இலங்கை வரும் சீன கப்பல்களுக்கு திட்டமிடப்பட்ட பொறிமுறைமையின் அடிப்படையில் அனுமதி வழங்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர்கள் சந்திப்பில் நேற்று பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, இந்த வார இறுதியில் சீனாவில் இருந்து மருத்துக கப்பல் ஒன்று வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை கடல் பகுதியில் இதுபோன்ற கப்பல்கள் வருவதில் இலங்கைக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
சீன ஆராய்ச்சிக் கப்பல்கள் இலங்கைக்கு வருவதால், தேசிய பாதுகாப்பிற்கு ஏற்படும் அச்சுறுத்தல் குறித்து இந்தியா கடந்த காலங்களில் கவலைகளை எழுப்பியுள்ளது.
இந்நிலையில், சீனா மற்றும் இந்தியாவுடனான உறவுகளை இலங்கை இராஜதந்திர முறையில் கையாளும் என்று அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டின் (CPPCC) தேசியக் குழுவின் துணைத் தலைவர் கின் போயோங், இந்த வாரம் சீனா இலங்கையில் கடல்சார் ஆராய்ச்சி நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
பல்வேறு காரணங்களுக்காக தற்காலிகமாக நிறுத்தப்பட்ட கடல்சார் ஆராய்ச்சி நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக சீன அரசாங்கம் ஜனாதிபதி அநுரகுமாரவிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.