புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படுமா? அரசாங்கம் அளித்துள்ள பதில்

0
5
Article Top Ad

தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரம் புதிய அரசியலமைப்பொன்று நிச்சயமாக கொண்டுவரப்படும். ஆனால், அவசரமாக இந்தச் செயல்பாடு இடம்பெறாது என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகச் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது,

”நாட்டின் தற்போதைய நிலவரத்துக்கு இணங்க பொருளாதாரத்தைப் பலப்படுத்தி நாட்டை ஸ்தீரப்படுத்துவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும்.

அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டரை மாதங்களே ஆகின்றன. நாடு எதிர்கொள்ளும் பொருளாதார சவாலை வெற்றிக்கொள்வதே தற்போதைய பிரதான தேவையாக உள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தை முதலில் சீரான நிலைமைக்கு கொண்டுவர வேண்டும். அதற்கு இன்னும் சில காலங்கள் தேவைப்படும்.

சர்வதேச ரீதியாகவும் அரசாங்கத்துக்கு பல சவால்கள் காணப்படுகின்றன. எனினும் நேரத்தை இழுத்தடிக்காமல் உரிய காலத்தில் புதிய அரசியலமைப்பை கொண்டுவர நடவடிக்கை எடுப்போம். இப்போதே அந்தப் பணியையும் ஆரம்பித்து ஏனைய பணிகளை குழப்பிக் கொள்ளத் தேவையில்லை.

எமக்கு வழங்கப்பட்டுள்ள மக்கள் ஆணையின் பிரகாரம் நிச்சயமாக அரசியலமைப்பில் மாற்றமொன்று இடம்பெறும். ஆனால், அவசர அவசரமாக அரசியலமைப்பொன்றை உருவாக்க போவதில்லை.” என்றும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here