பொருளாதார நெருக்கடிக்கு பின்னர் முதல் முறையாக இலங்கையில் மின் கட்டணம் குறைப்பு

0
48
Article Top Ad

கடுமையான பொருளாதார நெருக்கடிகளை கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக சந்தித்திருந்த இலங்கை, பொருட்களின் விலை உயர்வு, போக்குவரத்து செலவுகள் அதிகரிப்பு, மின் கட்டண உயர்வு, டொலர் நெருக்கடி, அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு என பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்திருந்தது.

பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் மீண்டெழ முடியாத துயரங்களையும் சந்தித்தனர்.

இந்த நிலையில் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

இதன் ஒரு கட்டமாக இன்று நள்ளிரவு முதல் மின்சாரக் கட்டணங்களை 20 வீதத்தால் குறைக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கொவிட் தொற்றும், அரசியல் ஸ்திரமற்ற தன்மை, பொருளாதார நெருக்கடிகள் காரணமாக கடந்த 2019ஆம் ஆண்டு ஜனாதிபதியாக பொறுப்பேற்ற கோட்டாபய ராஜபக்ச, 2022இல் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியின் கீழ் மின்சாரக் கட்டணங்கள் பல சந்தர்ப்பங்களில் அதிகரிக்கப்பட்டிருந்தன.

இந்தப் பின்புலத்தில் மின் கட்டணம் இன்றுமுதல் 20 வீதத்தால் குறைக்கப்படும் என அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பால் மக்கள் ஓரளவு மகிழ்ச்சியை அடைந்துள்ளனர்.

மின்சார கட்டண திருத்தம் தொடர்பாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கூறியுள்ளதாவது,

வீட்டுப் பிரிவின் கீழ், 0-30க்கு இடைப்பட்ட அலகுக்கான கட்டணம் 6 ரூபாயில் இருந்து 4 ரூபாவாகவும், 31-60க்கு இடையில் 9 ரூபாவிலிருந்து 6 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த மின்சார கட்டண திருத்தத்தின்படி, வீட்டுப் பிரிவிற்கான மின்சாரக் கட்டணம் 20 சதவீதத்தால் குறைவடையும் நிலையில் மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கான மின்சாரக் கட்டணம் 21 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது.

உணவகங்களுக்கு 31 சதவீதமும் மற்றும் தொழில்துறைக்கு 30 சதவீதமும் மின்சாரக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ள நிலையில், பொது நோக்கத்திற்கான மின்சாரக் கட்டணங்கள் 12% குறைக்கப்பட்டுள்ளன.

அரசு நிறுவனங்களுக்கான கட்டணங்களை 11 சதவீதத்தாலும் மற்றும் தெரு விளக்குகளுக்கான கட்டணங்களை 11 சதவீதத்தால் குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கை மக்களுக்கும் சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறையினருக்கும் இந்த மின் கட்டண குறைப்பு பலன் அளிக்கும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.