தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை: உண்மையான பின்னணி என்ன?

0
371
Article Top Ad

 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் பொதுமன்னிப்பின் கீழே பொஸோன் போயா தினமான இன்று 16 தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

விடுதலை செய்யப்பட்ட 16 பேரும் அநுராதபுர சிறைச்சாலையில் இருந்தவர்கள். இவர்களில் இருவர் மாத்திரமே  முறையே 14 மற்றும் 10 வருட தண்டனைக்காலத்தின் அடிப்படையில் சிறையில் இருந்தவர்கள் ஏனையவர்கள் இரண்டு வருடத்திற்கும் எட்டுவருடத்திற்கும் இடைப்பட்ட தண்டனைக்காலத்திற்காக  சிறையில் இருந்தவர்கள்.

இவர்களில் பலரும் ஒருசில மாதங்களில் தமது தண்டனைக்காலத்தை முறைப்படி பூர்த்திசெய்து விடுதலையாக இருந்தவர்கள் என இந்த விவகாரம் பற்றி அக்கறையோடு செயற்படும் வழக்கறிஞரொருவர் உறுதிப்படுத்தினார்.

இந்த 16 பேரில் நீண்டகால அரசியல் கைதிகள் யாரும் விடுதலை செய்யப்படவில்லை  என்ற பதிவுகளை டுவிட்டரிலும் காணமுடிந்தது.

மைத்திரி-ரணில் நல்லாட்சி அரசாங்க காலத்தில் 120 பேர் வரையான தமிழ்க்கைதிகள் விடுவிக்கப்பட்டிருந்தனர்.இன்று விடுவிக்கப்பட்ட 16 பேர் போக  2015ம் ஆண்டிற்கு முன்னரான காலப்பகுதியில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்களில்  65 பேரும் 2015ல் ற்கு பின்னர் கைதுசெய்யப்பட்ட 40 பேரும் 2019 நவம்பர் மாதத்திற்கு பின்னர் கைதுசெய்யப்பட்ட 44 பேருமே உள்ளதாக ஊடகத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறைகளில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற தமிழ்க்கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும் என இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ கடந்த செவ்வாய்க்கிழமை (22/06/2021) பாராளுமன்றத்தில் பேசியிருந்தார்.

அமைச்சர் நாமலின் பேச்சைத் தொடர்ந்து தமிழ்க்கைதிகள் விடுதலை தொடர்பாக தமது பங்களிப்பு தொடர்பாக அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தனர்.

பலவருடங்களாக சொல்லோணா துன்பங்களை அனுபவித்துவருகின்ற தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தியாக இது அமைந்துள்ளமையால் இதற்கு வார்த்தைகளால் குரலெழுப்பியவர்கள் முதல் எழுத்தால் ஆவணங்களைச் சமர்ப்பித்தவர்கள் முதற்கொண்டு பங்களிப்புக்களை வழங்கிய அனைவருக்கும் முதற்கண் நன்றிகள்.

 

இருந்த போதிலும் இந்த நேரத்தில் முக்கியமாக ஒரு விடயத்தை பதிவுசெய்ய விரும்புகின்றேன்.

“Success has many fathers, but failure is an orphan?” “வெற்றிக்கு நிறைய தந்தையர்கள் இருப்பார்கள் ஆனால் தோல்வி ஒரு அநாதை  ?”

இது எந்த நாட்டுப் பொன்மொழியோ தெரியாது ஆனால் அடிக்கடி பயன்படுத்தப்படும் இந்த வாசகம் இலங்கையிலே தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விடயத்தில் வெளிப்படுத்தப்படும் கருத்துக்களைப் பார்க்கும் போது மிகவும் பொருத்தமாக இருக்கின்றது.

ராஜபக்ஸக்களை அறிந்தவர்களுக்கு அவர்கள் தமக்கு கீழ் உள்ளவர்களின் கருத்துக்களைக் கேட்டு முடிவு எடுப்பார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியுமா?

நாட்டை உலுக்கிக்கொண்டிருக்கின்ற கொரோனா பெருந்தொற்றின் மூன்றாம் அலை கடுமையாக இலங்கையைத் தாக்கிக்கொண்டிருக்கும் நிலையிலும் சுகாதாரத் துறையின் கோரிக்கைகளையே கண்டுகொள்ளவில்லை.

தமிழ் அரசியல்கைதிகள் இந்தப் பதத்தை ராஜபக்ஸ தரப்பிலுள்ளவர்கள் ஒருபோதும் ஏற்கப் போவதில்லை. அவர்களுக்கு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டவர்கள் என்பதே நிலைப்பாடு .

இந்த நிலையில் தமிழ் அரசியல்கைதிகள் விடயத்தில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கருத்துக்களைக் கவனத்திற்கொண்டிருப்பார்களா?அப்படிக் கவனத்திற்கொண்டிருப்பின் வரவேற்போம் ஏனெனில் மாற்றம் ஒன்றே மாறாததல்லவா!

அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தாம் சிறையில் இருந்த காலப்பகுதியில் அங்கிருந்த நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ்க் கைதிகளின் துன்ப நிலையை உணர்ந்து தனிப்பட்ட ரீதியில் சிலருக்கு உதவிய தருணங்கள் தொடர்பான பதிவுகளைப் பார்த்தேன். இதன் காரணமாக உண்மையிலேயே மனமாற்றம் ஏற்பட்டதா ?

உள்ளத்தில் ஏற்பட்ட கருணை உணர்வால் தமிழ் கைதிகள் பற்றி பேசினார் என்று ஏற்க முடியாதவர்களுக்கு கூட எதிர்காலத்தில் நாட்டின் தலைவராக வருவதற்கு பகிரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டுள்ள நாமல் தமிழ் மக்கள் மத்தியிலும் தன்னைப் பிரபல்யப்படுத்துவதற்கு இவ்வாறான நகர்வை மேற்கொண்டிருக்கலாம் என்ற கருத்து ஏற்புடையதாக இருக்கலாம். ஆனாலும்

உண்மையான காரணம் என்ன?

1) பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக்கோரும் இலங்கை தொடர்பான தீர்மானம் ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக்கோரும் இலங்கை தொடர்பான தீர்மானம் இம்மாதம் 10ம் திகதியன்று ஐரோப்பிய ஒன்றியப்பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருந்தது.

2017ம் ஆண்டில் GSP + சலுகையை இலங்கைக்கு வழங்கிய போது பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக இரத்துச் செய்துவிட்டு சர்வதேச நியமங்களுக்கு அமைவான சட்டமொன்றைக் கொண்டுவரவேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியிருந்தது.இந்த தீர்மானம் இலங்கை அரசாங்கத்தை உலுக்கியிருந்தது.

ஜிஎஸ்பி பிளஸ் சலுகை இல்லாது போனால் 580 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அதாவது இலங்கை நாணயத்தில் 11 ,550 கோடி ரூபா அளவிலான இழப்பை இலங்கை எதிர்கொள்ளவேண்டியேற்படும் எனக் கடந்தவாரத்தில் இலங்கையின் முன்னணி ஆங்கிலப்பத்திரிகையான சண்டே டைம்ஸ் சுட்டிக்காட்டியிருந்தது.

இந்த ஆண்டுமுதல் எதிர்வரும் 2026ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 29 பில்லியன் அமெரிக்க டொலர்களை அதாவது 5 லட்சத்து 70 ஆயிரம் கோடி இலங்கை ரூபா பெறுமதியான தொகையை வெளிநாடுகளுக்கு செலுத்த வேண்டிய இக்கட்டான நிலையில் இலங்கை உள்ளது. இதில் வருடத்திற்கு குறைந்தபட்சம் 4 பில்லியன் அமெரிக்க டொலர்களையேனும் செலுத்தவேண்டியது அவசியமாகும்
 வெளிநாடுகளிடம் பெற்றகடனைத் திருப்பிக்கொடுத்தத் தவறினால் என்ன நடக்கும்?
கடும் சிக்கலில் இலங்கையின் பொருளாதாரம் தத்தளித்துக்கொண்டிருக்கும்

தருணத்தில் ஜிஎஸ்பி பிளஸ் சலுகையும் இல்லாது போய்விட்டால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்பதை உணர்ந்து இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்தை சமாளிப்பதற்கு எடுத்த நடவடிக்கையாக தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை அமைந்ததா என்ற கேள்வியும் எழுகின்றது.

“தமிழ்க் கைதிகளை அரசாங்கம் எப்போதோ விடுதலை செய்திருக்க முடியும். அரசாங்கத்திலுள்ளவர்கள் இதுவிடயமாக தாமாகவே முன்வந்து தமிழ்க்கட்சிகளோடும் பேசியிருந்தனர். எனினும் இதன் மூலம் எப்படி அரசியல் லாபம் பெறலாம் எனத் தருணம் பார்த்துக்கொண்டிருந்தனர். எனினும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானம் வந்த நிலையில் தற்போது ஓடித்திரிகின்றனர்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கடந்த சனிக்கிழமை குளோப் தமிழுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்திருந்தார்.

அமைச்சர் நாமல் பாராளுமன்றத்தில் தமிழ்க் கைதிகள் விடுதலை தொடர்பாக தெரிவித்த கருத்துக்கள், அதனைத்தொடர்ந்து பயங்கரவாத தடைச் சட்டத்தை மாற்றியமைக்கப்போவதா நீதி அமைச்சர் அலி ஷப்றி தெரிவித்த கருத்துக்கள் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ 16 தமிழ்க்கைதிகளை விடுதலை செய்தமை அனைத்துமே ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானத்தின் எதிரொலியா என்ற ஐயப்பாடு வலுவாக எழுவதைத் தவிர்க்க முடியாது.

2)துமிந்த சில்வாவை விடுவிப்பதற்காக உசாத்துணை 

ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானம் ஏற்படுத்திய அழுத்தம் காரணமாக தமிழ்க்கைதிகள் விடுதலை இடம்பெற்றிருக்க வாய்ப்பில்லை என்கிறார் அரசியல் கைதிகளை விடுதலை செய்தவற்கான தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டாளர் அருட்தந்தை எம். சக்திவேல்.

Political prisoners under PTA should be released immediately – Fr. Sakthivel
அருட்தந்தை எம். சக்திவேல்.

“துமிந்த சில்வாவை விடுதலைசெய்யவேண்டும் என்ற நிலைப்பாட்டை அரசாங்கம் எடுத்தவிட்ட நிலையில் அதனால் மக்கள் மத்தியில் எழக்கூடிய அவதானத்தை திசைதிருப்புவதற்கும் நியாயப்பாட்டை ஏற்படுத்துவதற்குமாகவே தமிழ்க் கைதிகள் விடுவிக்கப்பட்டிருக்கவேண்டும்.”எனத் தெரிவித்தார் அருட்தந்தை சக்திவேல்.

முன்கூட்டியே ஏற்பாடுகளைச் செய்யாமல் நாமல் பாராளுமன்றத்தில் பேசிய இரண்டு நாட்களில் கைதிகள் விடுதலை எப்படிச் சாத்தியமாகும் எனக் கேள்வி எழுப்பினார் அருட்தந்தை சக்திவேல்.

அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கிய பௌத்த தேரர்கள் ஊடகங்கள் மத்தியில் இருந்தே கடந்த சில மாதங்களாக அரசாங்கத்திற்கு எதிராக எதிர்ப்புகளும் கடும் விமர்சனங்களும் வெளியாகிவருகின்ற நிலையில் சரிகின்ற ஆதரவுத்தளத்தை நிலைநிறுத்தவேண்டிய தேவை அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது.

ஆவணப்படம்

கோட்டாபய ராஜபக்ஸவை ஜனாதிபதியாக்குவதில் முக்கிய பங்குவகித்திருந்த ஊடகங்களில் ஒன்றான ஹிரு டிவி சில வாரங்களுக்கு முன்பாக பொலிஸாரின் செயல்கள் தொடர்பாக கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்தது.

இந்த நிலையில் துமிந்த சில்வாவை விடுதலை செய்ததன் மூலமாக ஹிரு ஊடக வலையமைப்பினரை தேர்தல் காலத்தில் இருந்தவாறு தம்வசப்படுத்துவதற்கு ஜனாதிபதி செயற்பட்டுள்ளார் எனவும் தேர்தல்காலத்தில் வழங்கிய வாக்குறுதியையே ஜனாதிபதி நிறைவேற்றியுள்ளார் எனவும் சமூக வலைத்தளங்களில் தற்போது கருத்துக்கள் பதிவாகி வருகின்றன.

துமிந்த சில்வா விடுதலை செய்யப்பட்டமையை அடுத்து இலங்கையில் பல்வேறு தரப்பட்டவர்கள் மத்தியிலும் ஏற்பட்டுள்ள கொந்தளிப்புக்களைப் பார்க்கின்றபோது தமிழ் அரசியல் கைதிகள் இன்று விடுவிக்கப்பட்டமையானது கவனத்தை திசைதிருப்புகின்ற அன்றேல் துமிந்தவின் விடுதலையை நியாயப்படுத்துவதற்கான ஒரு நகர்வாகவே பார்க்கவேண்டியுள்ளது.

அரசாங்கத்தின் தீர்மானமெடுக்கக்கூடிய நிலையிலுள்ள ராஜபக்ஸக்களும் அவர்களுக்கு ஆதரவளிக்கின்ற தரப்பினரும் தமிழ்க்கைதிகள் விடயத்தில் உண்மையாகவே அர்ப்பணிப்புடன் உள்ளனர் எனவும் இன்று 16 பேர் விடுவிக்கப்பட்டமை துமிந்தவிற்கான திசைதிருப்பவல்ல என்பதை உறுதிசெய்யவேண்டுமாக இருந்தால்பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக தடுப்பிலுள்ளவர்களையேனும் விரைந்து விடுதலைசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ஆக்கம் அருண் ஆரோக்கியநாதர்