அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட ட்ரம்ப் 20ம் திகதி பதவி ஏற்கின்றார்.
தான் ஜனாதிபதியாக பதவியேற்றவுடன் பல விடயங்களை நடைமுறைப்படுத்தப் போவதாக அவர் அறிவித்திருந்தார்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான மோதல் மற்றும் ரஷ்ய யுக்ரேன் யுத்தம் ஆகியவற்றை முடிவிற்கு கொண்டு வருதல் என்பன முக்கியமானவை.
இவையிரண்டும் அமெரிக்காவிற்கு தொலைதூரத்தில் இடம்பெற்று வரும் யுத்தங்கள்.
அமெரிக்காவுடன் நேரடியான தொடர்புகளை கொண்டிராத போதிலும் இந்த இரண்டு மோதல்களிலும் அமெரிக்கா தலையீட்டை கொண்டிருப்பது அனைவரும் அறிந்த விடயம்.
இதனை தாண்டி அமெரிக்காவுடன் தமது எல்லைகளை பகிர்ந்து கொள்ளும் கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் மீது ட்ரம் எடுக்க திட்டமிட்டுள்ள நடவடிக்கைகள் தான் மிகவும் ஆபத்தான நிலையை தோற்றுவித்துள்ளன.
கனடாவில் இருந்தும் மெக்சிக்கோவில் இருந்தும் அமெரிக்காவிற்குள் போதை மருந்துகள் கடத்தப்படுவதை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் சட்டவிரோத ஆட்கட்தல் நடவடிக்கைகள் தடுக்கப்பட வேண்டும் என்றும் அது வரை கனடாவில் இருந்தும் மெக்சிக்கோவில் இருந்தும் அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 25 சதவீத வரியினை அறவிடப்போவதாக எச்சரித்துள்ளார்.
அவர் பதவியேற்றவுடன் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் ஒன்றாக இந்த வரிவிதிப்பு அமையும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறாக கனேடிய இறக்குமதிகளுக்கு 25 சதவீத வரி அவறிவடப்படுமாக இருந்தால் அவ்வாறன பொருட்களை அமெரிக்க நிறுவனங்கள் கொள்வனவு செய்வதை தவிர்ப்பதற்கு தீர்மானிக்கும்.
இதனால் கனேடிய பொருட்கள் தமது சந்தை வாய்பினை இழக்கும் அபாயம் ஏற்படும்.
கனடாவை பொறுத்தவரை அதன் ஏற்றுமதியில் சுமார் 70 சதவீதமானை அமெரிக்க சந்தையை இலக்காக கொண்டவை.
கனேடிய பொருளாதாரத்தின் மூன்றில் இரண்டு பகுதி அமெரிக்காவுடனான வர்த்தகத் தொடர்களில் தங்கியுள்ளன.
இந்த வரிவிதிப்பு என்பது கனடாவின் பொருளாதாரத்தில் மிகக் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே பொருளாதார நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
அமெரிக்காவுடான வர்த்தக நடவடிக்கைகளுடன் தொடர்புடைய சுமார் இரண்டு மில்லியன் தொழிலாளர்கள் கனடாவில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வரிவிதிப்பு இடம்பெறுமாக இருந்தால் ஒன்ராறியோவில் மட்டும் சுமார் ஐந்து இலட்சம் பேரின் தொழில் வாய்ப்பு கேள்விக்குறியாக மாறும் அபாயம் இருப்பதாக மாகாண முதல்வர் டக் போர்ட் தெரிவித்துள்ளார்.
வாகன உதிரிப்பாகங்கள், பிளாஸ்டிக் பொருட்கள், இரசாயன பதார்த்தங்கள், கட்டுமானத்திற்கு தேவையான மரங்கள் போன்றவை கனடாவில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் உற்பத்தித்துறை மற்றும் அவற்றை கொண்டு செல்லும் பார ஊர்த்தி போக்குவரத்துறை என்பவை நேரடியாக பாதிக்கடும் அதேநேரம் இவற்றுடன் நேரடி தொடர்பை பொண்டிராத ஏனைய துறைகளிலும் இந்த வரிவிதிப்பு தாக்கம் செலுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் ஏற்றுமதி வர்த்கம் குறைவடையும் போது அதன் மூலமான அந்நியச் செலவாணி வீழ்ச்சியடையும் இது கனேடிய டொலரின் பெறுமதியை மதிப்பிறக்கும் செய்யும்.
கனேடிய டொலர் பெறுமதி வீழ்ச்சியடையும் போது பொருட்களின் விலைகள் கணிசமாக அதிகரிக்கும் இது மற்றுமொரு பணவீக்கத்தையும் பொருளாதார மந்த நிலையினையும் ஏற்படுத்தும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதன் காரணமாக கடுமையான பாதிப்புகளை கனடா எதிர்கொள்ளும் நிலையில் கனேடிய அரசாங்கம் ஆட்டம் கண்டுள்ளது.
கனேடிய நிதி அமைச்சரும் துணைப் பிரதமருமான கிறிஸ்டியா பீரிலாண்ட அம்மையாரின் பதவி விலகலும் அதனை தொடர்ந்து பிரதமரின் பதவி விலகல் அறிவித்தலும் கனேடிய மக்களுக்கு ஏமாற்றமளித்துள்ளன.
நாடு மிக நெருக்கடியான நிலையில் உள்ள போது தலைமை மாற்றத்தை கோரும் லிபரல்களின் முடிவும் இந்த நெருக்கடியை பயன்படுத்தி அதிகாரத்தில் அமரத்துடிக்கும் லிபர்களின் வருங்கால தலைமைக்கு போட்டியிடும் தரப்பினரும் மக்களையும் நாட்டின் நலனையும் சிந்திக்காமல் சுயலா நோக்கங்களுக்காக செயல்படுவதான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
மறுபுறம் அமெரிக்கா வரிவிதிக்குமாகா இருந்தால் அதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மாகாண முதல்வர்கள் பலரும் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.
புதன் கிழமை பிரதமருடன் நடைபெற்ற சந்திப்பில் அமெரிக்காவிற்கு எவ்வாறு பதிலடி கொடுப்பது என்பது குறித்து ஆராயப்பட்டுள்ளது.
அமெரிக்காவிற்கான எரிபொருள விநியோகம் மற்றும் மின் விநியோகத்தை கட்டுப்படுத்தல் மற்றும் அமெரிக்காவில் இருந்து கனடாவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரிவிதித்தல் போன்ற யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இருந்த போதிலும் அல்பேர்டாவில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் மின்சாரத்தினால் 20 பில்லியன் டொலர் வருமானம் அல்பேர்டா மகாணத்திற்கு கிடைத்து வருவதாகவும் அதனை இழப்பதற்கு தாம் தாயரா இல்லை என்றும் மாகாண முதல்வர் தெரிவித்துள்ளார்.
இதனால் புதன்கிழமை நடைபெற்ற மாகாண முதல்வர்களின் கூட்டத்தில் தெளிவான இணக்கப்பாடு ஒன்று எட்டப்படவில்லை.
20ம் திகதி அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம் பதவியேற்ற பின்னர் இந்த வரிவிதிப்பு உறுதி செய்யப்படுமாக இருந்தால் அது கனடாவிற்கு கடுமையான பொருளாதார நெருக்கடியை ஏற்றடுத்தும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.
அவ்வாறான அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முன்பாக அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பலரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
எல்லைப் பாதுகாப்பை தீவிரப்படுத்தவும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோட குடியேற்றவாசிகளின் நடமாட்டங்களை குறைப்பதற்கும் கனடா காத்திரமான நடவடிக்கைககளை எடுப்பதன் மூலமாக இந்த நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும் என்று சபலர் வலியுறுத்தியுள்ளனர்.
ஆனால் உண்மையில் எல்லைப் பாதுகாப்பு மட்டும் தான் ட்ரம்பின் வரிவிதிப்பிற்கு காரணமா அல்லத அதற்கு பின்னால் வேறு உள் நோக்கங்கள் மறைந்துள்ளவா என்பதும் தீவரமாக ஆராயப்பட வேண்டியுள்ளது.
Written by Ramanan Santhirasegaramoorthy