இந்தியா – இலங்கை இடையிலான பாலம் அமைக்கும் திட்டம் – யாருக்கு இதனால் சாதகம்?

0
19
Article Top Ad

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நிலத் தொடர்பை ஏற்படுத்தும் நோக்கில் கடல் மார்கமான பாலமொன்றை அமைக்கும் திட்டம் தொடர்பில் 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் பரவலாக பேசப்படுகிறது.

2015ஆம் ஆண்டுமுதல் இந்தப் பாலம் குறித்த பேச்சுகள் இருநாட்டிலும் உள்ள போதிலும் இதற்கான முயற்சிகள் தொடர்ச்சியாக தோல்வியுற்றே வருகின்றன.

கடந்த ஆண்டு நடுப்பகுதியில் இந்தியாவுக்குச் சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்தியாவுடன் நிலத் தொடர்பை ஏற்படுத்தும் இந்தப் பாலத்தை அமைப்பதற்கான இணக்கப்பாடுகளை வெளிப்படுத்தியிருந்தார். ஆனால், அதற்கு எதிராக கருத்துகள் இலங்கையில் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டன. என்றாலும், தொடர்ச்சியான பேச்சுகளில் ரணில் அரசு ஈடுபட்ட போதிலும் ஆட்சி மாற்றம் காரணமாக தற்போது இத்திட்டத்துக்கு என்ன நடக்கும் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

இந்தியா – இலங்கைக்கு இடையிலான பாலம் பற்றிய பேச்சுகள் 2015ஆம் ஆண்டு ஆரம்பமாகிவை அல்ல. இந்தப் பேச்சுகள் ஆரம்பமாகி ஒன்றரை நூற்றாண்டு கடந்துள்ளது. 1860ஆம் ஆண்டுதான் முதல் முதலில் இந்தப் பாலத்தை அமைக்கும் யோசனை முன்வைக்கப்பட்டது. அப்போது இலங்கையையும் இந்தியாவையும் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்துக்கொண்டிருந்தனர்.

ராமர் பாலம் அல்லது ஆதாம் பாலம் என அழைக்கப்பட்ட இந்த பகுதியில் பாலத்தை அமைத்தால் இருநாடுகளையுக்கும் இணைக்க முடியும் என்ற யோசனையை முன்வைத்தனர். என்றாலும், பின்னர் அந்தப் பேச்சுகள் அப்படியே கைவிடப்பட்டது.

பின்னர் 1955 ஆம் ஆண்டு ராமசாமி முதலாளியார் தலைமையில் குழுவொன்று இந்தியாவில் நியமிக்கப்பட்டது. அக்குழு சிறிதுகாலம் இத்திட்டம் தொடர்பில் ஆராய்ந்தது. என்றாலும், குறித்த பேச்சுகளும் சிறிது காலத்தின் பின்னர் இடைநிறுத்தப்பட்டன. 2002ஆம் ஆண்டில் மீண்டும் இந்த யோசனையை ஐ.தே.க இந்தியாவிடம் முன்வைத்தது. என்றாலும், யுத்த சூழல் காரணமாக குறித்த பேச்சுகள் இடைநிறுத்தப்பட்டன. பின்னர் 2015ஆம் ஆண்டு இந்தப் பேச்சுகள் எழுந்தன. தொடர்ச்சியாக பாலத்தை அமைக்க இந்தியா முழு ஈடுபாட்டுடன் இருக்கிறது. ஆனால், இலங்கையின் அரசியல்வாதிகளின் கடும் எதிர்ப்பால் தொடர்ந்து இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படாதுள்ளது.

முன்னாள் எம்.பிகளான லக்ஷ்மன் கிரியெல்ல, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயகார ஆகியோர் இத்திட்டத்துக்கு ஆரம்பத்தில் கடும் எதிர்ப்பை வெளியிட்டவர்களாக உள்ளனர். அதன் பின்னர் பௌத்த பீடங்கள் எதிர்த்தன. தற்போது கர்தினால் மெல்கம் ரஞ்சித் கூட இத்திட்டத்தை எதிர்கிறார்.

இந்தப் பாலத்தை அமைத்து இந்தியாவின் ஊடாக தாய்லாந்தின் பெங்கொக் நகர்வரை தரைவழியாக பயணிக்கும் வகையில் அதிவேக பாதையை அமைக்கும் திட்டத்தை இந்தியா முன்மொழிந்திருந்தது. இத்திட்டத்துக்காக ஆரம்பத்தில் 5.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும் என இந்தியா கூறியது. பின்னர் 6.5 பில்லியன் டொலர் செலவாகும் என கணிப்பிடப்பட்டுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஊடாக அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்ய முடியும் எனவும் இந்தியா முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கூறியிருந்தது. ஆனால், இதற்கு இலங்கையில் கடும் எதிர்ப்புகள் தொடர்ந்து வெளியிடப்படுவதுடன், இந்த விடயத்தில் இலங்கை அதன் முழு ஈடுபாட்டை காட்டவில்லை.

பாலத்தை அமைப்பதன் ஊடாக இலங்கைக்கே பாரிய நன்மைகள் உள்ளன. இந்த உண்மையை மறைக்கும் விதத்தில் இலங்கையின் அரசியல்வாதிகள் தெரிவித்த எதிர்ப்புகள் மக்கள் மத்தியில் எதிர்ப்பலைகளை உருவாக்கியுள்ளது. குறிப்பாக இந்தியாவின் ஒரு பிராந்தியமாக இலங்கை மாறும், இந்தியாவில் உள்ள பிச்சைகாரர்கள்கூட இலங்கைக்கு வந்துவிடுவார்கள், இத்திட்டத்தின் ஊடாக இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு பாரிய ஆபத்து, பொருளாதார சுரண்டப்படும், பௌத்தத்திற்கு பாதிப்பு என பல்வேறு பொய்யான காரணிகளை மக்கள் மத்தியில் விதைத்ததால் இன்றுவரை இத்திட்டத்தை முன்னெடுக்க முடியாதுள்ளது.

இலங்கை – இந்தியாவுக்கு இடையிலான பாலம் அமைக்கப்பட்டால் இலங்கை மக்களின் வாழ்வாதாரம் விரைவாக உயர்ந்துவிடும் என சர்வதேச பொருளாதார ஆய்வாளர்களும் உறுதியாக கூறுகின்றனர்.

பாலம் அமைக்கப்பட்டால் இந்தியாவில் இருந்து மிகவும் குறைந்த செலவில் பொருட்களை இறக்குமதி செய்ய முடியும். அதன் ஊடாக இலங்கையில் பொருட்களில் விலைகள் மிகவும் குறைவடையும். ஏற்றுமதிகள் அதிகரிக்கும், இலங்கை உற்பத்தியாளர் ஒருவர் தமது உற்பத்தியை தமது வாகனத்தின் ஊடாகவே இந்தியாவுக்கு இலகுவாக கொண்டுசென்று விற்பனை செய்ய முடியும். இந்தியாவின் சுற்றுலாப் பயணிகளின் வருகை பல இலட்சங்களில் அதிகரிக்கும். அதன் ஊடாக இலங்கையின் சுற்றுலாத்துறை புதிய பாய்ச்சலை பெறும். இந்தியா ஊடாக சர்வதேச சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு இலகுவாக வருகை தர முடியும்.

விமானம் மற்றும் கப்பல்களுக்கான செலவுகளை தவிர்த்து இலகுவாக சாதாரண பிரஜை ஒருவர் இந்தியா செல்ல முடியும். குறிப்பாக ஒரு தீவில் வாழ்கின்றோம் என்ற மனநிலையில் இருந்துகூட இலங்கையர்கள் விடுபட்டு உலகத்துடன் இலகுவாக ஒன்றிணையும் வாய்ப்புகளை பெற முடியும். பௌர்த்தவர்கள் அதிகமாக செல்லும் புத்தகயா எனப்படும் மகாபோதிக்காக யாத்திரையைகூட இலகுவாக மேற்கொள்ள முடியும்.

இந்தியாவுக்கு இந்தப் பாலத்தின் ஊடாக இலங்கையில் வர்த்தகத்தை மாத்திரமே மேற்கொள்ள முடியும். ஆனால், இலங்கைக்கு இதன் ஊடாக அனைத்துத் துறைகளிலும் நன்மையே கிடைக்கும் என்பதை இலங்கையின் அரசியல்வாதிகள் மறைத்து தங்களது சுயலாப அரசியலை செய்கின்றனர்.

பாலத்தின் ஊடாக விசா இல்லாத ஒருவர் வரமுடியாது. இருநாடுகளிலும் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு பலமாக இருக்கும். இவ்வாறு இந்தப் பாலம் மிகவும் பாதுகாப்பானதாகவும் இலங்கைக்கு மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியை தரக்கூடியதாக இருந்தும் இதனை அரசியல்வாதிகள் எதிர்ப்பதன் நோக்கம் வெறுமனே அவர்களது இனவாத, மதவாத மற்றும் சுயலாப அரசியலுக்காக மாத்திரமே என்பதை உணராதவர்களாக சிங்கள மக்கள் உள்ளனர்.

தற்போதைய தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கமும் இந்தப் பாலம் தொடர்பிலான பேச்சுகளில் ஈடுபட கூடாதென போர்க்கொடி உயர்த்துகின்றனர். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அண்மையில் இந்தியாவுக்கு தமது முதல் வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டு நாடு திரும்பியுள்ள போதிலும் இப்பாலம் தொடர்பில் பேசப்பட்டதான எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை. இருநாடுகளுக்கும் இடையில் கேபிள் முறை மூலம் மின்சார பரிமாற்றம் மற்றும் குழாய் மூலமாக எரிபொருள் பரிமாற்றங்களை மேற்கொள்ளும் திட்டங்கள் குறித்து நடத்தப்பட்ட பேச்சுகள் குறித்த தகவல்களை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

பாலம் அமைப்பது அல்லது நிலத் தொடர்பு குறித்து இருநாடுகளும் இடையில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவந்த பேச்சுகள் குறித்து எவ்வித கருத்துகளையும் வெளியிடவில்லை.

ஆனால், இந்தப் பாலம் அமைக்கப்பட்டால் அது இலங்கையின் பொருளாரத்தில் புதிய பாய்ச்சலை ஏற்படுத்தும். அந்த நோக்கத்தின் பிரகாரம்தான் கடந்த 2022ஆம் ஆண்டு இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இப்பாலத்தை அமைப்பதற்கான பேச்சுகளை மீள ஆரம்பித்திருந்தார். 2002ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் அமையப் பெற்றிருந்த சந்தர்ப்பத்திலும் அவரே இந்தப் பேச்சுகளை மீள ஆரம்பிக்க தூண்டில் போட்டிருந்தார். என்றாலும், 2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அவர் தோல்வியுற்றதால் பேச்சுகள் இடைநிறுத்தப்பட்டன.

மீண்டும் 2015ஆம் ஆண்டு அவர் பிரதமர் ஆனதும் பாலத்தை அமைக்கும் பேச்சுகளை ஆரம்பித்திருந்தார். அப்போது பாலம் அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டிருந்தால் 2020ஆம் ஆண்டுக்குள் நிறைவடைந்திருக்கும். அவ்வாறு நிறைவுற்றிருந்தால் இன்று இலங்கையின் பொருளாதார பாரிய வளர்ச்சியை நோக்கி நகர்ந்திருக்கும். என்றாலும், கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் இந்தப் பேச்சுகளை தொடரவில்லை. தற்போது ரணில் விக்ரமசிங்க விட்டுச் சென்ற இடத்திலிருந்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இத்திட்டத்தை முன்னோக்கி கொண்டுசென்றால் அது இலங்கையின் வளர்ச்சிக்கான சிறந்த பாதையாக அமையும்.

ஆனால், தேசிய மக்கள் சக்தி இத்திட்டத்தை இரண்டு மனதாக பார்க்கிறது. ஜனாதிபதி அநுரகுமார கூட இத்திட்டம் தொடர்பில் எதிராக கருத்துகளை முன்வைத்திருந்தார். நாட்டு மக்களின் முழுமையான ஆதரவை பெற்றுள்ள அவர்கள், பொருளதாரத்தை விரைவாக வளர்ச்சிப்பாதைக்கு கொண்டுவருவதாக தேர்தல் வாக்குறுதியை வழங்கியிருந்தனர். அந்த எதிர்பார்பை அடைய சிறந்த திட்டங்களில் ஒன்றாக உள்ள இந்திய – இலங்கை இடையிலான பாலத்தை அமைக்கும் பணிக்கு பச்சை கொடி காட்டினால் 2030ஆம் ஆண்டுக்குள் இப்பாலம் அமைக்கும் பணிகள் நிறைவுற்று இலங்கையின் பொருளாதாரத்தை அடுத்தகட்டம் நோக்கி நகர்வதற்கு வழிசமைக்கும்.

பாரம்பரிய அரசியலில் பயணத்தை தேசிய மக்கள் சக்தியும் தொடர போகிறதா அல்லது உண்மையான பொருளாதார அபிவிருத்தியை நோக்கி நாட்டை கொண்டுசெல்ல போகிறதா என பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here