இலங்கை – இந்திய மீனவர் விவகாரம் – தமிழ் எம்.பிகள் தலையிட வேண்டும் ; மீனவர் சங்கப் பிரதிநிதிகள் அழைப்பு

0
11
Article Top Ad

இலங்கை ஜனாதிபதியின் முதலாவது உத்தியோகபூர்வ இந்திய விஜயத்தின் போது, இரு நாடுகளுக்குமிடையிலான கடற்றொழிலார் பிரச்சினை தொடர்பாக எடுக்கப்பட்ட கலந்துரையாடல்கள் மற்றும் தீர்மானங்கள் குறித்து நாட்டுக்கு தெளிவான தகவல்கள் வழங்கப்படாமையால், வடபகுதி மீனவர்கள் தமது வாழ்வாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்ந்தும் நீடிக்குமென கவலையடைந்துள்ளனர்.

எனவே தமிழ்நாட்டு முதலமைச்சருடன் இணைந்து இந்தப் பிரச்சினைக்கு அமைதித் தீர்வை எட்டுவதற்கு வடக்கிலுள்ள தமிழ் மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மீனவர் தலைவர்கள் வலியுறுத்துகின்றனர்.

வடமாகாண மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களின் கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் வட மாகாண ஆளுநர் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட வடமராட்சி வடக்கு மீனவர் கூட்டுறவு சங்க சமாசத்தின் முன்னாள் தலைவர் நா. வர்ணகுலசிங்கம், இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து மீன் பிடியில் ஈடுபடுவார்களோ என்ற கவலை வடக்கு மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

“ஜனாதிபதி இந்த விடயத்தை மனிதாபிமான அடிப்படையில் அனுகுவோம் என்ற வகையிலான கருத்து வெளியிட்டு வந்துள்ளார். ஆனால் அங்கு என்ன பேசப்பட்டது, கலந்துரையாடப்பட்ட விடயங்கள் எவை என்பது குறித்து அறிக்கைகள் எதுவும் வெளியிடப்படவில்லை. எனவே நாம் என்ன நினைக்கிறோம் என்றால், மனிதாபிமான காரணங்கள் எனக் கூறி அவர்கள் மீண்டும் எங்கள் கடலுக்கு வருவார்களோ என்ற கவலை எமக்கு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஆளுநரிடம் தெரிவித்துள்ளோம். இது தொடர்பாக அமைச்சரிடம் பேசுவதாக குறிப்பிட்டார்.”

கடந்த வாரம் புதுடில்லியில் இந்தியப் பிரதமருக்கும் இலங்கை ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது மீனவர்கள் பிரச்சினை முக்கியமானது என இரு நாட்டுத் தலைவர்களும் குறிப்பிட்டிருந்தனர்.

“மீனவர்கள் பிரச்சினை மனிதாபிமான அடிப்படையில் கையாளப்பட வேண்டும் என்பது குறித்து நாங்கள் கலந்துரையாடினோம்” என இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை ஜனாதிபதி அனுர குமார திஸநாயக்கவுடன் கூட்டாக இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

இதேவேளை ஜனாதிபதி அனுர தமது எக்ஸ் சமூக வலைதளத்தில், தம்மிடையேயான உரையாடலில், “சட்டவிரோத மீன்பிடியை நிறுத்துவது” குறித்தும் பேசப்பட்டதாக பதிவிட்டிருந்தார்.

மேலும் இந்திய பிரதமருடன் கூட்டாக பேசும் போது, பாக்கு நீரிணைப் பகுதியில், சட்டவிரோத மீன்பிடி முறைகள் மூலம் பாரிய சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது என்ற தமது கவலையை வெளிப்படுத்தினார்.

“மீனவர்கள் விடயம் குறித்த ஆறாவது கூட்டம் அண்மையில் முடிவடைந்ததை வரவேற்ற நாங்கள், மீனவர்களின் பிரச்சனையை தீர்பதற்கு கூட்டு அணுகுமுறையின் மூலம் நீடித்திருக்கும் வகையில் அணுக வேண்டும் என்பதையும் நாம் கலந்துரையாடினோம். சீர் செய்ய முடியாத வகையில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், இரு நாடுகளிலும் தடை செய்யப்பட்டுள்ள இழுவைமடி வலையை பயன்படுத்தப்படுவதை உணர்ந்து, உடனடியாக அந்த நடைமுறை நிறுத்தப்பட வேண்டும் என நான் வேண்டுகோள் விடுத்தேன்”.

ஜனாதிபதியின் இந்திய விஜயம் தொடர்பில் அறிவிக்கும் வகையில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் டிசம்பர் 20ஆம் திகதி காலை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், தென்னிந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவது குறித்து இந்த விஜயத்தின் போது கலந்துரையாடப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார்.

நீண்டகாலமாக நிலவி வரும் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை காண்பதற்கு இரு தரப்பினரும் விரைவாகத் தலையிட ஒப்புக்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் உடனான கலந்துரையாடலில் கலந்துகொண்ட வட மாகாண கடற்றொழிலானர் இணையத்தின் பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா மீனவர் பிரச்சினையை அமைதியான முறையில் தீர்க்க மீனவ சமூகம் தயாராகவுள்ளது என்பதை தமிழ்நாட்டு முதலமைச்சருக்கு எழுத்து மூலம் அறிவிக்குமாறு தமிழ் மக்களின் பிரதிநிதிகளை கேட்டுக்கொண்டார்.

“எங்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற, வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற நான்கு மாவட்டங்களினதும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் நாம் தயவாக கோரிக்கை விடுக்கின்றோம். இந்த மீனவர் பிரச்சினையை சுமூகமாகவும் ஒற்றுமையாகவும் நல்லெண்ணத்துடன் தீர்க்க மீனவர் சமூகம் தயாராக இருக்கின்றது. தமிழக முதலமைச்சருக்கு எழுத்து மூலமாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பி.ஸ்ரீதரனாக இருக்கலாம் கஜேந்திரகுமார் பொன்னம்பலமாக இருந்தாலும் சரி, ரவிகரனாக இருந்தாலும் சரி, செல்வம் அடைக்கலநாதனாக இருந்தாலும் சரி உங்கள் கடிதத் தலைப்பில் தமிழ முதலமைச்சருக்கு எழுத்து மூலம் மீனவர்களின் பிரச்சினைகளை மாத்திரமன்றி பிரச்சினையை சுமூகமாக தீர்ப்பதற்கு தயார் என்பதை அறிவியுங்கள்.”

இந்திய மீனவர்களால் இந்நாட்டில் உள்ள ஐம்பதாயிரம் மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்துவதற்கு வடக்கிலுள்ள தமிழ் மக்களின் பிரதிநிதிகள் தலையிட வேண்டுமென அவர் மேலும் கேட்டுக் கொண்டார்.

“வடமாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 50,000 குடும்பங்கள் மற்றும் இரண்டு இலட்சம் மக்களின் நலனுக்காக இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறு தமிழ்த் தேசிய மட்டத்தில் செயற்படும் கட்சிகள் மற்றும் தலைவர்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்.”

வடக்கு மாகாண ஆளுருடன் இடம்பெற்ற தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களம், காணி ஆணையாளர் அலுவலகம் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் வடக்கு மாகாண மீனவர் சங்க பிரதிநிதிகள் மற்றும் ஆளுநருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here