தான் ஜனாதிபதியாக பதவியேற்கும் முன்னர் பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவ்வாறு இல்லையெனில் பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் ட்ரம்ப் ஹமாஸ் அமைப்புக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நான் பெருமையுடன் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்கும் 2025 ஜனவரி 20ஆம் திகதிக்கு முன்னர் பணயக்கைதிகள் விடுவிக்கப்படாவிட்டால், பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும்” என்று ட்ரம்ப் கூறினார்.
எவ்வாறாயினும், ட்ரம்பின் கருத்திற்கு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பதிலளிக்கவில்லை.
இஸ்ரேலுடன் மோதல் ஆரம்பித்த நாளில் சுமார் 250 பேர் ஹமாஸால் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். அவர்களில் சுமார் 100 பேர் தற்போது ஹமாஸின் காவலில் உள்ளனர்.
இஸ்ரேல் இனப்படுகொலை நடத்துகிறது – முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்
இஸ்ரேலின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும், இஸ்ரேலிய இராணுவத்தின் முன்னாள் உயர் அதிகாரியுமான மோஷே யாலோன், வடக்கு காஸாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக நடத்தப்படுவது இனப்படுகொலை என்று வெளிப்படையாக விவரித்துள்ளார்.
இஸ்ரேலின் ஜனநாயக தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வடக்கு காசாவைப் பாருங்கள். ஆக்கிரமிப்பு, இனச் சுத்திகரிப்பு என்பன அங்கு மேற்கொள்ளப்படுகின்றன.
அவர்கள் அரேபியர்களின் நிலப்பரப்பை அழிக்கிறார்கள் என யாலோன் கூறினார்.
இஸ்ரேலின் தாராளவாத ஜனநாயகம் இழக்கப்படுகிறது. இஸ்ரேல் ஒரு ஊழல் மற்றும் தொழுநோயாளியான பாசிச மெசியானிய நாடாக மாறிவிட்டது என யாலோன் குற்றம் சாட்டினார்.
மோஷே யாலோன் மூன்று தசாப்தங்களாக இஸ்ரேல் பாதுகாப்பு படைகளில் (IDF) உயரடுக்கு Sayeret Matkal கமாண்டோ பிரிவின்தளபதியாக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.