சட்டமா அதிபரின் தீர்மானங்களில் அரசியல் தலையீடு ‘சட்டத்தின் ஆட்சிக்கு பாதிப்பு’

0
17
Article Top Ad

குற்றவியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்வது தொடர்பான சட்டமா அதிபரின் விருப்பம் மற்றும் நடைமுறைக்கு எதிராக அமைச்சரவையோ அல்லது அரசியல் அதிகாரிகளோ தலையிடக் கூடாதென,
ஜனாதிபதிக்கு ஆங்கிலத்தில் கடிதம் ஒன்றை அனுப்பி இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடுமையாக வலியுறுத்தியுள்ளது.

குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மூன்று இராணுவ-பொலிஸாரை விடுதலை செய்வதற்கான சட்டமா அதிபரின் தீர்மானம் மீளாய்வு செய்யப்படும் என அரசாங்கப் பேச்சாளர் கடந்த வாரத்தின் நடுப்பகுதியில் அறிவித்திருந்தார்.

“குற்றவியல் விவகாரங்கள் தொடர்பாக சட்டமா அதிபரின் தீர்மானங்களை அமைச்சரவை அமைச்சர்கள் உட்பட அரசியல் அதிகாரிகள் மீளாய்வு செய்யக்கூடாது என்பது இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் வலுவான கருத்தாகும்” என ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மெத்தேகெட மற்றும் செயலாளர் சட்டத்தரணி சதுர கல்ஹேன ஆகியோர் கையொப்பமிட்டு நேற்றைய தினம் (பெப்ரவரி 7) அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற விமர்சனங்கள் சட்டத்தின் ஆட்சிக்கு முக்கியமான சட்டமா அதிபர் திணைக்களத்தின் சுதந்திரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

“அரசியல் தலையீட்டை ஏற்க முடியாது” சட்டத்தரணிகள் சங்கம்

சட்டமா அதிபரின் அதிகாரத்தைப் பிரயோகிப்பதில் தேவையற்ற தலையீடுகள் இல்லை என்பதை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதற்கு அத்தியாவசியமான சட்டமா அதிபர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் சுயாதீனத்தைப் பாதுகாக்க இது உதவும் என சுட்டிக்காட்டியுள்ளது.

லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் 10 வருடங்களுக்கு மேலாக கல்கிசை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்குட்படுத்தப்பட்ட B92/2009 வழக்கில் சந்தேகநபர்களாக குறிப்பிடப்பட்டுள்ள மூவரையும் விடுதலை செய்யுமாறு கடந்த மாதம் 27ஆம் திகதி சட்டமா அதிபர் கடிதம் மூலம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர்களுக்கு அறிவித்திருந்தார். இது தொடர்பான கடிதம் வெளியானதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சரவைப் பேச்சாளர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ, சட்டமா அதிபரின் தீர்மானத்தை மீளாய்வு செய்வதற்கு அரசாங்கம் செயற்பட்டு வருவதாகக் கூறினார்.

“சட்டமா அதிபரின் தீர்மானத்தை அரசாங்கம் ஆய்வு செய்து வருகிறது. எதிர்காலத்தில் அறிக்கை வெளியிட தயார். நாட்டின் ஜனநாயகம் மற்றும் சட்டம் குறித்து மக்கள் காத்திருக்கும் கேள்வி இது.

அக்கருத்தை நிராகரித்த சட்டத்தரணிகள் சங்கம், சட்டமா அதிபரின் தீர்மானங்கள் அல்லது உத்தரவுகளால் ஒரு தரப்பினருக்கு பாதகமான நிலை ஏற்பட்டால், அதற்கு எதிராக மேல் நீதிமன்றில் ரீட் மனுவை தாக்கல் செய்வது அல்லது அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்து உண்மைகளை முன்வைப்பதே அதற்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கை என சுட்டிக்காட்டியுள்ளது. அவ்வாறில்லாமல், சட்டமா அதிபரின் தீர்மானங்களை அரசியல் ரீதியாக மீளாய்வு செய்வதற்கு எவ்வித சட்ட ஏற்பாடுகளும் இல்லை என சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிலையில், சட்டமா அதிபர் பொலிஸாருக்கு வழங்கிய உத்தரவை கண்டித்து கடந்த வியாழக்கிழமை (பெப்ரவரி 6)எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, சட்ட மா அதிபர் அலுவலகத்திற்கு சட்டத்தரணிகளுடன் சென்ற ஊடகவியலாளர்கள், அலுவலக அதிகாரிகளால், நீதிமன்றத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த இளம் ஊடகவியலாளர் சங்கத்தின் தரிந்து ஜயவர்தன, பாதிக்கப்பட்டவர்களுக்கோ அல்லது குடிமக்களுக்கோ பதிலளிக்க வேண்டிய கடமை தமக்கு இல்லை என சட்டமா அதிபர் அலுவலகத்தினால் தமக்கு அறிவிக்கப்பட்டதாக ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டங்களின் பின்னர், கடந்த வெள்ளிக்கிழமை (பெப்ரவரி 7)  ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க, சட்டமா அதிபர் மற்றும் ஏனைய அதிகாரிகளை அழைத்து உண்மைகளை கேட்டறிந்தபோது, விசாரணைகளில் ஏற்பட்ட குறைபாடுகள் காரணமாக, சம்பந்தப்பட்ட சந்தேகநபர்களை விடுவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரிவித்திருந்தனர்.

இதன்போது, சட்டமா அதிபர் திணைக்களம் ஒரு சுயாதீன நிறுவனம் எனவும் அதன் பணிகளில் தலையிடுவது பொருத்தமற்றது எனவும் சட்டமா அதிபர் மற்றும் அதிகாரிகளும் சுட்டிக்காட்டியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த கலந்துரையாடலில் புதிய அரசாங்கத்தின் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன, லசந்த கொலை தொடர்பான விசாரணைகளுக்கு தலைமை தாங்கிய இரகசிய பொலிஸ் பொறுப்பதிகாரி, பிரதி பொலிஸ் மா அதிபர் ஆகியோரும் கலந்துகொண்டனர். விசாரணைகள் தொடர்பாக அவர் தெரிவித்த எந்தவொரு கருத்தையும் அரசாங்கமோ அல்லது சட்டமா அதிபர் அலுவலகமோ பகிரங்கப்படுத்தவில்லை.

குற்றப் புலனாய்வு விசாரணை தோல்வியால் விடுவிக்கப்பட்டனர்

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) மேற்கொண்ட விசாரணையில் உள்ள குறைபாடுகள் காரணமாக சந்தேகநபர்களை விடுதலை செய்ய பரிந்துரைக்கப்பட்டதாக சட்டமா அதிபர் திணைக்களம் சந்திப்பின் பின்னர் தெரிவித்திருந்தது.

“முன்வைக்கப்பட்ட உண்மைகளுக்கு அமைய, மேலும் அந்த அடையாளம் காணுதல் தொடர்பாக எழுப்பப்பட்ட சட்ட குறைபாடுகள் காரணமாக, குற்றவியல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறி அவர்களை விடுவிக்க தீர்மானிக்கப்பட்டது.” என சட்டமா அதிபர் சார்பில், நிர்வாக அதிகாரி, சட்டத்தரணி அஞ்சலோ வென்ஹோப்கே கையொப்பமிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சம்பந்தப்பட்ட சந்தேகநபர்களை விடுதலை செய்ய சட்டமா அதிபரின் தீர்மானத்தை அரசியல் அல்லது வெளி தரப்பினர் கேள்வி எழுப்பியதை கண்டித்து தொடர்ச்சியாக உண்மைகளை தெரிவித்து வரும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், அதனை சட்டத்தின் ஆட்சிக்கு எதிரானதாகவே தமது சங்கம் கருதுவதாக தெரிவித்துள்ளது.

“அரச அதிகாரம் எடுக்கும் தீர்மானங்களின் மீதான விவாதம் ஜனநாயக சமூகத்தின் ஒரு முக்கிய அங்கமாக இருப்பது போலவே, இந்த அதிகாரிகளின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதும் முக்கியம். சட்ட அதிகாரிகள் மற்றும் அரை சட்ட உத்தியோகத்தர்களால் சட்டத்திற்கு உட்பட்டு எடுக்கப்படும் தீர்மானங்கள் பொதுமக்களின் கருத்தை பிரதிபலிக்க வேண்டிய அவசியமில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்” என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதிக்கு நினைவுபடுத்தியுள்ளது.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்ரமதுங்க, சட்டமா அதிபருக்கு எதிராக பதவி நீக்க பிரேரணையை நாடாளுமன்றத்தில் முன்வைக்குமாறு பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அவர் எழுதிய கடிதத்திற்கு நாடாளுமன்றத்தில் பதிலளித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய, நீதியை உறுதிப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாகவும், தேவைப்பட்டால் புதிய விசாரணைகளை ஆரம்பிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

புதிய ஆதாரங்கள் கிடைத்தால் “குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது குறித்து பரிசீலிக்க தடையாக இருக்காது” என சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவிப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டுகிறார்கள்

அண்மைக்காலமாக பொதுமக்களின் கவனத்தை ஈர்த்த குற்றச் செயல்களின் விசாரணை முன்னேற்றம் தொடர்பில் கடந்த இரண்டு மாதங்களாக சட்டமா அதிபர் திணைக்களமும், பொலிஸ் குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் பரஸ்பரம் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருவதுடன், சட்டமா அதிபர் திணைக்களத்தின் திறமையின்மையே வழக்குத் தாக்கல் தாமதமாவதற்குக் காரணம் என ஜனாதிபதி கூட சில சமயங்களில் கூறியிருந்தார்.

குற்றப் புலனாய்வாளர்களும், சட்டமா அதிபர் திணைக்களமும் குற்றவியல் வழக்குகளில் தெளிவான பொறுப்புகளைக் கொண்டுள்ளதாகவும், எனவே குற்றவாளிகள் தப்பிச் செல்ல அனுமதிக்காத பொறுப்பில் இருந்து எந்தவொரு தரப்பினரும் தப்ப முடியாது எனவும், இது தொடர்பாக கேட்டபோது, அவரது அடையாளத்தைக் குறிப்பிட விரும்பாத மூத்த சட்டத்தரணி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.