இலங்கையின் கல்விக் கொள்கை குறித்தும் பயங்கரவாதப் பொலிஸார் விசாரணை

0
7
Article Top Ad

தமிழ் மக்களின் பாரம்பரிய மற்றும் மரபார்ந்த சொல்லை சமூக ஊடகங்களில் பயன்படுத்துவதை பயங்கரவாதச் செயலாகக் கருதுவது இலங்கையின் கல்விக் கொள்கைக்கு முரணானது என விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட வடக்கு அரசியல் செயற்பாட்டாளர் ஒருவர் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரிடம் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 28ஆம் திகதி காலை பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் கிளிநொச்சி பிரிவுக்கு அழைக்கப்பட்ட கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் தலைவர் அருணாச்சலம் வேழமாலிகிதனிடம் பொலிஸார் சுமார் இரண்டு மணிநேரம் அவரது சமூக ஊடக பயன்பாடு குறித்து விசாரணை நடத்தியுள்ளனர்.

தமிழ் இலக்கியத்தில் காணப்படும் ‘வீர வணக்கம்’ என்ற சொல்லை பேஸ்புக் தளத்தில் பின்னூட்டமாக (comment) பதிவிட்டமை குறித்து பயங்கரவாதத் தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு தன்னிடம் கேள்வி எழுப்பியதாக அருணாச்சலம் வேழமாலிகிதன் கூறுகிறார்.

பாடசாலை பாடப்புத்தகங்களில் கூட இடம்பெற்றுள்ள இதுபோன்ற விடயத்தை கேள்வி கேட்பது இலங்கையின் கல்விக் கொள்கைக்கு எதிரானது என தமிழ் ஆர்வலர் பொலிஸ் அதிகாரியிடம் கூறியுள்ளார்.

“வீர வணக்கம் என்ற சொல்லைக் காட்டி கேட்டார்கள். வீர வணக்கம் எனப்படுவது தமிழர்களின் மரபார்ந்த சொல். இது விடுதலைப் புலிகளின் சொல்லோ அல்லது அவர்கள் உருவாக்கிய சொல்லோ அல்லது தடை செய்யப்பட்ட சொல்லோ அல்ல. பழைய தமிழ் இலக்கியங்களில் உள்ள ஒரு சொல். இது தமிழர் பண்பாட்டுடன் இணைந்த ஒன்று. உயர்தர இலக்கிய பாடப்புத்தகத்தில் இது காணப்படுகிறது என சொன்னேன். அரச பாடப்புத்தகத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது எனக் கூறினேன். ஆகவே இலங்கையின் கல்விக்கொள்கைக்கு எதிராக எங்களை அழைத்து விசாரிக்கின்றீர்கள் என அவருக்கு சொன்னேன்.”

‘வீர வணக்கம்’ என்ற சொல் தமிழ் கலாச்சாரத்தில் மக்களுக்காக சேவையாற்றிய அல்லது போராடி உயிரிழந்த ஒருவருக்கு மரியாதை செலுத்த பயன்படுத்தப்படுகிறது. ‘விரு உபஹார’ (විරු උපහාර) என்பது இதன் எளிய சிங்கள அர்த்தம்.

‘கமென்ட், லைக் வேண்டாம்’

கடந்த டிசம்பர் 28ஆம் திகதி பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் கிளிநொச்சிப் பிரிவு அதிகாரியினால் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தியமை தொடர்பில் தன்னிடம் மேலும் கேள்வி எழுப்பப்பட்டதாகக் கூறும் அருணாச்சலம் வேழமாலிகிதன், சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கும் பொலிஸார் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாகவும் குறிப்பிடுகின்றார்.

“முகநூல் பதிவுகள், என்னுடைய பதிவுகள் அல்ல மற்றவர்களுடைய பதிவுகள் அதற்கு கொமன்ட் பண்ணியிருக்கின்றேன். லைக் பண்ணி இருக்கின்றேன். மற்றது இனவாதத்தை தூண்டும் வகையில் வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்தியுள்ளேனாம். குறிப்பாக எங்களைப் போன்றவர்களின் பதிவுகளைப் பார்த்துதான் இளையவர்கள் இவ்வாறான செயற்படுகின்றனராம். ஆகவே அத்தகைய இனவாத பதிவுகள் அல்லது தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் இலட்சினைகள் மற்றது விடுதலைப் புலிகள் பற்றிய விடயங்களை இடக்கூடாது.” எனக் குறிப்பிட்டனர்.

இவ்வாறு சட்டங்களைப் போட்ட பொலிஸார், அவ்வாறு நான் பதிவிட்ட பதிவுகள் எதனையும் தனக்கு காண்பிக்கவில்லை என அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

வேறு சில நபர்களின் பேஸ்புக் கணக்குகளைக் காட்டி அவர்களைத் தெரியுமா என விசாரணை நடத்திய பயங்கரவாதத் தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினர், அவர்களை எனக்குத் தெரியாது என தான் குறிப்பிட்டதாகவும், அவர்களின் பதிவுகளுக்கு பின்னூட்டம் மற்றும் விருப்பங்களை (like and comment) பதிவு செய்ய வேண்டாம் என பொலிஸார் தனக்கு அறிவுறுத்தியதாகவும் அருணாச்சலம் வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார்.

மக்களை தவறாக வழிநடத்தும் பதிவுகளை பதிவிட வேண்டாம் என அறிவுறுத்தும் வகையில் தான் அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வு பிரிவின் கிளிநொச்சி பிரிவு அதிகாரிகள் அரசியல் செயற்பாட்டாளரிடம் மேலும் தெரிவித்துள்ளனர்.

“வேறு யாரும் பதிவிட்டால் பரவாயில்லை. அரசியல்வாதிகள் பதிந்தால் மக்கள் அதனை பின்பற்றுவார்களாம். மக்களை தவறான வழியில் திருப்பக்கூடாது என்பதை பற்றி அறிவிக்கவே இந்த விசாரணை நடந்ததாம்.”

கிளிநொச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் அலுவலகத்தில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து 2013ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் திகதி கைது செய்யப்பட்ட அருணாசலம் வேழமாலிகிதன், ஒரு வருடத்திற்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்ததன் காரணமாக கடந்த காலங்களில் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரிடம் பல தடவைகள் அருணாச்சலம் வேழமாலிகிதன் வாக்குமூலங்களை வழங்க நேரிட்டதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here