இலங்கை அணிக்கும் நியூஸிலாந்து பதினொருவர் அணிக்கும் இடையிலான முதல் டி20 பயிற்சிப் போட்டியில் இலங்கை அணி 32 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
நியூஸிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பணயம் மேற்கொண்டுள்ள இலங்கை அணிக்கும் நியூஸிலாந்து அணிக்கும் இடையிலான மூன்றுப் போட்டிகள் கொண்ட டி20 மற்றும் மூன்றுப் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் எதிர்வரும் 28ஆம் திகதி ஆரம்பமாகின்றது.
இதனையொட்டி நேற்று (23) நடந்த டி20 பயிற்சி ஆட்டத்தில் இலங்கை அணி, நியூஸிலாந்து பதினொருவர் அணியை லின்கோலில் எதிர்த்தாடியது.
மழை காரணமாக அணிக்கு 10 ஓவர்கள் வழங்கப்பட்ட போட்டியின் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 10 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 128 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
துடுப்பாட்டத்தில் பத்தும் நிஸ்ஸங்க 31 ஓட்டங்களையும் , வனிந்து ஹசரங்க 27 ஓட்டங்களையும், பானுக ராஜபக்ச 25 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். பந்துவீச்சில் மெத்யூவ் பிஸ்ஸர் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
பின்னர் 129 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கினை நோக்கி பதிலுக்கு களம் நுழைந்த நியூஸிலாந்து பதினொருவர் அணியால் 10 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுக்களை இழந்து 96 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொள்ள முடிந்தது.
துடுப்பாட்டத்தில் மெத்யூவ் பொய்லி ஆட்டமிழக்காமல் 57 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் நுவான் துஷார இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார். இதனால் இலங்கை அணி 32 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.