ரஷ்யாவின் மொஸ்கோ அருகே அடுக்குமாடி குடியிருப்பு அருகே ஏற்பட்ட வெடி விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் ஒருவர் ரஷ்யாவின் கதிரியக்க இரசாயன மற்றும் உயிர்வேதியியல் பாதுகாப்புப் படையின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் இகோ கிரில்லோவ் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
செவ்வாய்க்கிழமை மொஸ்கோவில் ஒரு மின்சார ஸ்கூட்டரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் இந்த அனர்த்தம் நடந்துள்ளது.
இந்த சம்பவத்தில் “ரஷ்ய கூட்டமைப்பின் ஆயுதப் படைகளின் கதிரியக்க இரசாயன மற்றும் உயிர்வேதியியல் பாதுகாப்புப் படைகளின் தலைவரான இகோ கிரில்லோவ் மற்றும் அவரது உதவியாளர் கொல்லப்பட்டனர்” என்று விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் குற்றவியல் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் கதிரியக்க இரசாயன மற்றும் உயிர்வேதியியல் பாதுகாப்புப் படைகள், RKhBZ என அழைக்கப்படுகின்றன.
எவ்வாறாயினும், உக்ரைனில் தடைசெய்யப்பட்ட இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக இகோ கிரில்லோவ் மீது திங்களன்று உக்ரேனிய வழக்கறிஞர்கள் குற்றம் சுமத்தியிருந்தனர்.
எனினும், ரஷ்யா அந்தக் குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்திருந்தது.