பார்டர்-கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் உலகின் தலைசிறந்த சமகால வேகப்பந்து வீச்சாளரான பும்ராவின் செல்லப்பிள்ளையாக, அவரிடம் விக்கெட்டை பறிகொடுத்து கிரிக்கெட் வாழ்வே முடிந்து விட்டது என்று நினைத்த உஸ்மான் கவாஜா, இலங்கையில் இரட்டைச் சதம் அடித்த முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற வரலாறு படைத்தார்.
உஸ்மான் கவாஜா கால்லே டெஸ்ட் போட்டியின் 2ம் நாளான நேற்று தன் இரட்டைச் சதத்தை எடுத்து முடித்து 232 ஓட்டங்களில் பிரபத் ஜெயசூரியவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இதில் 16 பவுண்டரிகளும் 1 சிக்சரும் அடங்கும். உஸ்மான் கவாஜா தன் 200வது ஓட்டத்தை 290வது பந்தில் எடுத்த போது இலங்கையில் முதல் முதலாக இரட்டைச் சதம் விளாசிய ஆஸ்திரேலிய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தினார்.
இலங்கை மண்ணில் அதிக ஓட்டங்களை விளாசியப் பட்டியலில் இன்றும் முதலிடம் வகிப்பது மே.இ.தீவுகளின் முன்னாள் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல்தான்.
இவர் 2010ஆம் ஆண்டு இதே கால்லே மைதானத்தில் 333 ஓட்டங்கலாய் விளாசி வரலாற்றுச் சாதனைப் படைத்தது இன்று வரை முறியடிக்கப்படவில்லை. கிறிஸ் கெய்ல் 437 பந்துகளில் 333 ஓட்டங்களை விளாசினார். இலங்கை மண்ணில் அதிக ஸ்கோர் விளாசிய அயல்நாட்டு வீரர்கள் இதோ:
கிறிஸ் கெய்ல் கால்லேயில் 333 ஓட்டங்கள் – 2010ம் ஆண்டு
ஸ்டீபன் பிளெமிங் கொழும்புவில் 274 நாட் அவுட், 2003
ஜோ ரூட் 228 ஓட்டங்கள் கால்லே.- 2021
பிரையன் லாரா 221 – கொழும்பு 2001
சவுத் ஷகீல் (பாகிஸ்தான்), 208 நாட் அவுட் கால்லே – 2023
சச்சின் டெண்டுல்கர், கொழும்பு, 203 – 2010
அப்துல்லா ஷபீக் 201, கொழும்பு – 2023
தற்போது உஸ்மான் கவாஜா, 232, கால்லே – 2025
கவாஜாவுக்கு முன்னர் ஆஸ்திரேலிய வீரர் ஜஸ்டின் லாங்கர் 166 ஓட்டங்களை இலங்கை மண்ணில் குவித்ததுதான் ஆஸ்திரேலிய வீரரின் அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோராகும். இவர் கொழும்புவில் 2004-ம் ஆண்டு இந்த ஓட்டங்களை எடுத்தது குறிப்பிடத்தக்கது.