உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக போர்களம் கண்டுள்ள சமார் 100க்கும் மேற்பட்ட வடகொரிய துருப்புகள் கொல்லப்பட்டுள்ளதாக தென்கொரிய நாடாளுமன்ற உறுப்பினர் லீ சியோங்-க்யூன் இன்று தெரிவித்துள்ளார்.
“டிசம்பரில், வட கொரிய துருப்புக்கள் போரில் ஈடுபட்டதாகவும், இதன் போது குறைந்தது 100 பேர் கொல்லப்பட்டனர்,” என்று தென் கொரியாவின் உளவு நிறுவனம் அளித்த விளக்கத்திற்குப் பின்னர் லீ தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கு எதிரான தனது போர் முயற்சிகளுக்கு உதவ ரஷ்யா சுமார் 10,000 வட கொரிய வீரர்களை நியமித்ததாக மேற்கத்திய ஆய்வாளர்கள் கூறியிருந்தனர்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் உக்ரைன் படைகளின் திடீர் தாக்குதலைத் தொடர்ந்து ரஷ்யா, குர்ஸ்க் பகுதி உட்பட ரஷ்யப் படைகளை வலுப்படுத்த வட கொரிய துருப்புக்கள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
எவ்வாறாயினும, “காயமடைந்தவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 1,000 ஐ எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று லீ மேலும் கூறினார்.
இந்நிலையில், ரஷ்யாவில் இழப்புகள் இருந்தபோதிலும் வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன் ஒரு புதிய சிறப்பு நடவடிக்கைப் படைக்கு பயிற்சி அளிக்கத் தயாராகி வருவதாக தெரிவித்துள்ளார்.
இறந்த வட கொரிய வீரர்களின் முகங்களை ரஷ்யா எரிக்கிறதா?
குர்ஸ்க் பிராந்தியத்தின் முன்னணியில் உள்ள பல கிராமங்களில் ரஷ்யாவிற்காகப் போராடும் வட கொரிய துருப்புகள் குறைந்தது 30 பேர் உயிரிழந்ததாகவும் கடந்த திங்களன்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அளவிலான வட கொரிய இழப்புகளை உக்ரைன் விவரித்தது இதுவே முதல் முறை ஆகும்.
உயிரிழந்த வடகொரிய துருப்புகளின் உடல் குர்ஸ்க் பகுதியில் அடக்கம் செய்வதற்கு முன்பு அவர்களின் அடையாளங்களை மறைக்க ரஷ்ய வீரர்கள், உயிரிழந்தவர்கள் முகங்களை எரிப்பதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அண்மையில் தெரிவித்திருந்தார்.
ரஷ்யா, வட கொரிய வீரர்களின் இருப்பை மறைக்க முயற்சிப்பதாகவும், பயிற்சி மற்றும் தயாரிப்புகளின் போது கூட அவர்கள் தங்கள் முகங்களைக் காட்டுவதைத் தடை செய்வதாகவும் ஜெலென்ஸ்கி கூறினார்.
இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட பென்டகன் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் பாட் ரைடர், வட கொரியப் படைகளிடையே கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களின் தகவல்கள் அமெரிக்காவிடம் இருப்பதாக உறுதிப்படுத்தினார்.