இலங்கை அரசாங்கம் ‘GovPay’ தளம் உட்பட மூன்று புதிய டிஜிட்டல் திட்டங்களை அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
வரிப் பணம் உட்பட பல்வேறு அரச கொடுப்பனவுகளை ‘GovPay’ தளத்தின் ஊடாக மக்கள் நேரடியாக செலுத்த முடியும். 16 திணைக்களங்களையும் 50 சேவைகளையும் உள்ளடக்கிய வகையில் ஆரம்பகட்டமாக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் 30இற்கும் அதிகமான அரச நிறுவனங்களை இத்திட்டத்தின் கீழ் கொண்டுவருதும் இவ்வருட இறுதிகள் பெரும்பாலான அரச நிறுவனங்களை இத்திட்டத்தின் கீழ் கொண்டுவருதும் அரசாங்கத்தின் நோக்கமாக உள்ளது.
அரசுக்கான வரிப்பணம் உட்பட அனைத்து கொடுப்பனவு முறைகளையும் டிஜிட்டல் மயமாக்கும் நோக்கில் ‘GovPay’ முறை அறிமுக்கப்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிமுறை மீறல் தண்டப்பணத்தை கூட இத்திட்டத்தின் ஊடாக செலுத்த முடியும் என அரசாங்கம் கூறியுள்ளது.
நாட்டை டிஜிட்டல் மயமாக்குவதை நோக்கமாகக் கொண்ட ஆரம்பகட்டமான திட்டமே இது. எதிர்வரும் 5 வருடங்களில் மக்களை முழுமையாக டிஜிட்டல் மயப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதன் ஊடாக மக்களுக்கு ஏற்படும் வீண் அலைச்சல்கள், நேரம் மற்றும் கால விரயங்கள் தவிர்க்கப்படும் என அரசாங்கம் கூறியுள்ளது.
அத்துடன், இத்திட்டத்தின் ஊடாக ஊழல் – மோசடிகளும் ஒழிக்கப்படும் எனவும் அரசு எதிர்பார்க்கிறது.
ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை பெற்றுக்கொள்ள மக்கள் கொழும்புக்கு கடந்த காலத்தில் வரவேண்டியுள்ளது. இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டிஜிட்டல் முறையின் ஊடாக பிரதேச செயலகத்திலேயே தமது விண்ணப்பங்களை டிஜிட்டல் முறையின் ஊடாக வழங்கி, ஆவணங்கள் கொழும்பில் உறுதிப்படுத்தப்பட்டதும் குறித்த நிதியையும் அங்கேயே பெற்றுக்கொள்ளும் முறைமையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோன்று வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் பிறப்பு, இறப்பு மற்றும் திருமணம் சான்றிதழ்களின் நகல்களை இலங்கை தூதரக பணியகங்களில் மின்னணு முறையில் பெற அனுமதிக்கும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களின் நன்மை கருதி இத்திட்டம் இன்றுமுதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, ICTA நிறுவனம் மற்றும் லங்கா பே (Lanka Pay) ஆகியவை இணைந்து இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதுடன், கொடுப்பனவு முறையின் பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையை உறுதி செய்ய மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க,
தொழிநுட்பம் மற்றும் அறிவியலினால் ஏற்படும் முன்னேற்றங்கள் மக்களின் வாழ்வை இலகுவாக்கும். இதன் மூலம் வினைத்திறனான, தரமான மற்றும் விரயம் குறைந்த சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும்.
தொழிநுட்பத்தின் வெற்றிகளின் காரணமாகவே உலக வரலாற்றில் படிப்படியாக முன்னேற்றம் காணப்படுகிறது. மனித நாகரிகத்தை ஒரு கட்டத்திலிருந்து இன்னொரு நிலைக்கு உயர்த்த விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்பத்தின் புதிய கண்டுபிடிப்புகள் என்பன செயற்பட்டு வருகிறது.
ஜனாதிபதி நிதியத்தின் பணிகள் இதுவரை காலமும் கொழும்பில் இருந்தே செயற்படுகிறது. அதனால் தூர பிரதேசங்களில் உள்ள பிரஜைகள் பல சிரமங்களை எதிர்நோக்க வேண்டியிருக்கிறது. இன்று முதல் பிரதேச செயலக மட்டத்தில் குறித்த முறைமையை செயற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.
நீண்ட காலத்துக்கு முன்னரே இவ்வாறான தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். சரியான நேரத்தில் தீர்மானங்கள் எடுக்கப்படாமையினால் மக்களின் வாழ்க்கையும் நாட்டின் பொருளாதாரமும் பின்னடைந்து காணப்படுவதோடு, இன்றைய தினம் டிஜிட்டல் மயமாக்கல் மூலமாக நகரமும் கிராமமும் ஒன்றிணைந்துள்ளதால், கிராமிய வறுமையை ஒழிப்பதற்கும், பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும் டிஜிட்டல் மயமாக்கல் மிகவும் அவசியமானது.
எமது நாட்டை தற்போதைய நிலையில் இருந்து புதிய நிலைக்கு உயர்த்தும் ஒரே வழி டிஜிட்டல் மயமாக்கல். அதனால் மக்களின் தேவைகளை எந்தவிதமான அழுத்தம் மற்றும் அலைச்சல் இன்றி நிறைவேற்ற முடியும்.
இயந்திரமயமான வாழ்க்கை முறையினால் எமது நாட்டு மக்கள் பண்பாட்டு ரீதியான வாழ்க்கையை இழந்துள்ளளனர். பண்பாட்டு வாழ்வை உருவாக்கிகொள்ள டிஜிட்டல் மயமாக்கல் வசதியாக அமையும். இத்திட்டம் வெற்றியடைய வேண்டும். டிஜிட்டல் அடையாள அட்டை இதன் முக்கிய திருப்புமுனையாக அமையும்.
இந்த மாற்றங்கள் மிக விரைவாக செய்யப்பட வேண்டும் என்றும், வெளிப்படைத்தன்மை, வினைத்திறன், கிராமத்திற்கும் நகரத்திற்கும் இடையிலான இடைவௌியை குறைத்து டிஜிட்டல் மயமாக்கல் என்பன எமது நாட்டை புதிய நிலைக்கு உயர்த்தும் எனவும், அதற்காக அரசாங்கம் என்ற வகையில் நாம் கடுமையாக பாடுபடுகிறோம் எனவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.