போர்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நாளை இடம்பெறவுள்ள நான்காவது போட்டியில் இந்திய அணியில் பல மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதலாவது மாற்றமாக அணித்தலைவர் ரோகித் ஷர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் இணைந்து தொடக்க வீரராக களமிறங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெர்த்தில் நடந்த தொடரின் முதல் போட்டியில் விளையாடாத ஷர்மா, அடிலெய்டில் மற்றும் பிரிஸ்பேனில் இடம்பெற்ற அடுத்த இரண்டு போட்டிகளிலும் ஆறுவது இடத்திலும் களமிறங்கினார்.
நடந்து முடிந்த மூன்றுப் போட்டிகளிலும் கேஎல் ராகுல் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கி சிறப்பாக துடுப்பெடுத்தாடியிருந்தார். இந்நிலையில், அவரை மூன்றாவது இடத்தில் களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த மாற்றங்கள் காரணமாக தற்போது மூன்றாவது இடத்தில் விளையாடி வரும் சுப்மான் கில் எந்த வரிசையில் களமிறங்கி துடுப்பெடுத்தாடுவார் என் கேள்வி எழுந்துள்ளது.
மெல்போர்னில் நாளை இடம்பெறவுள்ள போட்டியில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாடுவது குறித்து இந்திய அணி ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
இதனால் சகலதுறை வீரர் வாஷிங்டன் சுந்தர் தங்கள் விளையாடும் 11 அணியில் மீண்டும் களமிறங்கக்கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் ஜெய்ஸ்வால் மற்றும் விராட் கோலி சதம் அடித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். எனினும், அடுத்த இரண்டுப் போட்டிகளிலும் அவர்கள் கடுமையாக தடுமாறியிருந்தனர்.
கேஎல் ராகுல் மட்டுமே ஆறு இன்னிங்ஸ்களில் இரண்டு அரைசதங்களுடன் ஓரளவு சிறப்பாக துடுப்பெடுத்தாடியுள்ளதுடன், இந்த தொடரில் அதிக ஓட்டங்களை குவித்த வீரர்களில் டிராவிஸ் ஹெட்டுக்கு அடுத்தபடியாக இரண்டாமிடத்தில் உள்ளார்.
ஜெய்ஸ்வால் 193 ஓட்டங்களுடன் இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்தாலும், இதில் முதல் போட்டியில் பெற்றுக்கொண்ட 161 ஓட்டங்கள் அடங்கும்.
இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ஷர்மா மற்றும் விராட் கோலி துடுப்பாட்டத்தில் மீண்டும் மீண்டும் சொதப்பியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.