2025 பெப்ரவரி மாதம் 07ஆம் திகதி முதல் உலகெங்கிலும் உள்ள அனைத்து USAID ஊழியர்களையும்
விடுமுறையில் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
விசேட பணிகளில் ஈடுபடும் ஒரு சில ஊழியர்களை மட்டுமே தொடர்ந்து சேவையில் வைத்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதுடன், அந்த நபர்கள் யார் என நாளை (06) அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நடவடிக்கையை USAID நிர்வாகம் எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
USAID அமைப்பை ட்ரம்ப் மூட நினைப்பது ஏன்?
அமெரிக்க அரசின் சர்வதேச வளர்ச்சி முகமையின் (USAID) எதிர்காலம் கேள்விகுறியாகியுள்ளது. இதன் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டு, இந்த அமைப்பை அமெரிக்க அரசின் வெளியுறவு அமைச்சுடன் இணைக்க ட்ரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அமெரிக்க அரசின் சர்வதேச வளர்ச்சி முகமை (USAID) ஆனது, இனி வெளியுறவு அமைச்சகத்தின் ஒரு பகுதியாக செயல்படும். ஆனால், பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் நியூஸ் ரிப்போர்ட்டின் அடிப்படையில், இச்செயல்பாடுகளுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் மனிதவளத்தை குறைக்கும் திட்டங்களும் அமெரிக்க அரசிடம் உள்ளன.
இது குறித்து திங்கட்கிழமை பேசிய அமெரிக்க வெளியுறவு அமைச்சக செயலாளர் மார்கோ ரூபியோ, USAID அமைப்பின் தலைமை, தனது உத்தரவுகளை ஏற்க மறுப்பதாக குற்றம் சாட்டியதோடு, தானே தற்போது அந்த அமைப்பின் “செயல் தலைமையாக” இருப்பதாகவும் கூறினார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது முதன்மை ஆலோசகர்களில் ஒருவரான தொழிலதிபர் ஈலோன் மஸ்க் ஆகியோர், இந்த முகமை மீதான கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். ஆனால் இந்த முகமையை மூடுவது, உலகெங்கிலும் செயல்பட்டு வரும் மனிதாபிமான திட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் என கணிக்கப்படுகிறது.
USAID என்ன செய்கிறது?
உலகெங்கிலும் அமெரிக்க அரசின் சார்பில் மனிதாபிமான உதவிகளை செய்வதற்காக 1960களின் முற்பகுதியில் இந்த முகமை நிறுவப்பட்டது.
இந்த முகமையின் கீழ் 10,000 ஊழியர்கள் பணியாற்றும் நிலையில், இதில் மூன்றில் இரண்டு பகுதியினர் வெளிநாடுகளில் பணியாற்றுகின்றனர். 60 நாடுகளில் பணிக்கான தளங்களை கொண்டுள்ள இந்த முகமை, இதற்கும் மேலாக சுமார் ஒரு டஜன் நாடுகளில் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.
இருப்பினும், பெரும்பாலான களப்பணிகளை மற்ற அமைப்புகளை பயன்படுத்தி ஒப்பந்த அடிப்படையிலோ, நிதி உதவி அளித்தோ USAID செய்து வருகிறது. இந்த அமைப்பு மேற்கொள்ளும் பணிகள் விரிவானவை. உதாரணத்துக்கு, பட்டினியால் பாதிக்கப்பட்ட நாடுகளில் உணவு அளிப்பதோடு, உலக அளவில் பஞ்சத்தை அளவிடும் அமைப்பையும் இயக்கி வருகிறது.
இந்த அமைப்பானது, தரவுகளை ஆராய்ந்து எந்த நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படக் கூடும் என்பதை முன்கூட்டியே கணிக்கும் பணியைச் செய்கிறது. USAIDஇன் நிதியில் கணிசமான அளவு, சுகாதாரம் சார்ந்த பணிகளுக்காக செலவிடப்படுகிறது. போலியோ பாதிப்பு இன்னமும் தீர்க்கப்படாத நாடுகளில் தடுப்பூசி வழங்குவது மற்றும் பெருந்தொற்றுக்களை ஏற்படுத்தும் வைரஸ் பரவலை தடுப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
பிபிசியின் சர்வதேசத் தொண்டு அமைப்பான பிபிசி மீடியா ஆக்ஷன், USAID வழியாகவே நிதியைப் பெறுகிறது. 2024ஆம் ஆண்டு அறிக்கையின் படி, USAID அமைப்பானது 3.23 மில்லியன் டொலர்களை நிதியாக வழங்கியதன் மூலம், அந்த நிதியாண்டின் 2ஆவது மிகப்பெரிய நன்கொடையாளராக உள்ளது.
அமெரிக்க அரசுக்கு எவ்வளவு செலவாகிறது?
அமெரிக்க அரசு வழங்கிய தரவுகளின் அடிப்படையில், 2023ஆம் ஆண்டு சர்வதேச நாடுகளுக்கான உதவியாக 68 பில்லியன் டொலர்களை அந்நாடு செலவிட்டுள்ளது. இந்த செலவில், பல்வேறு முகமைகள் மற்றும் துறைகளுக்கான செலவீனங்கள் அடங்கும் என்றாலும், USAIDஇன் நிதி ஒதுக்கீடானது, இந்த தொகையில் பாதிக்கும் மேலாக உள்ளது. அதாவது, சுமார் 40 பில்லியன் அமெரிக்க டொலர்கள்.
இந்த பணத்தில் பெரும்பங்கு ஆசியா, ஆஃபிரிக்க நாடுகளில் செலவிடப்படுகிறது. ஐரோப்பாவைப் பொருத்தவரையிலும் உக்ரேனில் போர் பாதித்த பகுதிகளில் மனிதாபிமான செயல்பாடுகளுக்காக செலவிடப்படுகிறது. சர்வதேச வளர்ச்சிப் பணிகளுக்காக செலவிடுவதில் உலகின் மிகப்பெரிய நாடாக அமெரிக்கா உள்ளது.
அந்த வகையில், மனிதாபிமான உதவிகளுக்காக செலவிடுவதில் பிரிட்டன் உலகின் 4ஆவது பெரிய நாடாக உள்ளது. 2023ஆம் ஆண்டில், 15.3 பில்லியன் பவுண்களை பிரிட்டன் செலவிட்டுள்ளது. இது, அமெரிக்கா செலவிட்ட தொகையில் 4இல் ஒரு பகுதியே ஆகும்.
USAIDஐ மீளாய்வு செய்ய வேண்டும் என ட்ரம்ப் மற்றும் மஸ்க் விரும்புவது ஏன்?
சர்வதேச நாடுகளுக்கான உதவியை நீண்ட நாட்களாகவே விமர்சிப்பவராக ட்ரம்ப் இருக்கிறார். இது, அமெரிக்க வரி செலுத்துவோரின் நலனை பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை என்பது அவரது குற்றச்சாட்டாக உள்ளது. முந்தைய பேச்சுக்களின் போதும், USAID மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ள அவர், இந்த நிறுவனத்தின் மூத்த நிர்வாகிகளை “இனவெறி கொண்ட மனப்பிறழ்வாளர்கள்” என்றும் விமர்சித்துள்ளார்.
இது போன்ற வெளிநாடுகளுக்கு உதவும் நிறுவனங்களை நீக்குவது வெகுஜன ஆதரவைப் பெற உதவலாம். வெளிநாடுகளுக்கான உதவித் தொகையை குறைப்பதை அமெரிக்க வாக்காளர்கள் விரும்புகிறார்கள் என்பதை, நீண்டகாலமாக கருத்துக் கணிப்புகளும் வெளிப்படுத்தி வருகின்றன.
டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாகப் பதவியேற்றவுடன் மேற்கொண்ட முதல் நடவடிக்கைகளில், அனைத்து சர்வதேச செலவீனங்களையும் 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதற்கான உத்தரவும் இருந்தது. இவை மீளாய்வுக்கு உட்படுத்தப்படலாம் எனவும் கூறப்பட்டிருந்தது.
அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்ட ஒரு குறிப்பாணையின் அடிப்படையில், களத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த பெரும்பான்மை பணிகள் நிறுத்தப்பட்டன. மனிதாபிமான செயல்பாடுகளுக்கான விதி விலக்குகள், பின்னர் அறிவிக்கப்பட்டன. எனினும், அமெரிக்க அரசின் நடவடிக்கை சர்வதேச வளர்ச்சிப் பணிகளில் தாக்கத்தை ஏற்படுத்தியதோடு, சேவைகளில் பரவலான சிக்கலை ஏற்படுத்தியது.
உலகின் ஏழ்மை நிலையில் உள்ள நாடுகளில் மருத்துவ சேவை, சுத்தமான குடிநீர் வசதி ஏற்படுத்தும் பணிகளும் இரவோடு இரவாக நிறுத்தப்பட்டன. மனிதாபிமான செயல்பாடுகளில் ஈடுபட்ட மூத்த அதிகாரி ஒருவர் பிபிசியிடம் பேசும் போது, இதனை “மனிதாபிமான சேவைகளில் ஏற்பட்டுள்ள பூகம்பம் போன்றது” என விமர்சிக்கிறார்.
USAID தலைமையகத்தை அணுகிய ஈலோன் மஸ்க்கின் அதிகாரிகளுக்கு, பாதுகாக்கப்பட்ட நிதி விவரங்கள் மறுக்கப்பட்டன. மத்திய அரசு செலவினங்களை குறைப்பது தொடர்பான பணியில் ஈலோன் மஸ்க்குக்கு உதவுவதற்காக, ட்ரம்ப் நிர்வாகத்தால் நியமிக்கப்பட்டவர்கள் இவர்கள் என்பதால் வெள்ளை மாளிகை மற்றும் USAID இடையே பிரச்சனை ஏற்படும் சூழல் நிலவியது. இதன் பின்னதாக இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன.
தான் நிர்வகித்து வரும் எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் நடந்த உரையாடல் ஒன்றில், திங்கட்கிழமை ஈலோன் மஸ்க் பேசும் போது, “USAID விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி ட்ரம்பிடம் விரிவாக பேசினேன். இதனை இழுத்து மூட வேண்டும் என்பதை அவர் ஒப்புக் கொண்டார்” என்றார்.
USAIDஇன் இணையதளம், செயல்பாட்டை நிறுத்தியது. மற்றும் ஊழியர்கள் வீட்டிலேயே இருக்குமாறு திங்கட்கிழமை அறிவுறுத்தப்பட்டனர்.
திங்கட்கிழமை பேசிய அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ, USAID அமைப்பின் தலைமை, உத்தரவுகளுக்கு கீழ்ப்படிய மறுப்பதாக குற்றம்சாட்டிதோடு, தானே தற்போது அந்த அமைப்பின் செயல் தலைமையாக இருப்பதாகவும் கூறினார். அந்த அமைப்பு மேற்கொண்டு வரும் பெரும்பான்மைப் பணிகள் தொடரும் என்றாலும், செலவீனங்கள் தேசிய நோக்கத்துடன் ஒன்றிணைவதாக இருக்க வேண்டும் என கூறினார்.
USAID அமைப்பை ட்ரம்ப்பால் மூட முடியுமா?
USAID அமைப்பின் மீது வெள்ளை மாளிகைக்கு குறிப்பிடத்தக்க அதிகாரம் இருப்பது வெளிப்படையாகத் தெரிந்தாலும், அதிகாரம் வரம்புகளுக்கு உட்பட்டதாகவே உள்ளது.
1961ஆம் ஆண்டு அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி USAID அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த சட்டம், ஓர் அரசு முகமையானது உருவாக்கப்பட்டு, வெளிநாட்டு செலவுகளை நிர்வகிப்பதற்கு ஆணை பிறப்பித்தது. 1998ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டம் USAIDஐ சுய உரிமைகள் பெற்ற நிர்வாக முகமையாக தரம் உயர்த்தியது.
சுருக்கமாக சொல்வதென்றால், ட்ரம்ப் தன்னிச்சையாக நிர்வாக உத்தரவின் மூலம் USAID அமைப்பை நீக்கிவிட முடியாது. இந்த அமைப்பை நீக்கும் எந்த முடிவும் நீதிமன்றத்திலும், அமெரிக்க காங்கிரஸிலும் கடுமையான சவால்களை சந்திக்கும்.
USAID அமைப்பை முழுமையாக ஒழிக்கும் நடவடிக்கை அமெரிக்க நாடாளுமன்றத்தின் முடிவுக்குட்பட்டது எனில், ட்ரம்பின் குடியரசுக் கட்சி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குறைந்த வித்தியாசத்திலேயே பெரும்பான்மையை தாண்டி நிற்கிறது.
ட்ரம்ப் நிர்வாகம் முன்வைக்கும் கருதுகோள்களில் ஒன்றான USAID அமைப்பை வெளியுறவு அமைச்சகத்தின் கிளையாக மாற்றும் முடிவும் இருக்கிறது. தன்னுரிமை பெற்ற அமைப்பாக அது இருப்பதற்கு நேர் எதிரான முடிவு இதுவாகும். இது போன்ற முடிவு முன்னெப்போதும் கேட்காதது அல்ல. 2020ம் ஆண்டில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சர்வதேச வளர்ச்சிக்கான துறையை வெளியுறவு அலுவலகத்துடன் இணைத்தார்.
அப்போது, போரிஸ் அரசின் அமைச்சர்கள் இந்த முடிவால், அரசின் வெளியுறவு கொள்கை இலக்குகளுடன் சர்வதேச செலவீனங்கள் ஒத்துப்போகும் என கூறி ஆதரவு தெரிவித்தனர். ஆனால், சர்வதேச உதவிகளில் இது நிபுணத்துவத்தைக் குறைக்கும் எனவும், வெளிநாடுகளில் பிரிட்டனின் செல்வாக்கை சரிக்கும் எனவும் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர்.
USAIDஐ மூடுவதால் ஏற்படக்கூடிய விளைவுகள் என்ன?
USAID அமைப்புக்கு வழங்கப்படும் நிதியில் பெரும்பான்மை அமெரிக்காவால் வழங்கப்படும் நிலையில், நிதி எவ்வாறு கையாளப்பட வேண்டும் என்ற கொள்கையில் மேற்கொள்ளப்படும் மாற்றம் உலகெங்கிலும் உணரப்படும்.
USAID அமைப்பின் செயல்பாடுகள் உண்மையிலேயே உலகளாவியவை. உக்ரேன் போரில் காயமடையும் வீரர்களுக்கு செயற்கை உடலுறுப்புகள் வழங்குவது முதல் ஆபிரிக்காவில் எபோலா பரவலை கட்டுப்படுத்துவது வரை இந்த அமைப்பின் செயல்பாடுகள் பரந்துபட்டவையாக உள்ளன.
சர்வதேச செலவீனங்கள் 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதும், வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ பேசுகையில், ஒவ்வொரு டொலர் செலவும் அது அமெரிக்காவின் பாதுகாப்புக்காகவும் வலிமைக்காகவும், செழிப்புக்காவும் செலவிடப்படுகிறது என்பதை நிறுவி நியாயப்படுத்த வேண்டும் என குறிப்பிட்டார்.
ஜனநாயக கட்சியின் அரசியல்வாதிகள் இந்த முடிவை சட்டவிரோதமானது மற்றும் தேச பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கக் கூடியது என விமர்சிக்கின்றனர்.
சிரியாவில் ஆயிரக்கணக்கான ஐஎஸ் அமைப்பினர் அடைக்கப்பட்டுள்ள சிறையின் காவலர்களுக்கான ஊதியமும் அமெரிக்காவின் நிதியால் வழங்கப்படும் நிலையில், இவர்கள் பணியிலிருந்து வெளியேறும் நிலை உருவாகும் என்ற செய்தியை ஜனநாயக கட்சியினர் சுட்டிக்காட்டுகின்றனர்.
“அமெரிக்காவே முதன்மை” என்ற அணுகுமுறைக்கு ஏற்ப வெளிநாடுகளுக்கான செலவீனங்களும் இருக்க வேண்டும் என்பதை ட்ரம்ப் தெளிவுபடுத்தியுள்ளார். இதனால் சர்வதேச வளர்ச்சிக்கான திட்டங்கள் மேலும் அதிர்ச்சியலைகளுக்கு தயாராகி வருகிறது.
அரசின் பட்ஜெட்டிலிருந்து வெளிநாடுகளுக்கான நிதிச்செலவை குறைக்கும் பொறுப்பு ஈலோன் மஸ்க்கிற்கு கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், வரும் ஆண்டுகளில் வெளிநாடுகளுக்காக எவ்வளவு தொகை செலவிடப்படும் என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.
-பிபிசி தமிழ்