மன்னார் மற்றும் பூநகரியில் அமையவுள்ள அதானியின் 484 MW காற்றாலை மின் திட்டங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளிவரும் செய்திகள் தவறானவை என அதானி குழுமம் தெரிவித்துள்ளது.
விசேட ஊடக அறிக்கை ஒன்றை வௌியிட்டு அதானி குழும பேச்சாளர்,
திட்டம் இரத்து செய்யப்பட்டதாக வெளிவந்த செய்தியை அதானி குழுமம் மறுக்கிறது.
மன்னார் மற்றும் பூநகரியில் அமையவுள்ள அதானியின் 484 MW காற்றாலை மின் திட்டங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் தவறானவை.
இத் திட்டம் இரத்து செய்யப்படவில்லை என்பதை நாங்கள் திட்டவட்டமாகக் கூறுகிறோம்.
மே 2024இல் அங்கீகரிக்கப்பட்ட கட்டணத்தை மறு பரிசீலனை செய்ய ஜனவரி 2, 2025 அன்று இலங்கை அமைச்சரவை எடுத்த முடிவு, குறிப்பாக ஒரு புதிய அரசாங்கத்துடன், அவற்றின் தற்போதைய முன்னுரிமைகள் மற்றும் எரிசக்தி கொள்கைகளுடன் விதிமுறைகள் ஒத்துப்போவதை உறுதி செய்வதற்கான மறுஆய்வு செயல்முறையின் ஒரு பகுதியாகும்.
இலங்கையின் பசுமை எரிசக்தி துறையில் 1 பில்லியன் டொலர்களை முதலீடு செய்வதற்கும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் அதானி தொடர்ந்து உறுதிபூண்டுள்ளது என அதானி குழும பேச்சாளர் கூறியுள்ளார்.
மன்னார் பூநகரி காற்றாலை மின்திட்டத்தை முன்னெடுப்பதற்கு இந்தியாவின் அதானி குழுமத்திற்கு கடந்த வருடம் ஜுன் மாதம் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் வழங்கிய அனுமதியை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அமைச்சரவை இரத்துசெய்துள்ளது.
ஜனாதிபதி தலைமையில் கடந்தவாரம் கூடிய அமைச்சரவை இந்த திட்டத்திற்கான அனுமதியை இரத்துசெய்வதற்கு தீர்மானித்துள்ளது.
இந்த திட்டத்திற்கு இலங்கையில் எதிர்ப்புகள் உருவானதுடன் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கம் மற்றும் சுற்றுசூழல்; அறக்கட்டளை நிறுவனம் உட்பட பல அமைப்புகள் இந்த திட்டம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட சுற்றுசூழல் மதிப்பீட்டில் குறைபாடுகள் உள்ளன என்பதாலும் மன்னார் வலசப்பறவைகளிற்கான பகுதி என்பதாலும் இந்த திட்டத்தை கடுமையாக எதிர்த்தன.
மன்னார் ஆயர் உட்பட மன்னார் மக்களும் தங்கள் வாழ்வாதாரம் மற்றும் தொழில்துறைக்கு பாதிப்பு ஏற்படும் என தெரிவித்து இந்த திட்டத்தை கடுமையாக எதிர்த்தனர்.
ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின்போது இந்த திட்டத்தை இரத்துச்செய்வேன் என உறுதியளித்திருந்த அனுரகுமாரதிசநாயக்க இலங்கையில் காற்றாலை மின்திட்டத்தை முன்னெடுப்பதற்காக சர்வதேச கேள்விப்பத்திரத்தை கோருவேன் என தெரிவித்திருந்தார்.
இந்த பின்புலத்திலேயே அதானி குழுமம் அறிக்கையொன்றை வெளியிட்டு இத்திட்டம் ரத்து செய்யப்படவில்லை என கூறியுள்ளது.