WHO இல் இருந்து விலகும் அமெரிக்காவின் முடிவு – மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் ; உலக சுகாதார அமைப்பு கோரிக்கை

0
17
Article Top Ad

உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறும் முடிவை அமெரிக்கா மறுபரிசீலனை செய்யும் என்று அந்த அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானான் கேரியாசஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்ப் நேற்று முன்தினம் பதவியேற்றார். அவர் பதவியேற்றதும், உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அறிவித்தார்.

இதுதொடர்பாக அமெரிக்க அரசு வெளியிட்ட அறிக்கையில், “சீனாவில் இருந்து உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியது. ஆனால் கொரோனா பெருந்தொற்றை தடுக்கும் பணியில் உலக சுகாதார அமைப்பு திறம்பட செயல்படவில்லை.

காலத்துக்கு ஏற்ப அந்த அமைப்பில் சீர்திருத்தங்கள் செய்யப்படவில்லை. அமெரிக்காவைவிட அதிக மக்கள் தொகை கொண்ட சீனா, உலக சுகாதார அமைப்புக்கு மிகக் குறைவாக நிதி ஒதுக்குகிறது. இவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அமெரிக்கா வெளியேறுகிறது” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதன்படி உலக சுகாதார அமைப்புக்கு அமெரிக்கா வழங்கும் நிதியுதவி நிறுத்தப்பட உள்ளது. ட்ரம்பின் முடிவு குறித்து பல்வேறு தரப்பினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானான் கேரியாசஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது,

உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டிருப்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. அமெரிக்கா உட்பட உலகம் முழுவதும் வாழும் மக்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் நாங்கள் முக்கிய பங்கு வகிக்கிறோம். நோய்க்கான மூலக்காரணம், அவற்றை தடுப்பது, புதிய வைரஸ் தொற்றுகளை முன்கூட்டியே கண்டறிவது உள்ளிட்ட மிக முக்கிய பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக கோடிக்கணக்கான உயிர்களை நாங்கள் காப்பாற்றி உள்ளோம். எங்கள் பணிக்கு அமெரிக்கா உறுதுணையாக இருந்து வருகிறது. வரும் காலத்திலும் அமெரிக்காவின் பங்களிப்பு தொடர வேண்டும். உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறும் முடிவை அமெரிக்க அரசு மறுபரிசீலனை செய்யும் என உறுதியாக நம்புகிறேன். இவ்வாறு டெட்ராஸ் அதானான் கேரியாசஸ் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here