இலங்கையில் வெளிநாட்டு போர்க்கப்பல்கள், இராணுவ விமானங்கள் மற்றும் ஆராய்ச்சிக் கப்பல்களுக்கு இராஜதந்திர அனுமதி வழங்குவதற்காக தற்போதுள்ள நிலையான செயற்பாட்டு நடைமுறையை (SOP) திருத்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் இந்த விடயத்தில் புதிய முறையை உருவாக்குவதே குழுவின் பணி என அமைச்சர் விஜித ஹேரத் கூறினார்.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம், இலங்கை தனது கடற்பரப்பில் இயங்கும் வெளிநாட்டு கடல்சார் அறிவியல் ஆராய்ச்சிக் கப்பல்களுக்கு ஒரு வருட கால தடை விதித்தது.
தடைக்காலம் நீக்கப்பட்டு, தற்போதுள்ள நடைமுறையின் கீழ் ஆய்வுக் கப்பல்களுக்கான இராஜதந்திர அனுமதி தற்போது வழங்கப்பட்டு வருகின்றன.
புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல்களின் கீழ் ஆய்வுக் கப்பல்கள் இலங்கைக்கு வருவதற்கு அனுமதிக்கும் வகையில், திருத்தப்பட்ட நடைமுறையை குழு விரைவில் இறுதி செய்யும் என்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.
சீன ஆய்வு கப்பல்கள் அடிக்கடி இலங்கைக்கு வருகை தந்தமையால் இந்தியா கடும் எதிர்ப்புகளை வெளியிட்டமையால் கடந்த அரசாங்கத்தின் காலத்தில் சர்வதேச ஆய்வு கப்பல்கள் இலங்கை வருவதற்கு தற்காலி தடைவிதிக்கப்பட்டது.
இதன் பின்னர் சீன கப்பல்களுக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. இந்த நிலையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சீன பயணத்தில் இந்த விவகாரம் பற்றி பேசப்பட்டுள்ளதாகவும் ஆய்வு கப்பல்களின் வருகைக்கு விரைவில் வழிகளை ஏற்படுத்துவதாகவும் அநுர தரப்பு உறுதியளித்துள்ளதாகவும் இராஜதந்திர தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன் பிரகாரமே மேற்படி குழுவை இலங்கை அரசாங்கம் அமைத்துள்ளதாகவும் விரைவில் சர்வதேச ஆய்வு கப்பல்களின் வருகைக்கு இலங்கை அனுமதியளிக்கும் என்றும் தெரியவருகிறது.