இலங்கைத்தீவில் இன நெருக்கடி ஆரம்பிப்பதற்கு முன்னரான காலத்தில் இருந்தே இந்திய – இலங்கை உறவு சுமூகமாக இருந்தது என்று சொல்வதற்கில்லை. இந்தியா தமிழர்களுக்குச் சாதகமான நாடு என்ற உணர்வு கொழும்பை மையமாகக் கொண்ட அனைத்துச் சிங்களக் கட்சிகளுக்கும் இருக்கின்றது. தற்போது அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துள்ள அநுரகுமார திசாநாயக்க அரசாங்கத்துக்கும் அவ்வாறான உணர்வு உண்டு.
தேசிய மக்கள் மக்கள் சக்தியின் மூலக் கொள்கைப் பிரிவு என்று அவதானிக்கப்படும் ஜேவிபி இந்திய எதிர்ப்புத் தன்மை கொண்டது. இந்திய – இலங்கை ஒப்பந்தம் 1987 ஆம் ஆண்டு செய்யப்பட்டது முதல் மிகக் கடுமையாக எதிர்த்து வந்தது ஜேவிபி.
இப் பின்னணியில் தற்போது தேசிய மக்கள் சக்தியாக ஆட்சிக்கு வந்துள்ள ஜேவிபி தனது நிழல் செயலணி ஊடாக இந்திய உறவை பலப்படுத்த முற்படுகின்றது. இது ஏற்கனவே எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாகத் தெரிவாவதற்கு முன்னரே இந்திய, அமெரிக்க நாடுகளுக்குச் சென்றிருந்தார்.
அநுரவின் ஆட்சியமைந்த பின்னரான சூழலில் இலங்கையின் வெளியுறவுக் கொள்கை எதுவாக இருக்கும் என்ற கேள்விகள் பொதுவாக எல்லோரிடமும் எழுந்துள்ளன.
இக் காரண காரியத்துடனேயே புதிய அரசாங்கம் இந்தியாவுடனான உறவை பலப்படுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் அறிவுரை வழங்கியுள்ளார். ரணில் இந்தியாவுக்கு சென்றுள்ள நிலையில் இவ்வாறு கூறியிருக்கிறார். ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க எதிர்வரும் டிசம்பர் மாதம் இந்தியாவுக்குப் பயணம் செய்யவுள்ள நிலையில், ரணில் புதுடில்லிக்குச் சென்றுள்ளமை அரசியல் – பொருளாதார நோக்கில் கேள்விகளை எழுப்பியுள்ளன.
இலங்கைத் தீவைப் பிரதானப்படுத்தி இந்திய- சீன போட்டியானது மையம் கொள்ள ஆரம்பித்துள்ள நிலையில், அநுரவின் அரசாங்கத்தை ரணில் பரீட்சித்துப் பார்க்கின்றார். அதாவது, அநுர அரசாங்கம் இந்தியாவுடன் நெருக்கமாகப் பயணிக்கப் போகின்றதா அல்லது சீனாவுடன் பயணிக்கப் போகின்றதா என்பதே ரணிலின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ரணிலின் அரசியல் அணுகுமுறை என்பது ஜே.ஆர்.ஜயவர்த்தன கையாண்ட இராஜதந்திரத்தை ஒத்தது. அதே அணுகுமுறையை தான் 1994 ஆம் ஆண்டில் இருந்து 2005 ஆம் ஆண்டு வரை பதவியில் இருந்த சந்திரிகாவும் கையாண்டிருந்தார். 2005 ஆம் ஆண்டில் இருந்து 2014 ஆம் ஆண்டு வரை பதவியில் இருந்த மகிந்த ராஜபக்சவும் இந்தியாவுடன் இணைந்துதான் பயணித்திருந்தார். ஆனால், 2015 இலிருந்து 2020 வரை பதவியில் இருந்த மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் இந்தியாவுடன் நெருக்கமான உறவைக் கொண்டிருந்ததாகக் கூற முடியாது.
இங்கே வேடிக்கை என்னவென்றால், மைத்திரி ஜனாதிபதியாக இருந்த நிலையில் ரணில் பிரதமராக பதவி வகித்திருந்தார். அப்போது இந்திய – இலங்கை உறவில் விரிசல் ஏற்படுவதற்கு ரணில் கையாண்ட அணுகுமுறையும் ஒரு காரணம் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.
ஆனால், இப்போது அநுரகுமாரவின் அரசாங்கத்தை ரணில் பரிசோதனைக்கு உட்படுத்துகிறார். ஜேவிபியின் இந்திய எதிர்ப்பை தெரிந்த பின்னணியில் ரணில் அவ்வாறு பரிசோதித்தாலும், பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்திய மற்றும் மேற்கு நாடுகளைக் கையாளக்கூடிய ஆற்றல் கொண்டவர்.
ஹரிணி தொடர்பாக ஜேவிபிக்கு அதிருப்திகள் இருந்தாலும் தற்போது தேசிய மக்கள் சக்தியின் வெளித்தோற்றத்துக்கு குறிப்பாக இந்திய மற்றும் மேற்கு நாடுகளை கையாளக்கூடிய ஒருவர் ஹரிணிதான் என்ற அடிப்படையில், ரணில் போன்றவர்கள் விடுக்கும் சவால்களை அநுரகுமார முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆகவே இந்தியாவும், சீனாவும் இலங்கையை இன்னும் சற்று அதிகமாக உற்று நோக்க ஆரம்பித்துள்ள சூழலில் ரணில் விக்கிரமசிங்க தன்னுடைய அரசியல் காய்நகர்த்தல்களை ஆரம்பித்திருக்கிறார் என்பது பகிரங்கமாகின்றது.
ஆட்சிக்கு வந்து முதலாவது வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவுக்குச் செல்லவுள்ளார் அநுரகுமார திசாநாயக்க. அதன் பின்னர், இந்தியா அதிக ஈடுபாட்டை கொண்ட நகர்வுகளை இலங்கையில் மேற்கொள்ளும் என்றொரு எதிர்பார்ப்பு தேசிய மக்கள் சக்தியிடம் உள்ளது.
ஆனால், காலங்காலமாக மாறி மாறி ஆட்சியில் இருந்து வந்த பழம் பெரும் கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் 2016 இல் மகிந்த ராஜபக்ச உருவாக்கிய ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சி ஆகியன அநுரவின் ஆட்சியில் இலங்கை வெளியுறவுக் கொள்கை ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று எதிர்பார்க்கின்றன.
இக்கட்சிகளைப் பொறுத்தவரை 1994 ஆம் ஆண்டில் இருந்து எதிர்க்கட்சியில் இருந்த ஜேவிபி தற்போது தேசிய மக்கள் சக்தியாக மாறியிருந்தாலும் எதிர்க்கட்சியில் இருந்தபோது அவர்கள் இந்தியா தொடர்பாக வெளியிட்ட கருத்துக்கள் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகள் பற்றி வெளியிட்ட அபாயகரமான கருத்துக்களை தற்போது மீட்டல் செய்து ஜேவிபியின் உண்மை விம்பம் இதுதான் என்று பகிரங்கப்படுத்த முற்படுகிறார்கள். அவர்களின் விரும்பமும் அதுதான்.
அதனையே இந்தியாவுடன் உறவைப் பேண வேண்டும் என்று ரணில் வெளியிட்ட கருத்து எடுத்துக் காட்டுகின்றது. சந்திரிகா, மகிந்த மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் மெளனமாக இருந்தாலும் மறுபுறம் ரணில் அவ்வாறு கருத்திடுவதன் ஊடாக தன்னுடைய அரசியல் புலமையை வெளிப்படுத்தியுள்ளார் எனலாம்.
அதாவது, கடந்த இரண்டு வருடங்களாக தான் ஜனாதிபதியாக இருந்தபோது மேற்கொண்ட பொருளாதார செயற்திட்டங்களை அநுர அப்படியே கையாளுகின்றார் என்பதே ரணிலின் வாதம். சஜித் பிரேமதாசவும் அது பற்றிச் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆகவே, எதிர்க்கட்சியில் இருந்தபோது ஒரு கதை ஆட்சிக்கு வந்த பின்னர் திட்டிக் கவிழ்த்த முன்னைய அரசாங்கத்தின் அரசியல் – பொருளாதார அணுகுமுறைகளை அநுர கையாள்கிறார் என்பதை மக்கள் அறிய வேண்டும் என்பதே ரணிலின் ஆவல் என கருத முடிகிறது.