தாய்வான் சீனாவின் ஒரு மாநிலம் – அநுரவின் தீர்மானத்தால் சர்வதேச நெருக்கடி ஏற்படும் அபாயம்

0
9
Article Top Ad

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சீன விஜயத்தை முன்னிட்டு, இலங்கை ஒரே சீனா கொள்கையை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என வெளிவிவகார மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்தத் தீர்மானத்தில் சட்ட ரீதியான சீனாவாக சீன மக்கள் குடியரசை மாத்திரமே ஏற்றுக்கொள்வதாகவும் தாய்வான் சீனாவின் ஒரு மாநிலம் என்பதை இலங்கை அதன் வெளிவிவகார கொள்கையில் கடைப்பிடிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்தக் கொள்கையின் அடிப்படையில் சீனாவுடனான உறவுகள் பேணப்படும் என்றும் அந்த தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தாய்வான் முழுமையாக சீனாவுக்குச் சொந்தமான பகுதியென சீனா தொடர்ந்து கூறிவருதுடன், அவ்வப்போது தாய்வானுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் விவகாரங்களிலும் சீனா ஈடுபட்டு வருகிறது. இதற்கு அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகள் கடும் எதிர்ப்பை வெளியிடுவதுடன், தாய்வான் சுதந்திரமான நாடு என வாதாடி வருகின்றன. சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு தாய்வான் தொடர்ந்து கடுமையான எதிர்ப்புகளை வெளியிட்டும் வருகிறது.

இந்த நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சீன பயணத்துக்கு முன்னர் இத்தகையதோர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமை பல்வேறு சர்ச்சைகளுக்கு வழிவகுக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் கூறுவதுடன், இது இலங்கைக்கு இராஜதந்திர நெருக்கடிகள் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறுகின்றனர்.

இலங்கையின் கடந்த அரசாங்கங்களும் இந்த விவகாரம் தொடர்பில் வெளிப்படையான பதில்களை அளிக்காது செயல்பட்டிருந்தன. கடந்த அரசாங்கங்கள் போல் அதேகொள்கையை சமகால அரசாங்கமும் கடைபிடித்தாலும் ஜனாதிபதியின் சீன பயணத்துக்கு முன்னர் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமையால் பல்வேறு நெருக்கடிகள் அரசாங்கத்துக்கு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

அரசாங்கத்தின் இந்தத் தீர்மானம் சீனாவுக்கு சார்பான கொள்கையை வெளிப்படுத்தும் வகையில் உள்ளதாகவும், சீனாவிடமிருந்து அதிக உதவிகளை பெறுவதை இலக்காக கொண்டு அரசாங்கத்தின் நகர்வுகள் இருப்பதாகவும் கூறும் அரசியல் ஆய்வாளர்கள், இத்தகையை கொள்கை முடிவு மேற்குலக நாடுகளின் எதிர்ப்புகளுக்கும் அழுத்தங்களுக்கும் இலங்கை உள்ளாகும் சூழலை உருவாக்கலாம்.
அணிசேராக் கொள்கையின் பிரகாரம் இலங்கை செயல்பட வேண்டுமென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க , கடந்த காலங்களில் கூறியிருந்தார்.

என்றாலும், தாய்வான் தம்மை சுயாதீன நாடாக கூறிவரும் சூழலில் தாய்வானை சீனாவின் மாநிலமாக ஏற்றுக்கொள்வதாக இலங்கையின் முடிவு சர்வதேச ரீதியில் பல்வேறு நெருக்கடிகளை உருவாக்கும். இது அரசாங்கத்தின் எதிர்கால செயல்பாடுகளுக்கு ஆபத்தான விடயமாகவும் மாறக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here