ஐக்கிய மக்கள் சக்தியின் பின்னடைவு: சஜித்தின் நிலை என்ன?

0
4
Article Top Ad

இலங்கையின் 10ஆவது நாடாளுமன்றத்தை தெரிவு செய்வதற்கான தீர்மானமிக்க தேர்தல் கடந்த 14ஆம் திகதி இடம்பெற்றது.

பாரிய மாற்றங்களையும் , திருப்பங்களையும் இம்முறை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வரவேற்றன.

76 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வந்த பழைய அரசியல் தலைமைகளுக்கும், கட்சிகளுக்கும் எதிர்வரும் நாடாளுமன்றத்தில் ஆசனங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்திக்கு மொத்தமாக 159 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றன. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் தேசிய மக்கள் சக்தி தேர்தலில் வெற்றி பெற்றது.

நாட்டின் பெரும்பாலான இடங்களை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.பிரதானமாக தமிழர் பகுதிகளில் இதுவரை காலம் தமிழ் கட்சிகள் வெற்றி பெற்று வந்த நிலையில், இம்முறை தேர்தலில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட தமிழர் பகுதிகளை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியிருந்தது.

இதன் காரணமாக, நாடளாவிய ரீதியில் பாரம்பரியமாக ஆட்சி செய்து வந்த ஏனைய கட்சிகள் பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளன.

குறிப்பாக கடந்த நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்கட்சியாக விளங்கிய சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும் பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது.

2020ஆம் ஆண்டில் ரணில் தலைமையில் காணப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து சஜித் பிரேமதாச உள்ளிட்ட சுமார் 52 பேர் வெளியேறி ஐக்கிய மக்கள் சக்தி எனும் கட்சியை உருவாக்கினர். அன்று தொடக்கம் ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்றத்தில் அதிக ஆதிக்கம் செலுத்தி வந்தது.

கடந்த செப்ரெம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெற்று நிறைவடைந்த ஜனாதிபதித் தேர்தலிலும் கூட சஜித் எதிர்ப்பார்த்த மக்கள் ஆதரவு கிடைத்திருக்கவில்லை. அந்த எதிர்ப்பாராத தோல்வி மற்றும் அண்மையில் இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலின் தோல்வி என்பன ஐக்கிய மக்கள் சக்தியை பலவீனமாக்கியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியானது கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஏனைய சில கட்சிகளுடன் இணைந்து கூட்டணியமைத்து போட்டியிட்டிருந்தது. அதே கட்சிகளுடன் கூடிய கூட்டணியிலேயே இறுதியாக இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலிலும் போட்டியிட்டிருந்தது. தேசியப் பட்டியலில் ஐந்து ஆசனங்களை ஐக்கிய மக்கள் கூட்டணி பெற்றுக்கொண்டது. இந்த ஐந்து ஆசனங்களில் தற்போது ரஞ்சித் மத்தும பண்டாரவின் பெயர் மாத்திரமே தேரதல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது ஏனையவை தொடர்பில் தொடர்ந்தும் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.

எனினும், வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைவாக சஜித்தால் வெற்றிபெற்று ஆசனங்களை பெற்றுக் கொள்ள முடியாமையே இவ்வாறு தேசியப் பட்டியல் ஆசனங்களை வழங்குவதில் ஏற்பட்டுள்ள தடுமாற்றத்திற்கான காரணம்.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மீது பல குற்றச்சாட்டுகளும், விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன. பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சஜித்தக்கு எதிராக நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய உரையையும் ஆற்றியிருந்தார். மேலும் பல கட்சி உறுப்பினர்கள் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் மனக்கசிப்பில் இருந்தமை தேர்தல் நாட்களில் அதிகளவில் பேசப்பட்டது.

கட்சிக்காக பாடுபட்டு உழைத்தவர்களை விட்டு, புதிதாக கட்சியில் இணைபவர்களுக்கு முன்னுரிமை வழங்குவது , கொடுத்த வாக்குறுதிகளை வழங்காமல் இருப்பது போன்ற பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச சமூக ஊடகங்களில் கடுமையாக கேலி செய்யப்பட்டமை அக்கட்சி அரசியல் மேடைகளில் எதிர்கொள்ள வேண்டிய மற்றொரு சவாலாக இருந்தது.

கடந்த சில வருடங்களாக சஜித் பிரேமதாச அரசியல் மேடைகளில் ஜப்பானிய மொழியிலும் ஆங்கிலத்திலும் கருத்துக்களை வெளியிட்டு சமூக ஊடகங்களில் எதிர்க்கட்சி அரசியல் குழுக்களால் கேலி செய்யப்பட்டார்.

அரசியல் களத்தில் அரசியல்வாதிக்கும் மக்களுக்கும் இடையிலான உரையாடல் மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையிலேயே, கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு இணையாக ஐக்கிய மக்கள் கூட்டணி பலத்த பின்னடைவை சந்தித்தது.

2020ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், ஐக்கிய மக்கள் சக்தி 2,771,984 வாக்குகளைப் பெற்று 54 ஆசனங்களை கைப்பற்றியிருந்தது.

இம்முறை நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 1,968,716 வாக்குகளில் 40 ஆசனங்களையே பெற முடிந்தது.

குறைந்தபட்சம் 90 அல்லது 100 ஆசனங்களையாவது பெற முடியாவிட்டால் ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்குள் சஜித் பிரேமதாசவின் தலைமைத்துவம் பெரும் சிக்கலை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளதாக தேர்தலுக்கு முன்னர் பல அரசியல் விமர்சகர்கள் தெரிவித்திருந்த நிலையில் தற்போது அவ்விடயம் ஓரளவுக்கு உண்மையாகியுள்ளது.

கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை அதிகரித்து ஹர்ஷ டி சில்வாவை தலைவராக்க வேண்டும் என்ற நிலைபாட்டில் கட்சி உறுப்பினர்கள் பெரும்பான்மையானவர்கள் உள்ளனர். தவறான தலைமைத்துவம் காரணமாக சஜித் பிரேமதாச நாட்டு மக்கள் மத்தியில் மட்டுமல்லாது கட்சி உறுப்பினர்களிடையேயும் தவிர்க்கப்பட்டு வருகின்றமை தெளிவாகிறது.

சஜித் பிரேமதாசவின் உறவினர்களின் தலையீடும் கூட கட்சியின் தலைமைத்துவம் தொடர்பான முரண்பாடுகளுக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

ஒரு ஜனநாயக நாட்டில் ஆளும் கட்சி என்பது எந்த அளவுக்கு முக்கியமாக பார்க்கப்படுகிறதோ அதே அளவிற்கு எதிர்கட்சியும் அவசியம் ஆகும்.

நாடாளுமன்றத்தில் வலுவான எதிர்க்கட்சி இல்லையென்றால் அது பெரிய பிரச்சனையை உருவாக்கும்.

ஆக, சஜித் பிரேமதாசவின் இந்த பின்னடைவு அவரது அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்குமா என்ற கேள்விகளையும் எழுப்பி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here