அஸ்ட்ரா செனெக்கா தடுப்பூசியை முதற்கட்டமாக ஏற்றியவர்களுக்கு 2ம் கட்டமாக பைஸர் அன்றேல் மொடெர்னா தடுப்பூசிகளை ஏற்ற சுகாதார அமைச்சு பச்சைக்கொடி!

0
229
Article Top Ad

முதற்கட்டமாக அஸ்ட்ரா செனெக்கா  தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களுக்கு இரண்டாம் டோஸாக பைசர் அல்லது மொடர்னா தடுப்பூசிகளை வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதற்கான அனுமதியை சுகாதார அமைச்சின் தொற்று நோய் தொடர்பான ஆலோசனைகுழு வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

நாட்டில் அவசர நிலைமைகளின்போது மொடர்னா தடுப்பூசியை வழங்க தேசிய ஒளடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை Pfizer- BioNTech, Moderna தடுப்புமருந்துகளை பயன்படுத்துவதால் ஏற்படும் அரிய இதய வீக்கம் குறித்த எச்சரிக்கைக் குறிப்பை அமெரிக்காவின் உணவு, மருந்து நிர்வாக அமைப்பு மருந்தின் விவரங்களில் சேர்த்துள்ளது.

தடுப்புமருந்துகள் குறித்து, சுகாதாரப் பராமரிப்புச் சேவை நிறுவனங்களுக்கு வழங்கப்படும் விவரங்களில் அந்த எச்சரிக்கை சேர்க்கப்பட்டுள்ளது.

குறிப்பாகத், தடுப்பூசியை இரண்டாம் முறை போட்ட சில நாள்களில் அறிகுறிகள் தென்படும்போது, myocarditis, pericarditis போன்ற இதய வீக்கம் ஏற்படுவதற்கான ஆபத்து அதிகரிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இதுவரை 300 மில்லியன் முறை Pfizer-BionTech, Moderna தடுப்புமருந்துகள் போடப்பட்டுள்ளன.

அந்த இரண்டு தடுப்புமருந்துகளும், MRNA தொழில்நுட்ப அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளன. இம்மாதம் 11-ஆம் திகதி நிலவரப்படி இதய வீக்கம் ஏற்பட்டதாக 1,200க்கும் மேற்பட்ட சம்பவங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

பெரும்பாலும் இளம் வயது ஆண்களே பாதிக்கப்படுவதாகத் தெரிகிறது.

30 வயதுக்கும் குறைவானோரில், சுமார் 310 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

அவர்களில் 295 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர்.

இந்நிலையில், அமெரிக்கா மட்டுமல்லாமல் மற்ற நாடுகளும் இதய வீக்கம் குறித்து விசாரணை நடத்திவருகின்றன.