உலகளவில் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்தவர் இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா. 45 ஆண்டுகளுக்கும் மேலாக இசையில் யாராலும் அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறார்.
இவருடைய இசையில் தற்போது உருவாகியுள்ள விடுதலை 2 திரைப்படம் வருகிற 20ஆம் தேதி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இளையராஜா இசையமைத்து வெளியான “திவ்ய பாசுரம்” நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நேற்றிரவு (15) நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக மாநிலங்களவை உறுப்பினரும், இசையமைப்பாளருமான இளையராஜா வருகை தந்தார். அவரை கோயில் நிர்வாகத்தினர் வரவேற்றனர். கடவுளைத் தவிர மனிதர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் எந்த ஒரு மரியாதையும் அளித்து அழைத்து வரக்கூடாது என்று அரசு தெரிவித்துள்ள நிலையில், இளையராஜா, ஆண்டாள் கோயிலில் உள்ள மணவாள மாமுனிகள் மடத்தின் சடகோப ராமானுஜ ஜீயர் ஆகியோருக்கு மேள தாளங்கள் முழங்க கோயில் யானையை அழைத்து வந்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து இளையராஜா தரிசனம் செய்ய அர்த்த மண்டபத்திற்குள் செல்ல முயன்றார். அப்போது அருகே இருந்த ஜீயர் மற்றும் பட்டர்கள் இளையராஜாவை அர்த்த மண்டபத்திற்கு வெளியே நிற்குமாறு கூறினர்.
அதனால் அந்த மண்டபத்தின் படியருகே நின்று கொண்டே அவர் கோயில் மரியாதையை பெற்றுக்கொண்டுள்ளார். தீவிர கடவுள் பக்தர், உலகளவில் தமிழகத்திற்கு பெருமை சேர்த்த இசைஞானியை இப்படி செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அர்த்தமண்டபத்திற்குள் செல்ல முயன்ற இசையமைப்பாளர் இளையராஜாவை வெளியே அனுப்பியதாக சர்ச்சை எழுந்த நிலையில் இது தொடர்பாக கோயில் நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டது.
அப்போது, ஆண்டாள் கோயிலில் கருவறைக்கு முன்பு உள்ள அர்த்த மண்டபத்தையும் கருவறை போன்றே பாவித்து வருவதாகத் தெரிவித்தனர். அர்த்த மண்டபத்திற்குள் ஜீயர்களைத் தவிர பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை என்றும் சம்பவத்தன்று ஜீயருடன் இளையராஜாவும் அர்த்த மண்டபத்திற்குள் தவறுதலாக நுழைந்ததாகவும் தெரிவித்தனர்.