின் அரசியல் கலாசாரத்தில் ஒரு நேர்மறையான திருப்புமுனையை தெளிவாக காட்டிய தேர்தல் இது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் அரசு வாகனங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டமை தொடர்பாக டிரான்ஸ்பரன்சி நிறுவனத்துக்கு ஒரே ஒரு முறைப்பாடு மாத்திரமே கிடைக்கப்பெற்றதாக அவர் கூறினார்.
ஜனாதிபதித் தேர்தலின் போது 1126 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாகவும், அவற்றில் 650 முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.
பொது மைதானங்கள், அரச அலுவலகங்கள், கட்டிடங்கள் மற்றும் பாடசாலைகள் போன்றவற்றை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் 451 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் கந்தில்பனி தெரிவித்தார்.
இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில், தேர்தல் பிரசாரங்களின் போது பொது வளங்களை துஷ்பிரயோகம் செய்வதில் சிறப்பு கவனம் செலுத்தி நாடு முழுவதும் 200 கண்காணிப்பாளர்களை டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் (TISL) நியமித்துள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தலுடன் ஒப்பிடுகையில் பொது நிதி மற்றும் அரச வாகனங்களை துஷ்பிரயோகம் செய்வதில் குறிப்பிடத்தக்க சாதகமான மாற்றம் காணப்படுவதாகவும் துஷானி கந்தில்பான தெரிவித்தார்.
அரச உத்தியோகத்தர்களினால் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு பதவி உயர்வு வழங்குவது தொடர்பில் 63 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், இது கடந்த ஜனாதிபதி தேர்தலுடன் ஒப்பிடும் போது மிகவும் குறைவு எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
வாக்காளர்கள் மீது செல்வாக்கு செலுத்துதல், சட்டவிரோத தேர்தல் பிரசாரங்கள் மற்றும் வாக்குகளை வாங்கும் முயற்சிகள் தொடர்பாக 215 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும், அவற்றில் பெரும்பாலானவை தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் இணைந்து தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.