சர்வதேச நாணய நிதியத்துடன் பணியாளர் மட்ட உடன்பாடு: வெளியானது அறிவிப்பு

0
44
Article Top Ad

இலங்கை அரசாங்கத்துக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையிலான பணியாளர் மட்ட இணக்கப்பாட்டு எட்டப்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட குழு அறிவித்துள்ளது.

இந்த இணக்கப்பாட்டு ஒப்பந்தம் நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டு விரைவில் நான்காம் கட்ட கடன் வழங்கப்படும் என்றும் நான்காம் கட்ட கடனாக இலங்கைக்கு 330 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்படும் என்றும் சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட குழு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட குழு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர், வெளிவிவகார அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர், உயர்மட்ட அரச அதிகாரிகள் உட்பட பல்வேறு தரப்பினரை சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியது.

அதன் பிரகாரம் அரசுடன் எட்டப்பட்ட உடன்பாடு தொடர்பில் இன்று சனிக்கிழமை கொழும்பில் நடத்திய ஊடகச் சந்திப்பிலேயே இவ்வாறு கூறியது.

சர்வதேச நாணய நிதியத்திடம் நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் 2.9 பில்லியன் டொலரை கடந்த 2022ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் கோரியது. அதன் பிரகாரம் 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அதிகாரிகள் மட்டத்திலான இணக்கப்பாடு எட்டப்பட்டது.

2023ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் திகதி முதல்கட்டமாக 333 மில்லியன் அமெரிக்க டொலர் இலங்கைக்கு கடனாக சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கிடைக்கப்பெற்றது. 2023ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் திகதி இரண்டாம் கட்ட கடனாக 337 மில்லியன் அமெரிக்க டொலர் கடனாக கிடைக்கப்பெற்றது. இவ்வாண்டு ஜுன் மாதம் 12ஆம் திகதி மூன்றாம் கட்டமாக இலங்கைக்கு 336 மில்லியன் அமெரிக்க டொலர் கடனாக கிடைக்கப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.