கனடா பிரதமர் பதவிக்கான போட்டியில் இருந்து கோவையை பூர்வீகமாக கொண்ட அனிதா இந்திரா விலகி உள்ளார். தற்போது எம்.பி.,யாக இருக்கும் அவர், மீண்டும் தேர்தலில் போட்டியிட போவதில்லை என்றும் தெரிவித்தார்.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். லிபரல் கட்சியின் தலைவர் பதவியில் இருந்தும் விலகுகிறார். லிபரல் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படுபவர், அக்கட்சி சார்பில், கனடா பிரதமராக தேர்வு செய்யப்படுவார் என்பதால், கட்சித் தலைவராவதற்கு கடும் போட்டி நடக்கிறது.
கனடா பிரதமர் தேர்தலில், கோவை மாவட்டம் வெள்ளலூரை பூர்வீகமாகக் கொண்ட அனிதா இந்திரா போட்டியிடுவதாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தது.
இந்திய ஊடகங்களின் கவனம் அவர் பக்கம் திரும்பியது. அவரது வாழ்க்கை வரலாறு குறித்து, சிறப்பு கட்டுரைகள் நாளிதழ்களில் அதிகம் வெளியாகின. தற்போது பிரதமர் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என அனிதா இந்திரா அறிவித்தார்.
இது குறித்து அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தனக்கு முக்கிய அமைச்சரவை இலாகாக்களை வழங்கிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு நன்றி. தேர்தலில் நான் போட்டிட மாட்டேன். என்னை எம்.பி.,யாக்கிய ஓக்வில்லி தொகுதி மக்களுக்கு உண்மையாகவே நன்றியுடன் இருக்கிறேன்.
கடந்த இருபது ஆண்டுகளாக நானும், எனது கணவரும் எங்கள் குழந்தைகளை வளர்த்த அற்புதமான சமூகம். இந்த சமூக மக்களுக்கு நன்றி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.