‘எட்கா’ உடன்படிக்கை – மோடியின் இலங்கை பயணதுக்கு முன் இறுதிப்படுத்தப்படுமா?

0
1
Article Top Ad

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் (ETCA) தொடர்பான பேச்சுகளை மீண்டும் தொடங்குவதற்கான கதவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் திறந்துள்ளது.

கடந்த மாதம் 15ஆம் திகதி முதல் 17ஆம் திகதிவரை இந்தியாவுக்கு அரசுமுறை பயணமாக சென்ற ஜனாதிபதி, இந்திய பிதரமர் மோடியுடன் ஈடுபட்ட கலந்துரையாடலில் எட்கா உடன்படிக்கை, இருநாடுகளுக்கு இடையிலான நிலத் தொடர்பு, திருகோணமலை எண்ணெய் குதங்கள், காங்கேசன்துறை துறைமுகம், இருநாடுகளுக்கு இடையிலான கப்பல் போக்குவரத்து, சுற்றுலா அபிவிருத்தி, முதலீட்டு ஊக்குவிப்புகள், இறக்குமதி, ஏற்றுமதி, தொழில்நுட்ப பரிமாற்றம் உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடியிருந்தார்.

இருவரும் இணைந்து வெளியிட்டிருந்த கூட்டறிக்கையில் இந்த விவகாரங்கள் குறிப்பிடப்பட்டிருந்ததுடன், எட்கா உடன்படிக்கை தொடர்பிலான பேச்சுகளை தொடர்ந்து கொண்டுசெல்லவும் திட்டமிட்டிருந்தனர்.

எட்கா தொடர்பில் குறித்த கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த விவகாரம் இலங்கையில் எதிர்க்கட்சிகளுக்கு தீனி போடுவதாக மாறியது. உடனடியாக கருத்துகளை ஆரம்பித்த எதிர்க்கட்சிகள், அரசாங்கம் எட்கா உடன்படிக்கையை கைச்சாத்திட இணங்கிவிட்டதாக ஊடகங்களில் செய்திகளை பகிர்ந்தன.

இந்தியப் பயணம் தொடர்பில் கொழும்பில் கருத்து வெளியிட்டிருந்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், எட்கா ஒப்பந்தத்தை கைச்சாத்திட எவ்வித இணக்கப்பாடுகளும் புதுடில்லியில் எட்டப்படவில்லை என்றும் பேச்சுகளை முன்னோக்கி கொண்டுசெல்லவே இணக்கப்பாடுகள் எட்டப்பட்டதாகவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், புதுடில்லியில் எட்டப்பட்ட இணக்கப்பாடு குறித்து கருத்து வெளியிட்டுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, ​​பேச்சுவார்த்தைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நோக்கத்துடன் மட்டுமே மீண்டும் தொடங்க ஒப்புக் கொள்ளப்பட்டதாக கூறியுள்ளார்.

கூட்டு அறிக்கை தெளிவாக உள்ளது. ஆங்கில மொழியில் அது தெளிவாக உள்ளது. பேச்சுவார்த்தைகளைத் தொடர விருப்பம் இருந்தது. அது ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முடிவடையும் பேச்சுகள் அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் பிரகாரம் எட்கா உடன்படிக்கை உட்பட ஏனைய திட்டங்கள் தொடர்பில் இருநாடுகளுக்கு இடையிலான பேச்சுகள் விரைவில் ஆரம்பமாகும் என இராஜதந்திர வட்டாரங்களில் அறிய முடிகிறது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணத்துக்கு முன்னதாக இந்தப் பேச்சுகளில் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றத்தை எட்ட இருநாடுகளும் கலந்துரையாடல்களை பல கோணங்களில் ஆரம்பித்துள்ளதாகவும் மோடியின் பயணத்தின் போது சில முக்கிய உடன்படிக்கைகளை கைச்சாத்திடும் நோக்கில் இந்த கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாகவும் அறிய முடிந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here