இந்திய, சீன உறவை இலங்கை எவ்வாறு கையாள்கிறது?

0
12
Article Top Ad

இந்தியா, சீனா மற்றும் அமெரிக்காவின் இராஜதந்திர நெருக்கடிக்குள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் சிக்கியுள்ளதால் எடுக்கப்படும் சில முடிவுகளை சில மணித்தியாலங்களுக்குள்ளேயே மாற்றியமைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவதாக இராஜதந்திர வட்டாரங்களில் அறிய முடிகிறது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் இந்திய பயணம் கடந்த 15ஆம் திகதி ஆரம்பமான போது, ​​சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டின் பிரதித் தலைவர் கின் போயோங்(Qin Boyong) இலங்கை வந்திருந்தார். அநுர, இந்தியாவில் சந்திப்புகளை நடத்திக்கொண்டிருந்த தருணத்தில் கின் இலங்கை அரசாங்கத்தின் அமைச்சர்களைச் சந்தித்ததுடன், இந்தியாவில் அநுரவின் நடவடிக்கைகளையும் கண்காணித்துள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை, அநுரவின் சொந்த ஊரான அநுராதபுரம் தம்புத்தேகமவில், சீன நிதியுதவியில் இடம்பெறும் திட்டத்திற்கான வைபவம் ஒன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றிய வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க, ஏனைய நாடுகளுடனான இலங்கை உறவுகளை தொடரும் அதேவேளை, சீனாவுடனான ஜே.வி.பி.யின் உறவு பலமாக பலமாக இருக்கும். ஜே.வி.பி வேறு எந்த நாட்டுடனும் உறவுகளைப் பேணவில்லை எனக் கூறியிருந்தார்.

அரசாங்கம் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தியா மற்றும் சீனாவுடன் சமமான உறவை பேணும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதுடன், கட்சி ரீதியாக ஜே.வி.பி சீனாவுடன் பலமான உறவை கட்டியெழுப்ப விரும்புகிறது.

அநுர இந்தியாவில் இருக்கும் தருணத்தில் அவரது அரசாங்கத்தின் வர்த்தக அமைச்சர், அநுரவின் பிறந்த இடத்தில் சீன அதிகாரிகள் முன்னிலையில் இவ்வாறானதொரு அறிவிப்பை விடுத்தமை குறித்து இராஜதந்திரிகள் அவதானம் செலுத்தியுள்ளனர். அத்துடன், ஜனாதிபதி அநுரகுமார இந்தியாவிலிருந்து திரும்பியதும் கின் போயோங்குடன் சந்திப்பொன்றையும் நடத்தியிருந்தார்.

அநுரவுடனான சந்திப்பில் இலங்கையில் தடைசெய்யப்பட்ட கடல்சார் ஆராய்ச்சியை மீள ஆரம்பிக்க சீனா எதிர்பார்த்துள்ளதாக கின் கருத்து வெளியிட்டிருந்தார். இந்தச் சந்திப்பை தொடர்ந்து இடம்பெற்றிருந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகச்சந்திப்பில், ஆய்வு கப்பல்கள் இலங்கைக்கு வருவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை தளர்த்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறியிருந்தார்.

நளிந்த ஜயதிஸ்ஸவின் அறிவிப்புக்கு பின்னர் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சருடன் சந்திப்பொன்றில் ஈடுபட்டிருந்தார். இதன்போது இந்த விவகாரம் பேசப்பட்டிருக்கலாம் என இராஜதந்திர வட்டாரங்களில் அறிய முடிந்ததுடன், இந்தச் சந்திப்பின் பின்னர் இந்தியப் பயணம் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகச்சந்திப்பில், சர்வதேச ஆராய்ச்சி கப்பல்களின் வருகைக்கான தடைகளை நீக்க எவ்வித தீர்மானமும் அரசாங்கம் எடுக்கவில்லை என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கூறியிருந்தார்.

இந்த விவகாரத்தில் இந்தியாவை போன்று அமெரிக்காவின் அழுத்தமும் இருக்கலாம் என்றும் இலங்கை அரசாங்கம் கூறும் சில விடயங்களை மீள மாற்றிக்கொள்வது குறித்து இராஜதந்திரிகள் அவதானம் செலுத்தியுள்ளதாகவும் தெரியவருகிறது.

குறிப்பதாக இந்தியப் பயணம் மற்றும் இருநாட்டு கூட்டறிக்கையில் கூறப்பட்ட விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் அமைச்சர்கள் மாறுபட்ட கருத்துகளை வெளியிட்டு வருகின்றமை இராஜதந்திர ரீதியில் அரசாங்கம் வழங்கும் உறுதிமொழிகளுக்கு எதிரானதாக இருப்பதாகவும் இதுகுறித்து இராஜதந்திரிகள் அவதானம் செலுத்தியுள்ளதாகவும் தெரியவருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here