இலங்கை வரலாற்றில் நாடாளுமன்றத்தில் முதன்முறையாக தைப்பொங்கல் விழா

0
13
Article Top Ad

கடந்த 14 ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்ட தைப்பொங்கல் தினத்தை கொண்டாடும் வகையில் இலங்கை நாடாளுமன்ற வளாகத்தில் தைப்பொங்கல் தின நிகழ்வு இன்று (24) வைபவரீதியாக சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இடம்பெற்றது.

வரலாற்றில் முதன் முறையாக இலங்கை நாடாளுமன்றத்தினால் கொண்டாடப்பட்ட தைப்பொங்கல் தினமாக இது கருதப்படுகிறது.

இந்நிகழ்வில் இந்துக் மதத் தலைவர்கள், குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் (கலாநிதி) ஹினிதும சுனில் செனெவி, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, பணியாட்தொகுதியின் பிரதானியும் பிரதி செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன, உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ஸ அபேரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரின் முன்மொழிவுக்கு அமைய, சபாநாயகரின் ஆலோசனையின் கீழ், புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் இந்து மத மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் இந்த வைபவம் இடம்பெற்றது.

உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தமிழ் கலாசாரம் பற்றிய புரிதலை ஊக்குவித்தல், தமிழ் சமூகத்தின் பாரம்பரியம் மற்றும் மரபுகளை மதித்தல், இலங்கையின் கலாச்சார பன்முகத்தன்மையை அங்கீகரிப்பதன் மூலம் அனைவரையும் உள்ளடக்கிய தேசிய அடையாளத்தை வளர்ப்பது உள்ளிட்ட நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

விவசாயிகள் தமது அறுவடைக்கு ஒத்துழைப்பு நல்கிய சூரியக்கடவுள், நிலம் மற்றும் கால்நடைகளுக்கு நன்றி கூறும் விதத்தில் தைப்பொங்கல் கொண்டாடப்படுகின்றது. இதற்கமைய தைப்பொங்கல் நிகழ்வு மதச்சடங்குகளுடன் ஆரம்பமாகியது. வண்ணமயமான கோலங்களால் அலங்கரிக்கப்பட்ட நாடாளுமன்ற வளாகத்தில் பொங்கல் நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வில் உரையாற்றிய சபாநாயகர் குறிப்பிடுகையில், மனிதர்கள் இயற்கையுடன் எவ்வளவு நெருக்கமாகன தொடர்புகளுடன் இருக்கின்றார்கள் என்பதை தைப்பொங்கல் எடுத்துக் காட்டுவதாகவும், இதன் மூலம் அனைத்து இனங்களுக்கிடையேயான ஒற்றுமை மற்றும் சகவாழ்வு நிரூபிக்கப்படுவதாகவும் கூறினார். புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் (கலாநிதி) ஹினிதும சுனில் செனெவி கருத்துரை வழங்கியதுடன், அனைத்து இனக்குழுக்களுக்கிடையேயான ஒற்றுமைக்கு மொழித் தடையை கடக்க வேண்டும் என்றும், புதிய கல்வி சீர்திருத்தங்கள் மூலம் இதனை அடைய எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், நிகழ்வில் உரையாற்றிய கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் , இனம் மத பாகுபாடு இல்லாமல் தேசிய ஒற்றுமையை மேம்படுத்துவதற்கான நாடாளுமன்றத்தின் முயற்சிகளைப் பாராட்டுவதாகக் கூறினார்.

தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வகையில் நடன நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டன. இந்த நிகழ்வில் நாடாளுமன்ற திணைக்களங்களின் தலைவர்கள், பணியாளர்கள், அமைச்சுக்களின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here